புரட்சியின் தருணங்கள்:

நாளுக்கு நாள் இடைக்கால அரசாங்கம் அதன் பிற்போக்குதனமான கொள்கையால் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியது. உணவுப்பொருட்கள் பதுக்கல்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டு கொள்ளை லாபத்திற்கு விற்கப்பட்டது. மற்றொருபுறம், மக்கள் உணவிற்காக நீண்ட வரிசையில் தெருக்களில் காத்திருக்கவேண்டிய நிலையிருந்தது. மக்கள் எதைப் பொறுத்துக்கொண்டாலும், நியாயமற்று இந்த யுத்தத்தில் (முதலாம் உலகப் போரில்)  இழுத்துவிடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. படையாட்களிடம் மட்டுமல்ல பொது மக்களிடையிலும் யுத்தத்திற்கு எதிரான மனப்பான்மை தான் இருந்தது. அதனால் தான், “சமாதானம் வேண்டும், நிலம் வேண்டும், ரொட்டி வேண்டும்” என்ற‌ முழக்கம் புரட்சியை ஆக்கிரமித்திருந்தது.

யுத்தத்தை நிறுத்தும்படி சமாதான தூதுக்கான வரையறைகளைக் கொண்ட “நக்காஸ்” என்ற ஆவணத்தை சோவியத்துகள் நேசநாட்டு மாநாட்டிற்கு அனுப்பிவைத்தனர். நேச நாடுகள் என்பது முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை எதிர்த்து ரஷ்யாவுடன் கூட்டணியில் இருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை குறிக்கும். அதை நிராகரித்து, “யுத்தத்தின் நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்போவதில்லை, யுத்தத்தை நடத்துவதற்கான வழிமுறைகள் பற்றி மட்டுமே விவாதிப்போம்” என்று திமிர்தனமாக பதில் அளித்தது நேச நாடுகளின் மாநாடு. ஏகாதிபத்திய நாடுபிடிக்கும் வெறிக்காக, நேச நாடுகளின் போர் இயந்திரத்தில் ரஷ்யா பிணைக்கப்பட்டிருந்தது.

மசிடோனியப் போர்முனையைச் சேர்ந்த ரஷ்ய துருப்புகளிடமிருந்து  வந்திருந்த சோவியத்து பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,  “அங்கே நாங்கள் அவ்வளவாய் பகைவர்களினால் அல்ல, நமது நேச நாடுகளது நட்பினால்தான் அதிகமாய் துன்புறுகிறோம்” என்றார். இந்த கூற்று பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை கொள்கை இருப்பதை தெளிவாக உணர்ந்துகிறது. ஆனால், இதனால் பட்டினி கிடக்கப்போவதும், செத்து மடியப்போவதும் அப்பாவி ரஷ்ய மக்கள்தான்.

நாம் போர் புரிவது எதற்காக? என்பதுதான் ஒவ்வொரு படையாளின் உள்ளக்குமுறலாக இருந்தது. இந்தப் போர்  புரட்சியின் பாதுகாப்பிற்காக என்றால், எந்த விதமான பலவந்தமும்  இல்லாமல்  படையாட்கள் தானே போய் போர் புரிவார்கள். ஆனால், இந்தப் போர் ஜனநாயகத்திற்காக அல்ல, முதலாளித்துவ கொள்ளைக்காகவே   நடத்தப்படுகிறது என்பதை பெரும்பாலான படையாட்கள் புரிந்து வைத்திருந்தனர்.

புரட்சியின் போது தமக்கு கிடைக்கப்போவதாய்  வாக்களிக்கப்பட்ட நிலத்துக்காக காத்திருந்து சலிப்படைந்த விவசாயிகள் கலகம் புரியத் தொடங்கினர். அவர்கள் நிலப்பிரபுக்களின் பண்ணைகளை கைப்பற்றினார்கள்; அவர்களது பண்ணை வீடுகளுக்கு தீ வைத்தார்கள். கிராமப்புறங்களில் எழுச்சி இவ்விதமாய் நடந்திருந்தாலும், ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் போக்கு பெத்ரொகிராத் நகரத்தையே பொருத்திருந்தது.

விவசாயிகளுக்கும் நிலப்பிரபுகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆலையதிபர்களுக்கும், படையாட்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான போராட்டம் முன்னெப்போதையும்விட கடுமையானதாக, இணக்கம் காண முடியாததாக மாறிவிட்டது. மக்கள் பெருந்திரளினரது ஒருமித்த செயலால்தான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தால்தான் புரட்சியை நிறைவேற்ற முடியும் என்பதை வெகுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தது போல்ஷிவிக் கட்சி.

இதையே வேறு வார்த்தைகளில், “ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் யதார்த்த அரசியல் சூழலானது மிகவும் தீர்மானகரமான, செயல் முனைப்பான கொள்கையை வலியுறுத்துகிறது. அந்த கொள்கை ஆயுதம் தாங்கிய எழுச்சியே அன்றி வேறு எதுவாகவும் இருக்கமுடியாது” என்றார் லெனின்.

இந்தப் புறநிலைமையை சரியாக மதிப்பீடு செய்து, போல்ஷிவிக்கு கட்சி ஆயுதமேந்திய எழுச்சிக்கு ஏற்பாடு செய்யும் படியான தீர்மானத்தை அக்டோபர் 23 கட்சிக் கூட்டத்தில் ஏற்றது. ஸினோவியெ, காமெனவ் போன்ற சந்தர்ப்பவாதிகள் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். மீண்டும் அக்டோபர் 29 ஆம் அன்று போல்ஷிவிக்கு கட்சியின் பெத்ரொகிராத் நகரின் கட்சிக் கமிட்டி, இராணுவ கமிட்டி, பெத்ரொகிராத் சோவியத்து, ஆலைக் கமிட்டிகள் போன்றோரின் விரிவாக்கப்பட்ட கூட்டத்திலும் இந்த தீர்மானம் லெனினால் படித்துக்காட்டப்பட்டு ஏற்கப்பட்டது. காமனெவ், ஸினோவியெவ் பெத்ரொகிராதில் எழுச்சி குறித்த அக்டோபர் 23 மத்திய கமிட்டியின் கூட்டத்தில் எழுச்சியை எதிர்த்து வாக்களித்தார்கள். மேலும், மத்திய கமிட்டியால் தீர்மானம் நிரைவேற்றப்பட்ட பிறகும் தமது கருத்துக்களை கட்சிக்குள் பிரச்சாரம் செய்தனர். இது கட்சி அமைப்புமுறையை மீறிய செயலாகும்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1


புறநிலை பற்றிய சரியான மதிப்பீட்டையும், செயலுக்கான சரியான வேலைத்திட்டத்தையும் வகுப்பதில் மட்டுமல்ல, புரட்சியை தொடங்குவதற்காக நேரத்தை கணக்கிடுவதில் கூட போல்ஷிவிக் கட்சி மற்றும் லெனினின் மேதைமையைப் பார்க்கிறோம்.

“நவம்பர் 6-ஆம் நாள் மட்டுமீறி காலத்துக்கு முன்னதான நாளாகும். எழுச்சிக்கு நமக்கு அனைத்து ரஷ்ய அடிப்படை இருப்பது அவசியமாகும். நவம்பர் 6-இல் காங்கிரஸின் எல்லாப் பிரதிநிதிகளும் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், மறுபுறத்தில் நவம்பர் 8-ஆம் நாள் மட்டுமீறி காலங்கடந்தாகிவிடும். அதற்குள் காங்கிரஸ் ஒழுங்கமைப்பு பெற்றுக்கொண்டுவிடும். ஒழுங்கமைப்பு பெற்ற ஒரு பெரும் கூட்டத்தார் சீக்கிரமாகவும், தீர்மானகரமாகவும் செயல்படுவது கடினம். காங்கிரஸ் ஆரம்பமாகும் நவம்பர் 7-ஆம் நாளன்றே நாம் செயலை மேற்கொண்டுவிட வேண்டும். அப்போதுதான் நாம், “இதோ இருக்கிறது ஆட்சியதிகாரம்! என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று அதனிடம் சொல்லலாம்” என்றார் லெனின்.

பரந்து விரிந்த ரஷ்ய நாட்டின் வர்க்கப் பிரிவுகள், அவற்றின் பாலபலன்கள், சமூக நிலைமைகள், பிற சமூக இயக்கங்கள், அவற்றின் மக்கள் திரள் அடிப்படை மற்றும் செயல்திறன், அவற்றின் வர்க்க சார்பு, ரஷ்யாவின் அரசதிகார அமைப்பின் தன்மை என இவையனைத்தின் மீதும் துல்லியமான மதிப்பீடுகளும் கருத்துக்களும் கொண்ட ஒரு கட்சியால் தான் இத்தனை தெளிவான ஒரு செயல்திட்டத்தை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸிய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட போல்ஷிவிக் கட்சியால் மட்டுமே இதை சாதிக்க முடிந்தது.

புரட்சி என்பது எதிர்கருத்து கொண்டிருப்பவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்துவது என்ற பொய்யை முதலாளித்துவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருகிறார்கள். ஆனால், உண்மையில் மேலே குறிப்பிட்டவாறு, ஒரு பரந்த நிலப்பரப்புள்ள நாட்டின் மொத்த யதார்த்த புறநிலையையும் கணக்கில் கொண்டு செயல்திட்டம் வகுத்து, அதை ஒழுங்கமைந்த முறையில் செயல்படுத்ததுதான் புரட்சி என்பதை போல்ஷிவிக்குகள் உலகிற்கு காட்டினார்கள்.

“திடுமென ஒருநாள் காலையில் போல்ஷிவிக்குகள் தெருக்களில் தோன்றி வெள்ளைக் காலர் உடுத்தியவர்களை சுட்டு வீழ்த்தப்போகிறார்கள் என்று எல்லோரும் நினைத்திருந்த ஒரு நேரத்தில், மெய்யான எழுச்சியானது முற்றிலும் இயற்கையான முறையில் ஒளிவுமறைவின்றி பகிரங்கமாய் ஆரம்பிக்கலாற்று” என்று எழுதுகிறார், ஜான் ரீட். இந்த ஒரு வாக்கியம் போதும் புரட்சி என்பது இரத்த வெறிபிடித்த ஒன்று முதலாளித்துவாதிகள் கட்டமைத்து வைத்திருக்கும் பொய்யை அம்பலமாக்க.

புரட்சியை நசுக்க இடைக்கால அரசாங்கத்தின் போர்வையில் ஒளிந்திருந்த முதலாளித்துவ வர்க்கம், பல்வேறு சதிச்செயல்களை புரிந்தது. பெத்ரோகிராத் நகர காவல்ப்படைதான் மார்ச் புரட்சி நாட்களின் போது தீர்மானகரமான திருப்பத்தை உண்டாக்கி, படையாட்களது சோவியத்துகளை நிறுவியது. எழுச்சி பெத்ரோகிராத் நகர காவல்ப் படையின் செயல்பாடுகளை பொறுத்துதான் இருக்கும் என்பதால், அவற்றை நகரை விட்டு வெளியெற்றவும், தலைநகரை பெத்ரொகிராதில் இருந்து மாற்றவும் திட்டமிடப்பட்டது இடைக்கால அரசாங்கம். இது புரட்சியை நேசிப்பவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

”வானுயர உயர்ந்துவிட்டார்கள் இந்தப் போல்ஷிவிக்குகள்! நான்குமாதங்களுக்கு முன்பு விலக்கி ஒதுக்கப்பட்டு வேட்டையாட்ப்பட்ட சிறு குழுவாய் இருந்தவர்கள், எழுச்சியின் உச்ச அலையால் உயர்த்தப்பட்டு இந்த உன்னத நிலைக்கு மாபெரும் ரஷ்யாவின் தலைமை நிலைக்கு அல்லவா உயர்ந்துவிட்டார்கள்!” என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு போல்ஷிவிக் கட்சியின் புரட்சிப்பணி இருந்தது.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2


மக்கள் திரளின் இந்த கொந்தளிப்பு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் போல்ஷிவிக்குகளால் புரட்சியாக மாற்றப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் படையாட்களின் சோவியத்துகள் இதில் முன்னணியில் இருந்தன. நாடு முழுவதும் உள்ள விவசாய சோவியத்துகளின் பிரதிநிதிகளை பெத்ரொகிராத் நகருக்கு அழைத்து காங்கிரஸை நடத்த இன்னும் நாட்கள் பிடித்தது.

விவசாயிகள் ஆதரவு மிக அவசியமான ஒன்று. விவசாயிகள் காங்கிரஸை உடனே கூட்டுமாறு முடிவுசெய்யப்பட்டது. காங்கிரஸை நடத்துவதற்கு ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

விவசாயிகள் அரசியல் நிலையில் பிற்பட்டவர்களாக இருந்தார்கள். 1917 புரட்சியின் போது ரஷ்யாவின் 80 சதவிகித மக்கள்தொகையினராக இருந்தார்கள். விவசாயிகளின் காங்கிரஸை கூட்ட புரட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை விவசாயிகளது நடப்பு செயற் கமிட்டி தடுத்து நிறுத்த முயன்றது. ஆனால் நவம்பர் மாத இறுதி நாட்களில் விவசாய சோவியத்துகளின் பிரதிநிதிகள் பெத்ரொகிராதுக்கு வந்து சேர்ந்தார்கள்.

விவசாயிகள் சோவியத்துகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது “உழுபவனுக்கே நிலம்” என்பதுதான். லெனின் இதுபற்றி குறிப்பிடுகையில், “இத்தருணத்தில் நாம் தீர்வு காண முயல்வது நிலப்பிரச்சினை மட்டுமல்ல, சமுதாய புரட்சி பிரச்சினைக்கும் தீர்வு காண முயல்கிறோம். நிலப்பிரபுக்களுடைய பண்ணைகள் பறிமுதல் செய்யப்படுகையில், அது ரஷ்ய நிலப்பிரபுக்களுடைய எதிர்ப்பை மட்டுமல்லாமல், வெளிநாட்டு மூலதனத்தின் எதிர்ப்பையும் மூளச்செய்யும். பெரிய நிலவுடைமைகள் வங்கிகள் மூலமாக வெளிநாட்டு மூலதனத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன…போல்ஷிவிக்குகளாகிய நாங்கள் எமது நிலத்துறை வேலைத்திட்டதை மாற்றிக்கொண்டுவிடவில்லை. நிலத்தில் தனியார் உடைமையை ஒழிக்க வேண்டுமென்ற எமது திட்டத்தை நாங்கள் கைவிட்டிவிடவில்லை” என்றார்.

உழுபவர்களுக்கு நிலம் பகிர்ந்து தரப்படவேண்டும். ஆனால், பண்ணை நிலங்களை விவசாய மக்கள் திரளினர் பலவந்தமாக கைப்பற்றிக்கொள்வது அராஜகமே ஆகும் என்று இடதுசாரி சோஷலிஸ்டு புரட்சியாளர் கட்சியின் பிரதிநிதி வாதிட்டார். ஆனால், போல்ஷிவிக்குகள் மக்கள் கோரிக்கைகளை மக்கள் சித்தப்படியே நடத்திட வழிவிட்டார்கள். நிலவுடைமை என்பது புரட்சிகர மக்களின் அதிகாரத்தால் பறிமுதல் செய்யப்பட்டு,  விவசாயிகளுக்கு தரப்பட்டது.

போர்முனைகளில் எல்லாம் நல்லபடியாக நடந்துவிடவில்லை. பயற்சி பெறாத செங்காவலர்கள் இருந்த படைகளுக்கு பயற்சி அளிக்க அதிகாரிகள் இல்லாத நிலை இருந்தது. யார் படைத்தலைவராக இருப்பது என்ற குழப்பம் சில ரெஜிமெண்டுகளிடம் இருந்தது. அவை பல நாட்கள் செயல்படாமல் இருந்தன.  ஆனால் இது போன்ற நிலையை சமாளிக்கும் அளவு கட்சிக்கு ஆற்றல் இருந்தது. போல்ஷிவிக் கட்சியின் பரந்த வலைப்பின்னலும், நிறுவன ஒழுங்கமைப்பும், சித்தாந்தப் புரிதல் கொண்ட செயல்திறனும் இந்த நிலமையை வெகு விரைவில் மாற்றியமைக்க முடிந்தது. வெகுமக்களை ஒழுங்கமைப்பு செய்யும் புரட்சிகர கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை ரஷ்ய புரட்சி நிரூபித்துக் காட்டியது.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க