2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

மேற்கு ஆப்கானிஸ்தானில் அக்டோபர் 7, சனிக்கிழமையன்று ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை பொதுமக்கள் 2400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஜிந்தஜான் என்ற பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏற்பட்ட எட்டு நில அதிர்வுகளில் அங்கு 20 கிராமங்கள் முற்றிலும்  அழிந்துவிட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு மணிநேரத்திற்கும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடைகளாலும், தலிபான்களின் பிற்போக்கு அராஜக ஆட்சியாலும் துயருற்றுள்ள ஆப்கன் மக்களுக்கு இந்தப் பேரிடர் கொடும் துயரத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

படிக்க : உலகையே உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை

கடந்த 2021-ல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கனுக்கு அளித்துவந்த உதவிகளை ஈவிரக்கமின்றி நிறுத்திக் கொண்டது. குறிப்பாக ஆப்கன் மத்திய வங்கிக்குச் சொந்தமான 7 பில்லியன் டாலர் நிதியை முடக்கியது. இந்த நடவடிக்கைகளானது 20 ஆண்டுகால போரை விட கொடுமையான துயரத்தில் ஆப்கனை சிக்க வைத்தது. மற்ற சர்வதேச சேவை நிறுவனங்களின் உதவிகளும் அமெரிக்காவின் செல்வாக்கின் அடிப்படையில் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. உலக உணவுத் திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நிதி உதவிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பட்டினியால் பல்லாயிரக்கணக்கான குழந்தைள் மடிந்தனர். 50% மக்கள் பட்டினியாலும், 95% ஆப்கானியர்கள் போதிய உணவின்றி வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இயற்கைப் பேரழிவைச் சமாளிக்கும் அளவிற்கு மீட்புக் கருவிகளும் தலிபான் அரசிடம் இல்லை. இது அதிக உயிரிழப்புகளுக்கு வகுக்கும் என சர்வதேச மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக தொடர்ச்சியாக இருந்துவந்த நிலையில், சுயேட்சையான பொருளாதாரத்தை கட்டியமைத்துக் கொள்ளாத நிலையில்தான் ஆப்கான் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இன்று ரசிய, சீன ஏகாதிபத்தியங்கள் தலிபான்களின்  ஆதரவோடு ஆப்கனை ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளன.

படிக்க : ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!

ஆப்கன் சுயேச்சையான பொருளாதாரத்தை கட்டியமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதன் மூலம்தான் சொந்தநாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் மதவாதக் கும்பலான தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெண் குழந்தைகள் கல்வி பயிலத் தடை, வேலைக்குச் செல்லத் தடை, கார் ஓட்டத் தடை, புர்கா அணியாமல், ஆண் துணையில்லாமல் வெளியே வரக்கூடாது என பிற்போக்குத்தனங்களை அமல்படுத்துவதில்தான் தீவிரமாக உள்ளனர். சொல்லப்போனால் பெண்களுக்கு ஆப்கன் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஒரு கொடூரமான பிற்போக்கு அராஜக ஆட்சியைத்தான் நடத்தி வருகின்றனர். மக்கள் நலனைப் பற்றி தலிபான் கும்பலுக்கு எந்த அக்கறையும் இல்லை.

இப்போதைய துயரத்தை கடப்பதற்கு ஆப்கன் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும், உதவியும் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்பது உடனடித் தேவையாக உள்ளது.

இன்னொரு பக்கம் கொடுங்கோலாட்சி நடத்தும் தலிபான் கும்பலுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழ வேண்டிய தேவையும் ஆப்கன் மக்களுக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. அதுதான் ஆப்கன் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க