ழுபது மணிநேர உழைப்புக்குப்பின்
காலையோ மாலையோ என்றறியாமல்
கண்ணயர்ந்தேன் எதோ ஒரு ஞாயிற்றில்!

உலகம் கணினியின் கட்டுப்பாட்டில் இயங்க
அணுகுண்டுகளின் அலையோசை
பற்றிப் படர்ந்து அனைத்து அணுக்களிலும் கேட்டது!

அந்தக் காட்சியை அகோரம் என்பதா?
கோரம் என்பதா?

முலையிழந்த தாயின் மார்பில்
பாலைத் தேடுகிறது பச்சிளம் குழந்தை!

முதுகெலும்பில் கணக்குப் படித்தவர்கள்
இடுப்பெலும்பையும் சேர்த்து கணக்குப் படிக்கிறார்கள்
எழுபது மணிநேர பணி நியமனத்தில்!

உழைத்தே அருகிப்போன பாட்டாளிகளின்
எழும்புகளில் விறகடுக்கிச் சமைக்கிறது
பிணந்திண்ணிக் கழுகுகள்!

ஆற்றுநீர் உபரியாகச் சென்று கலந்த கடலில்
உதிரம் கலக்கிறது இரத்தப் பெருக்கெடுப்பால்!

உதிர்ந்த தாய்ப்பறவையின் இறகுகளில்
கதகதப்பைத் தேடுகிறது கண்சிமிட்டாக் குஞ்சுகள்!

இளஞ்சூட்டின் கதகதப்பில்
அடுப்படியில் இருந்த பூனைகள்
அப்படியே சாம்பலாயிருக்கிறது
அடுத்த நாள் விடியல் அவர்களுக்கானதில்லை என்று தெரியாமல்!

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பெரும் பேதமிராது
இருவரும் வேட்டையாடத் துவங்கியிருந்தனர்!

இரத்தமும் சதையுமான உடல்களை
சேமித்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
இனி தலைமுறையே வாராத
சமூகத்திற்குக் காட்சிப்படுத்த!

கலையிழந்த காட்சியே
இரவும் பகலும் இருக்கிறது
நாம் இயற்கையை செயற்கையாக்கியதால்!

உயிர்கொல்ல சதித்திட்டம் தீட்டத் தேவையில்லை
ஊதித் தள்ளினாலே உயிர் போய் விடுகிறது!

அரசியல் தலைவர்கள் அன்பர்களாகியிருந்தனர்
எஞ்சியிருக்கும் அற்ப மனிதர்களை
அவர்கள் ஆண்டால் என்ன? ஆளாவிட்டால் என்ன?

சந்திரனுக்கும் சூரியனுக்கும்
இடைவெளி தெரியாது
இந்த இருட்டடிக்கப்பட்ட
மனிதர்களின் வாழ்வினுக்கிடையில்!

அப்பாவிற்காக காத்திருந்த குழந்தைகள்
அனாதையாயிருந்தது
அப்பாவின் வருகை கானல் நீரானதால்!

இலவசங்கள் இனிக்காது அரசிடத்தில்
ஏனெனில் இலவசமாகவே
உயிரையும் பறித்துக் கொண்டிருப்பதால்!

சுயநலம் விடுவிக்கப்பட்டிருந்தது
சுற்றியிருப்பவர்களிடம்
அவர்களின் இரத்தமும் சதையும்
காய்ந்து தோய்ந்ததனால்!

பறவைகள் விடியலை நினைவூட்டாது
உயிரிழப்புகளின் அவலக்குரல்
நினைவூட்டுகிறது விடியலை
பாலஸ்தீனம் இஸ்ரேல் காசா என்று!

சோம்பேறிகளே புத்திசாலிகளாவர்!
சுறுசுறுப்பானவர்கள்
எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் அழிக்க
அளவுகோல் ஊன்றும் அற்பமானவராவர்!

விதைகளே முளைக்காத மண்ணுக்கு
மனிதனே உரமாவான்!

பிறப்புகள் பெரும்பாலும் அதிசயமாகும்
சாதிப் பூசல்கள் சருகாகும்!

எல்லைப் பிரச்சனை இராது
எங்கும் மனிதனு(மு)ம்
இல்லை என்பதனால்!

இத்தனைக்கும் பின்பு
விதிவிலக்காய்
கனவிலாவது
அமைதி வேண்டும்!


மா. தமிழ்ச் செல்வன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க