தலையங்கம்: கோழைகளின் வீராவேசம்!

பெரும்பாலான இந்த ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குப் பங்குள்ளது. எனவே, இன்று தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் நாளை இனப்படுகொலைகளாக, பெண்கள், கிறித்தவர்கள் - இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகள் மீதான வன்முறைகளாக வளரும். தமிழ்நாடு மணிப்பூராக மாறும்!

நெல்லை நாங்குநேரியில் சின்னதுரை என்ற தலித் மாணவனை வீடுபுகுந்து மறவர் சாதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சரமாரியாக வெட்டிப்போட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலித் மக்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே.

ஜூலை 27, ராதாபுரம் முத்தையா ஆணவப் படுகொலை; ஆகஸ்டு 4, சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் முருகானந்தம், பிரதீப் மீது தாக்குதல்; இதே நாளில் சிறீவைகுண்டம் முறுக்கு வியாபாரி செந்தில்நாதன் படுகொலை; ஆகஸ்டு 9, நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மீது கொலைவெறித்தாக்குதல்; ஆகஸ்டு 14, பாளையங்கோட்டை கீழநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜாமணி படுகொலை; ஆகஸ்டு 15, தென்காசி கடையம் ஒன்றியம் துப்பாக்குடி தலித் மக்கள் மீதான கொலைவெறித்தாக்குதல்; ஆகஸ்டு 15, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லசிமிபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற மாணவர் மீது கொலைவெறித்தாக்குதல்; ஆகஸ்டு 23, அம்பாசமுத்திரம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராமசுப்பு மீது கொலைவெறித்தாக்குதல்; இதே மாதத்தில், திருவைகுண்டம் செய்துங்கநல்லூர் அருகே திருவிழாவின்போது தலித் மக்கள்மீது தாக்குதல், மீனாட்சிபட்டி கிராமத்தில் இம்மானுவேல் சேகரன், சுந்தரலிங்கம் படங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்ச; கிருஷ்ணாபுரம் பார்வதிநாதன் மீது கொலைவெறித்தாக்குதல் என தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நாள்தோறும் நடந்தேறியுள்ளன.

மொத்தத்தில், தென் தமிழ்நாடு ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. இத்தாக்குதல்கள் பெரும்பாலும் தலித் மக்களால் ஆதிக்கச் சாதியினருக்கு பொருளாதார ரீதியாக எந்த பாதிப்புகளும் இல்லாத நிலையில் நடைபெறும் தாக்குதல்களாகும்; தங்களது சுயசாதிப் பெருமைக்காவும் அரசியல் ஆதிக்கத்திற்காகவுமே சிறுசிறு கும்பல்களால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.


படிக்க: தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?


பெரும்பாலான சம்பவங்கள் மாணவர்களை மையப்படுத்தி இருக்கின்றன. சின்னதுரை நன்கு படிக்கும் மாணவன் என்பதுதான் அவன் மீதான தாக்குதலுக்குக் காரணம். தலித் மக்கள் மீதான சாதி ஆதிக்கத்தை ஏற்க மறுத்ததன் எதிர்விளைவே இந்த ஆதிக்கச் சாதிவெறித் தாக்குதல்கள். ஆம், இது கோழைகளின் வீராவேசமாகும்!

ஆதிக்கச் சாதி பெருமை பேசும் போதையானது, அந்த வீராவேசத்தை வெளிப்படுத்தும் இரையில்லாமல் அடங்காது. ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் வெறியூட்டும் பேச்சுக்கள், நடவடிக்கைகள் அதன் இலக்குகளான தலித்துக்களை நோக்கி சென்று கொண்டிருப்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

பெரும்பாலான இந்த ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குப் பங்குள்ளது. எனவே, இன்று தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் நாளை இனப்படுகொலைகளாக, பெண்கள், கிறித்தவர்கள் – இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகள் மீதான வன்முறைகளாக வளரும். தமிழ்நாடு மணிப்பூராக மாறும்!

ஆகையால், ஆதிக்கச்சாதிக் கட்சிகள், சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளைத் தடைசெய்ய வலியுறுத்தியும், அனைத்து சாதிக் கூலிப்படையினரைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் சாதிவெறியூட்டும் சமூக ஊடகப் பிரச்சாரங்களைத் தடை செய்யவும் நாம் போராட வேண்டும்.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்
செப்டம்பர் 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க