புரட்சிகர புறநிலை:

ஷ்யப் புரட்சி என்பது 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது என்றே சொல்லவேண்டும். இந்த புரட்சியின் மூலம் இரண்டாம் ஜார் நிக்கோலஸ் என்ற கொடுங்கோல் அரசன் பதவி விலகினான். அதைத்தொடர்ந்து, பெரும்பாலான சோவியத்துகளை மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்கள் ஆகியோரின் செல்வாக்கில் இருந்ததால், அவர்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர். மென்ஷிவிக்குகள், சோசலிசப் புரட்சியாளர்கள் போன்ற சில சந்தர்ப்பவாத அமைப்புக்கள் ரஷ்ய உழைக்கும் மக்களை நிராயுதபாணியாக மாற்றி, புரட்சியால் வென்ற அதிகாரத்தை – சோவியத்துகளை – முதலாளித்துவாதிகளுக்கு சரணடைய செய்யும் கொள்கைகளை பின்பற்றி வந்தன.

மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் தங்களது கோழைத்தனம் காரணமாக அரசதிகாரத்தை எடுத்துக்கொள்ள மறுத்தனர். அதனால் அந்த அதிகாரம் தவிர்க்க முடியாமல் பிற்போக்கு சக்திகளுக்குச் சென்றது. மார்ச் புரட்சியின் போது ஜார் அரசனின் ஆட்சி தீர்க்கமாக தோற்கடிக்கப்படவில்லை. இடைக்கால அரசாங்கத்தின் மூடுதிரைக்கு பின்னால், ஆளும் வர்க்கம் தன்னை மீண்டும் ஒருங்கிணைத்துக்கொண்டு புரட்சியை ஒழிக்க காத்துக்கொண்டிருந்தது.  இதன் விளைவாக “ஜூலை நாட்கள்” என்ற ஜூலைப் புரட்சி இருந்தது.

இந்த அரசாங்கம் மக்கள் சித்தத்திற்கு விரோதமாக முதல் உலகப் போரில் ரஷ்யாவை தொடர்ந்து ஈடுபடுத்தியது, அரசியலமைப்புச் சபை கூடும் வரை விவசாயிகளுக்கு நிலத்தை கொடுப்பதில் தாமதப்படுத்தியது. ஆனால் இந்த அரசியலமைப்பு சபை என்பது இடைக்கால அரசாங்கத்தால் நீண்டகாலம் ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஜூலை மாதத்தில், பெட்ரோகிராட் படையாட்கள், மாலுமிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை போர்முனைக்கு அனுப்பும் இந்த இடைக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் கோபமடைந்து, அனைவரும் தலைநகரின் தெருக்களில் திரண்டனர்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1


ஜூலை ஆர்ப்பாட்டத்திற்கான முன்முயற்சி கீழிருந்து – பெட்ரோகிராட்டின் தொழிலாளர்கள் மற்றும் படையாட்களிடமிருந்து – வந்தது. இப்போது இந்த எழுச்சி நடந்தால் பெட்ரோகிராட் ரஷ்யாவின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்று லெனின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி எச்சரிக்கை செய்தது. இதன் பின்னணியில் வரப்போகும் ஆபத்தை போல்ஷிவிக்குகள் சரியாகவே ஊகித்திருந்தனர்.
(ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தான் இங்கே “போல்ஷிவிக் கட்சி” என்று குறிப்பிடப்படுகிறது.)

ஆனால் மக்கள் இந்த எழுச்சியை நடத்துவதில் தீர்மானகரமாக இருந்ததால், இந்த எழுச்சியில் போல்ஷிவிக்குகள் கலந்துகொண்டு அதை ஒழுங்கமைப்பு செய்வது என முடிவெடுத்தனர்.

கசாக்களும் காவல்துறையினரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கூரையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். எழுச்சி நசுக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர் பி.என். பெரெவர்ஸேவ், “லெனின் ஒரு ஜெர்மன் ஏஜென்ட்” என்று பொய் பிரச்சாரம் செய்தார். போல்ஷிவிக்குகளின் பத்திரிகையான “பிரவ்தா”வின் அலுவலகங்கள் அரசாங்கப் படைகளால் அழிக்கப்பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்ட படைப்பிரிவுகள் படுகொலை செய்யப்படுவதற்காக போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டன.

ஆனால் போல்ஷிவிக்குகள், ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான தன்மையைக் கொடுக்கும் வகையில் தங்களது தலைமையை அமைத்துக் கொள்ளவில்லை என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி விளைவு இதைவிட மோசமானதாக இருந்திருக்கும்.

இதற்கு பிறகு போல்ஷிவிக்குகள் எதிர்ப்புரட்சி அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டார்கள். லெனின் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார். ஆனால் சில வாரங்களில் போல்ஷிவிக்கு கட்சி தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ளும் வகையில் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கான காரணம் மிக எளிமையானது; இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகள் அனைத்தும் மக்கள் விரோதமானவையாக இருந்தது. அதை போல்ஷிவிக்குகள் அம்பலப்படுத்தினர்.

ஒரு நெருக்கடி காலத்தின் போது ஒரு அமைப்பு அல்லது நபர் தன்னுடைய உண்மையான பண்பை காட்டுவார்கள் என்பது இயக்கவியல் பூர்வமான உண்மை. அதன்படி, ஜூலை எழுச்சி நசுக்கப்பட்ட பிறகு, இடைக்கால அரசாங்கம் தனது பிற்போக்குத்தன்மையை இன்னும் அப்பட்டமாக காட்டத் தொடங்கியது.

(மார்ச் புரட்சியின் மூலமாக உழைக்கும் மக்கள் சோவியத்துகள் அமைக்கப்பட்டது. சோவியத்துகள் என்பதை தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தங்களது துறை சார்ந்த நிர்வாக அதிகாரங்களை ஒப்படைக்கும் நிறுவன அமைப்பாகும். இந்த சோவியத்து பிரதிநிதிகள், மக்களுக்கு  பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள். இவர்கள் தவறு செய்தால், இவர்களை பதவியில் இருந்து கீழிறங்கும் உரிமை சோவியத் உறுப்பினர்களுக்கு உண்டு. இவைகளே தொழிலாளர்கள், விவசாயிகள் சோவியத்துகள் என்றும் சேனை வீரர்களுக்கான சோவியத்துகள், படையாட்கள் கமிட்டி என்றும் அழைக்கப்படுகிறது.)


படிக்க: நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!


இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகளால் நாட்டின் எல்லா அரங்குகளிலும் முரண்பாடுகள் முற்றியது. போர் முனையில் படையாட்கள் கமிட்டிகள் இராணுவ அதிகாரிகளுடன் மோதின. இந்த இராணுவ அதிகாரிகள் ஜார் ஆட்சியில் பதவிக்கு வந்தவர்கள். அவர்கள் படைவீரர்களை மனிதப்பிறவியாய்க் கூட மதித்து நடத்தவில்லை. விவசாயிகள் தேர்ந்தெடுத்த நிலக்கமிட்டிகள், நிலப்பிரபுத்துவ ஆட்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து விவசாயம் செய்ய முயன்றதற்காக சிறை பிடிக்கப்பட்டன. ஆலைகளில் தொழிலாளர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்கள். முதலாளிகள் ஆலைகளை கதவடைப்புகள் செய்தார்கள். இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினி கிடக்க நேரிட்டது. தங்களது புரட்சிகர செயல்களுக்காக, நாடு கடத்தப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த போது, விரும்பத்தகாத முறையில் நடத்தப்பட்டார்கள். சிலர் மீது வழக்கு தொடரப்பட்டு, 1905-ஆம் ஆண்டில் செய்த புரட்சிகர செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இடைக்கால அரசாங்கத்தின் கொள்கை பயனளிக்காத சீர்திருத்தங்களுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இடையில் ஊசலாடிற்று. இடைக்கால அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும், தீர்மானமின்மையும் பட்டவர்த்தனமாகியது. தொழிலாளர் கமிட்டிகள் வேலை நேரங்களுக்கு பிறகு மட்டுமே கூடலாம் என்றும், போர்முனைகளில் எதிர்க்கட்சிக்காரர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது பத்திரிகைகள் தடைசெய்யப்படுவதும் நடந்தது. செங்காவலர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சிகள் நடந்தன.

ஜெனரல் கர்னீலவ், தான் ரஷ்யாவின் இராணுவ சர்வாதிகாரியாக உருவாகலாம் என்ற எண்ணத்தோடு படைபலம் கொண்டு புரட்சியை நசுக்க முயன்றான். ஆனால் படையாட்களது கமிட்டியால் கைது செய்யப்பட்டான். கர்னீலவ் கலகத்திற்கு பின்னால் முதலாளித்துவத்தின் வலுவான கரம் இருந்தது. சந்தர்ப்பவாத சோஷலிஸ்டுகளின் பங்கும் இருந்தது.

இடைக்கால அரசாங்கத்தில் இருந்தவர்கள், அரசியல் நிர்ணய சபை கூடியதும் சோவியத்துகள் தானாக களைத்துக்கொள்ளவேண்டும் என்று சாடையாய் கூறினர். அப்போது முதலாம் உலகப் போர் நடைபெற்று வந்தது. ஜெர்மனி ரஷ்யாவின் மீது போர் தொடுத்து வந்தது. இராணுவ அதிகாரிகள் படையாட்களது கமிட்டிகளுக்கு ஒத்துழைப்பதைவிட ஜெர்மனியுடனான இராணுவத் தோல்வியே மேல் என்று நினைத்தனர்.

இந்த இடைக்கால அரசாங்கம் புரட்சியின் பலன்களை மக்களுக்கு கிடைக்காமல் செய்து வந்தது. அதனால் அதன் அதிகாரம் பறிக்கப்பட்டு, உழைக்கும் மக்களால் படையாட்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்துகளே நேரடியாக ஆட்சியதிகாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து, “அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்துகளுக்கே” என்று போல்ஷ்விக்குகள் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். இப்படி போல்ஷிவிக்குகள் பிரச்சாரம் செய்தபோது, பெரும்பாலான சோவியத்துகள் அவரது கைகளில் இல்லை. இருப்பினும் ரஷ்ய நாட்டிற்கு எது நல்லதோ அதைச் செய்தார்கள்.

போல்ஷிவிக்குகள் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை மிக எளிமையான முறையில் பிரதிபலித்தார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வேலைத்திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். அதனால் தான் அவர்களால் மக்களை தங்கள் பக்கம் திரட்டிக்கொள்ள முடிந்தது.

மென்ஷ்விக்குகள், சோஷலிஸ்டு புரட்சியாளர்கள் போன்ற சமரசவாதிகளின் கைகளில் இருந்த சில தொழிற்சங்கங்களின் மத்திய கமிட்டிகள், குறிப்பாக தபால், தந்தி, ரயில்வே தொழிலாளர்களது மத்திய கமிட்டிகள், போல்ஷ்விக்குகளை எதிர்த்தன.

புரட்சியை ஒழிக்க நாட்டின் பொருளாதார வாழ்வு சீர்குலைக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கங்களுக்கு தீ வைப்பது, ஆலைகளின் இயந்திரங்களை சீர்குலைப்பது, ரயில் இஞ்சின்களை முடமாக்கியது போன்ற காரியங்களை சீர்குலைவுவாதிகள் செய்தனர்.

இடைக்கால அரசாங்கம், இப்போது உண்மையில் மக்கள் திரளின் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. செப்டம்பர் மாதம் கூட்டப்படவேண்டிய அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்டாமல் இருந்தது. சோவியத்துகளை ”பொறுப்பற்ற நிறுவனங்கள்” என்றும் அவை களைக்கப்படும் என்றும் கூறி வந்தது.

ஆனால் மக்களின் சித்தத்தை பிரதிபலிக்கக் கூடிய உண்மையான பிரதிநிதிகளை கொண்ட சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள நவம்பரில் பெத்ரொகிராதில் சோவியத்துகளின் இரண்டாம் அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்ட போல்ஷிவிக்குகள் அழைப்பு விடுத்தார்கள். இது நவம்பர் புரட்சிக்கான தொடக்கமாக இருந்தது.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க