காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!

தஞ்சை டெல்டாவைப் பாலையாக்கும் கார்ப்பரேட் கொள்ளையில் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் உடன்படுவதால்தான், காவிரி நீர் பிரச்சினையை வைத்துக் கொண்டு லாவணி பாடுகின்றன. தமிழ்நாட்டிற்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒரே குரலில் செயல்படுகின்றன.

மிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை உரிய காலத்தில் பொழியாததாலும், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர்ப்பங்கை கர்நாடகா தரமறுத்து வருவதாலும் தமிழகத்தின் குடிநீரும், குறுவை சாகுபடியும் கேள்விக்குறியாகி இருக்கின்றன.  மேட்டூர் அணை வறண்டுபோவதற்கான அபாயத்திலும் உள்ளது.

காவிரி நீர் பங்கீட்டில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ அல்லது காவிரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பையோ இதுவரை கர்நாடகா மதித்ததில்லை. காங்கிரசோ, பா.ஜ.காவோ காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்து, தமிழ்நாட்டை காவிரியின் வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கிய பிறகு கூட, தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப்பங்கை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது கர்நாடகா. தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலையில் 31.24 டி.எம்.சி., ஆகஸ்டில் 37.29 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். ஆனால், இந்த மூன்று மாதங்களிலும் தமிழ்நாட்டிற்கு மிகச் சொற்பமான அளவே கர்நாடகா நீரை வழங்கியுள்ளது. அதில் பெருமளவு தமிழ்நாட்டின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழைநீரும் உள்ளடங்கியதாகும்.

ஜூன் மாதத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்குமாறு கர்நாடக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. காவிரி மேலாண்மை ஆணையமோ தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், ஆகஸ்டு மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.


படிக்க: கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!


கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்டு 9-ஆம் தேதி வரை தரவேண்டிய நீரில் 37.971 டி.எம்.சி. நிலுவை உள்ளது. மேலும், ஆகஸ்டு மாதத்தில் நாளொன்றுக்கு 24,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும். ஆனால், ஆகஸ்டு 10-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் ஆகஸ்டு 11-15 தேதிகளில் நாளொன்றுக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் மறுநாள் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 10,000 கன அடி நீர் குறைக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டிற்கு இனி வழங்க வேண்டிய நீரையாவது முறையாக பெற்றுத் தருமாறு கோரியது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்று அலைந்து கொண்டிருக்கிறது. எங்குமே தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு கூட தருவதற்கு கர்நாடகா தயாராக இல்லை என்பதையே அதன் அணுகுமுறைகள் காட்டுகின்றன. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடகாவில் போதுமான நீர் இருப்பு இல்லை என்று தொடர்ந்து பொய்யைக் கூறி தமிழ்நாட்டின் நீர் உரிமையை மறுத்து வாதிட்டு வருகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையமோ, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவோ 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, கர்நாடக அரசு சொல்லும் காரணங்களைக் கேட்டுக்கொண்டு, தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றன.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, கர்நாடக மாநில காங்கிரசு அரசு தமிழ்நாட்டிற்கு அடிபணிந்து சென்றுவிட்டதாகவும், தமிழ்நாட்டிற்கு நீரைத் தரக்கூடாது என்று கூறி கர்நாடக பா.ஜ.க. போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், காவிரிக்கு குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சித்தராமையா அரசை நிர்பந்தித்து வருகிறது. மேலும், இந்தியா கூட்டணியில் இருப்பதால், தி.மு.க.வின் அழுத்தத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அடிபணிந்து செல்வதாக கர்நாடக மக்களிடம் பொய் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில், இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், காவிரிப் பிரச்சினையைக் கொண்டு தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே மோதலைத் தூண்டிவிட பா.ஜ.க. முயன்றுவருகிறது என சித்தராமையா குற்றஞ்சாட்டுகிறார்.


படிக்க: காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?


அண்ணாமலையோ, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி பிரச்சினை தொடங்கியதாகவும், மேக்கேதாட்டுவில் அணைகட்டுவோம் என்று கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதிலிருந்துதான் பிரச்சினை தீவிரமடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  மேலும், “தமிழகத்தில் நீட்டை வைத்து அரசியல் செய்வது போல காவிரிப் பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்றும், மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸையோ, டி.கே. சிவக்குமாரையோ கண்டிக்க ஸ்டாலினுக்கு மனமில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

தற்பொழுது காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் மீது திடீர் பாசாங்குகாட்டும் அண்ணாமலையோ, கர்நாடகம் மேக்கேதாட்டுவில் அணைக்கட்ட ஒன்றிய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது குறித்து வாய் திறக்கவில்லை. காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மோடி அரசையும் கோரவில்லை.

மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீரைத் தடுத்து, கார்ப்பரேட் திட்டங்களால் வளர்ந்து வரும் பெங்களூருவுக்கு கொடுப்பது, மற்றொருபுறம், தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி கார்ப்பரேட் கொள்ளையைத் அரங்கேற்ற காவிரியில் உரிய முறையில் நீரைத் திறந்துவிட மறுப்பது என்ற இரட்டை நோக்கத்தில் இருந்துதான் கர்நாடக காங்கிரசு, பா.ஜ.க. அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

தஞ்சை டெல்டாவைப் பாலையாக்கும் கார்ப்பரேட் கொள்ளையில் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் உடன்படுவதால்தான், காவிரி நீர் பிரச்சினையை வைத்துக் கொண்டு லாவணி பாடுகின்றன. தமிழ்நாட்டிற்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒரே குரலில் செயல்படுகின்றன. ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் போது கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுவது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பது என்பது இவ்விரு கட்சிகளின் தேசிய தலைமைகளின் போக்காக உள்ளது.

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் பா.ஜ.க.வுக்கு அடிமை அ.தி.மு.க., சீமான் போன்ற கட்சிகள் மறைமுகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டே தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. பா.ஜ.க. எதிர்ப்பு என்ற ஒரு அம்சத்தில் மட்டும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணையும் தி.மு.க.வும் காவிரி நீர் பிரச்சினை, நீட் பிரச்சினை போன்றவற்றில் தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் சட்டவாதத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது.

உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது, இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அன்று சொன்னவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்காமல் மௌனமாக இருக்கின்றனர்.  காவிரி நீர் பிரச்சினை என்பது சட்டப்பூர்வமான வழிமுறைகளில் தீர்க்கமுடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறுகின்ற கர்நாடகாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றது உச்சநீதிமன்றம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம். ஆகையால், காவிரி நீருக்கான போராட்டம் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுடனும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டங்களுடனும் இணைக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், காவிரி நீருக்கான போராட்டமும் தஞ்சை டெல்டாவை பாலையாக்கும் சதித்திட்டத்தை முறியடிப்பதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கையில்தான் அடங்கியுள்ளது. இதற்காக மக்களைத் திரட்டிப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்!


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க