அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!

பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல்.

0

மாணவி அனிதா நீட் தேர்வை ஒழிக்க உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். ”நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்க என்னிடம் பணம் இல்லை. போதிய வசதி இல்லை. என்னை போன்று பல மாணவர்களின் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற நீட் தேர்வை ஒழியுங்கள்” என்று அனிதா நம்மிடம் கூறிச்சென்றார். அனிதா நம்மைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வினால் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் தடைசெய்ய முடியவில்லை.

நீட் தேர்வின் மூலம், தனியார் மருத்துவ நிறுவனங்களும், நீட் பயிற்சி மையங்களும் வருடா வருடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றோர்களிடமிருந்து கொள்ளையடித்து கொழுத்து வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்று படித்துவரும் அனிதா போன்ற ஏழை மாணவர்கள், உண்மையில் மருத்துவர்களாக மாறுவதென்பது அக்கிராமங்களின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும். மக்களுக்கு சேவையாற்றும் மனம் கொண்ட மக்கள் நல மருத்துவர்களை உருவாக்கும். அனிதா தற்போது மருத்துவராகி இருந்தால் அவரது கிராமத்திற்கு மக்கள் நல மருத்துவராக சென்றிருப்பார். அந்த மக்கள் நல மருத்துவர் என்ற தன்மையை அகற்றி, மருத்துவர்களையும் மருத்துவத் துறையையும் கார்ப்பரேட்மயமாக்குவதை தீவிரப்படுத்தியுள்ளது பாசிச மோடி அரசு திணித்த இந்த கொலைகார நீட் தேர்வு. காசு இருப்பவரே மருத்துவராக முடியும் – மருத்துவரானால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் மக்கள் நல மருத்துவம் என்பதை ஒழித்துக்கட்டி கார்ப்பரேட் நல மருத்துவத்தை மருத்துவத்துறையில் திணித்துள்ளது நீட் தேர்வு.

அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவ படிப்பிற்குள் செல்லும் பிரபஞ்சன்கள் நீட் தேர்வை விற்பனை செய்யும் விளம்பரதாரர்களாக கார்ப்பரேட்டுகளால் முன்னிறுத்தப்படுகிறார்கள். “நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மருத்துவராகலாம், நீ ஒழுங்கா படித்து மருத்துவராக வேண்டியதுதானே” என்று காவி-கார்ப்பரேட் பாசிசக்கூட்டம் கூச்சலிடுகிறது. ஆனால் நீட் தேர்வில் 427 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரனால் மருத்துவராக முடியவில்லையே ஏன்? நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் இலட்சக்கணக்கில் பணம் கட்டினால்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற அநீதியை கொண்டு ஜெகதீஸ்வரனை கொன்றுவிட்டார்கள் மருத்துவ மாஃபியாக்கள்.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல். மருத்துவ கனவு கொண்ட ஏழை மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியும் நீட் கார்ப்பரேட் நலன் கொண்டது என்று. பின்புலம் இருக்கும் பிரபஞ்சன்களால் இதனை புரிந்து கொள்ள முடியாது.

அனிதா மரணித்த செப்டம்பர் 1, 2017 அன்று ஏழை மாணவர்களை நீட் தேர்வு என்ன நிலையில் வைத்திருந்ததோ அதே நிலைதான் தற்போது வரை வைத்திருக்கிறது. நீட்டுக்கு எதிரான குரல்களும் அதே கொதிநிலையில்தான் இருக்கின்றது.

அனிதா முதல் ஜெகதீசன் வரை பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காவு வாங்கியும் தமிழ்நாட்டில் நீடித்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வை நான் ஒருபோதும் தடைசெய்ய மாட்டேன் என்று திமிராக பேசித் திரிகிறார் காவி – கார்ப்பரேட் பாசிச ஆளுநர் ஆர்.என். ரவி. மாணவர் ஜெகதீசன் மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடிய பயாஸ்தீன்களின் அழுத்தத்தின் காரணமாக ஆளும் திமுக கட்சியே உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்கியிருக்கிறது. ஆனாலும் நீட் எனும் கொலைகாரனைத் தடை செய்ய முடியவில்லை. எனவே நீட் தேர்வையும் – அதை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிசக் கும்பலையும் மாபெரும் களப்போராட்டங்களை கட்டியமைக்காமல் தடைசெய்ய முடியாது. நீட்டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று அனிதாவின் நினைவுநாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்!


காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க