புரட்சியை தக்கவைத்தல் :

புரட்சியை வெற்றி பெறச் செய்வதைவிட அதை தக்கவைப்பது மிகக் கடினமான ஒன்று என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்தது. புரட்சி வெற்றி பெற்றாலும், அதை தக்கவைத்துக் கொள்வதும், ஆட்சியதிகாரத்தை நடத்துவதும் போல்ஷிவிக்குகளுக்கு சவாலாக இருந்தது. ஏனெனில், நகராட்சி அலுவலர்கள் போன்ற அரசு இயந்திரத்தின் பணியாளர்கள், போல்ஷிவிக்கு அரசாங்கத்தின் மக்கள் கமிசார்களின் ஆணையை செயல்படுத்த மறுத்தார்கள். இந்த பணியாளர்கள் போல்ஷிவிக்கு அரசாங்கத்தின் செயல் மையமாக இருக்கும் ஸ்மோல்னிக்கு தபால், தந்தி போன்ற தகவல் தொடர்புகள் கிடைக்காமல் செய்தார்கள்.

(ஸ்மோல்னி என்பது 18 ஆம் நூற்றாண்டில் பெத்ரொகிராத் நகரில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் பெயர். இது முதலில் உயர்குல மங்கையர்கள் கல்வி பயிலும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம் நவம்பர் புரட்சியின் போதும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் போல்ஷிவிக்குகளின் கூட்டங்கள் கூடுவதற்கும், நிர்வாக செயல்களுக்கும் மையமாக இருந்தது.)

ரயில்வே அமைப்பு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிந்து நடக்க மறுத்தது.

அரசு வங்கி ஊழியர்கள் போல்ஷிவிக் அரசாங்கத்தின் கமிசார்களுக்கு கீழ் வேலை செய்ய மறுத்தார்கள். தனியார் வங்கிகள் மூடப்பட்டன. தொலைப்பேசி இணைப்பகத்தின் பணியாளர்கள் தொலைப்பேசி இணைப்பை வழங்க மறுத்தார்கள். அயல்துறை அமைச்சக பணியாளர்கள் “போர் நிறுத்தத்திற்கான” சமாதான அரசாணையை பிற மொழிகளில் மொழி பெயர்க்க மறுத்தார்கள். உணவுப்பொருள் வழங்கீட்டுத் துறையின் பணியாளர்கள் வேலை செய்ய மறுத்தார்கள். அரசு வங்கி இடைக்கால அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு மட்டும் பணத்தை கொடுத்தது. பிற்போக்குவாதிகள் அரசு வங்கியை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தார்கள்.

எதிர்புரட்சி சக்தியான கேரென்ஸ்கி பெத்ரொகிராத் நகரை நோக்கி படையை திரட்டி வந்துகொண்டிருக்கிறார்.

(இந்த கேரென்ஸ்கி என்பவர் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். சோவியத்துகளை களைத்து முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சியை நிறுவுவதற்காக முழுமூச்சுடன் செயல்பட்டார்.)

ஆக மொத்தத்தில் புரட்சிக்கு பகையாய் இருந்தது நிறுவன ஒழுங்கமைப்பு பெற்ற முதலாளித்துவம் மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஏனைய எல்லா சந்தர்ப்பவாத சோஷலிஸ்டு கட்சிகளும் புரட்சிக்கு பகையாய் இருந்தன.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி புரட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக தூக்கம் துறந்து போல்ஷிவிக் கட்சியினர் உழைத்தார்கள்.

போல்ஷிவிக்குகளிலும் ஊசலாட்டக்காரர்கள் இருந்தார்கள். இவர்கள் நிலைமை தீவிரமாகும் போதெல்லாம், நெஞ்சுரத்தோடு போராடுவதற்கு பதிலாக, “விட்டுக்கொடுக்க” நினைத்தார்கள். மற்ற கட்சியினர் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டு, தனிமைப்பட்டுவிடுவோம் என்று நினைத்து போல்ஷிக்குகளில் கணிசமானவர்கள் கூட சமரசவாதிகளின் வாதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் கூட்டரசாங்கம் அமைக்கலாம் என்ற அளவுக்கு விட்டுக்கொடுக்க முன்வாந்தார்கள். ஆனால் லெனின் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. லெனின் சொன்னார், “சமரசவாதிகள் நமது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளட்டும். அவர்கள் அரசாங்கத்தில் இடம் பெறுவார்கள். நாம் ஓர் அக்குலங்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் துணியும் அளவிற்கு துணிய நெஞ்சழுத்தமும் திடச் சித்தமும் இல்லாத தோழர்கள் இங்கு இருப்பார்களாயின் ஏனைய கோழைகளோடும் இணக்கவாதிகளோடும் சேர்ந்து அவர்களும் போய்ச் சேரட்டும்! தொழிலாளர்கள், படையாட்களது ஆதரவோடு நாம் தொடர்ந்து முன்செல்வோம்.”


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2


பழைய இடைக்கால அரசாங்கம், அதாவது போல்ஷிவிக்கு நவம்பர் புரட்சியால் கீழிறக்கப்பட்ட அதிகாரத்துவ கோஷ்டி, சோவியத்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய மென்ஷ்விக்கு கட்சி, சோஷலிஸ்டு புரட்சியாளர் கட்சி, நரோத்னிய சோஷலிஸ்டு கட்சி போன்ற அமைப்புகள் சேர்ந்து எதிர்ப்புரட்சி அணியை ”இரட்சணிய கமிட்டி” என்ற பெயரில் அமைத்துக்கொண்டனர். ஆனால் இவர்களது கூட்ட அரங்குகளில் ஒரு பாட்டாளியைக்கூட காணமுடியவில்லை என்ற உண்மையில் இருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களது நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இப்படி பல சந்தர்பவாதிகளும், எதிர்ப்புரட்சி சக்திகளும் கூட்டிணைந்து நிறுவனமயமான செயல் மூலமாக புரட்சியை நசுக்க முயன்று கொண்டிருந்த நாட்களில், தொழிலாளர் வர்க்க சோஷலிசமா அல்லது முதலாளித்துவ எதிர்ப்புரட்சியா என்ற நிலையில் வர்க்கப் போராட்டம் அதன் உச்சத்தில் இருந்தபோது, சிலர் தொழிலாளர் படையாட்களின் சோவியத்துகளை “நடுநிலை வகிக்கும்படி” வேண்டிக் கொண்டார்கள். இதனை போல்ஷிவிக்கு தோழர்கள் தங்களது கடுமையான சித்தாந்த ரீதியான எதிர்ப்பின் மூலம் முறியடித்தார்கள்.

“நடுநிலை வகிக்கும்படி உங்களிடம் சொல்கிறார்கள். யூன்கெர்களும், சாவுப் பட்டாளங்களும் (இவை எதிர்ப்புரட்சி இடைக்கால அரசாங்கத்திற்காக சண்டையிட்டது) ஒருபோதும் நடுநிலை வகிப்பதில்லை. இவர்கள் வீதியிலே நம்மை சுட்டு வீழ்த்துகிறார்கள். இவர்கள் கேரென்ஸ்கியை அல்லது இந்த கும்பலைச் சேர்ந்த சேர்ந்தவர்களை பெத்ரொகிராதுக்கு திருப்பிக் கொண்டுவர எத்தனிக்கிறார்கள். இப்போது உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்தும்படி உங்களுக்கு அறைகூவும் இந்த மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்டு புரட்சியாளர்களும் உள்நாட்டு யுத்தத்தின் மூலமல்லாது வேறு எந்த வழியில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தார்கள்?” என்றார் தோழர்.குரிலேன்கோ.

இப்படி “சரணடைவது” என்ற சித்தாந்த பிரச்சாரமும், போல்ஷிவிக்குகளுக்கு விரோதமான பிரச்சாரங்களும், வதந்திகளும் முழு மூச்சில் பரப்பப்பட்டு வந்தது. இதையும் தாண்டிதான் அவர்கள் புரட்சிகர பணியை ஆற்றினார்கள். இவற்றையெல்லாம் தோழர்.குரிலேன்கோ போன்ற அர்ப்பணிப்பு மிக்க கட்சித் தோழர்கள், உணர்வுப்பூர்வமான முறையில் வர்க்க அரசியலையும் புரட்சியின் யதார்த்த நிலையையும் எளிய பாட்டாளிகளுக்கு படையாட்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை போல்ஷிவிக்குகள் புரட்சியின் பக்கம் வென்றெடுத்தார்கள். இதுபோல், பல தோழர்கள், தூக்கமில்லாமல், படைப்பிரிவுகளின் விவகாரங்களை உன்னிப்பாய் கவனித்து வருவதையும், ஒவ்வொரு ஆலைகளுக்கும், படைப்பிரிவுகளுக்கும் விரைந்து ஓடி வாதாடுவதையும், அபாயங்களைச் சுட்டிக்காட்டுவதையும், உடன்பாடு காண்பதையும் கடுமையான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் செய்தார்கள்.

கேரென்ஸ்கி போன்ற எதிர்ப்புரட்சி கும்பலால் பாட்டாளி வர்க்க அரசின் மையமாக விளங்கும் பெத்ரொகிராதுக்கு ஆபத்து என்றதும், அந்த நகரத்தின் அனைத்து தரப்பு எளிய மக்களும் அவர்களது புரட்சிகர அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தன்னியல்பான முறையில் திரண்டெழுந்தார்கள். கிடைக்கக்கூடிய எல்லா ஆயுதங்களையும் அவை சிறு முட்கம்பிகளாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு, இந்த புரட்சியை பாதுகாக்க புறப்பட்டார்கள்.

”இந்த ரஷ்யர்களை என்னவென்பது! மிகவும் அலாதியானவர்கள்! எப்படிப்பட்ட உள்நாட்டுப் போர் இது, பாருங்களேன்! போர் புரிவதைத் தவிர மற்றவை யாவற்றையும் செய்து கொண்டியிருக்கிறார்கள்.” – பிரெஞ்சுப் படையதிகாரி ஒருவர் ஆச்சரியமாக சொன்னார்.

நேசநாட்டு தூதரகங்களது அதிகாரப்பூர்வமான நிலை எப்படிப்பட்டதாக இருந்திருப்பினும், தனிப்பட்ட பிரெஞ்சு, பிரிட்டிஷ் படையதிகாரிகள் இந்த நாட்களின் போது முன்னின்று செயப்பட்வே செய்தார்கள். எதிர்புரட்சி இரட்சணிய கமிட்டியின் செயற்குழு அமர்வுகளில் வல்லுநர்களாய் ஆலோசனை அளித்திடும் அளவுக்குங்கூட சென்றனர்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 3


ரயில்வேத் தொழிலாளர்களது தொழிற்சங்கத்தின் அனைத்து ரஷ்ய செயற்கமிட்டியான “விக்ழேல்” நவம்பர் புரட்சிக்கு பிற்பாடு சோவியத்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பிரதான மையமாக இருந்தது. “விக்ழேல்”ல் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் ரயில்வே தொழிலாளர்கள் அனைவரின் சித்தத்தை பிரதிபலிக்கவில்லை. ரயில்வே தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தி தமது தலைவர்களது புரட்சிக்கு ஆதரவளிக்காமல் இருக்கும் போக்கை கண்டித்தார்கள்.

புரட்சியின் உக்கிரம் அதிகமாக கூட்டுறவு நிறுவனங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள் செயற்கமிட்டி போன்ற அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் ஒவ்வொன்றாக பிளவுபட்டுக் கொண்டிருந்தது. இதுபோன்ற அத்தனை அமைப்புகளும், புரட்சிக்கு ஆதரவாக என்றும், பழைய அமைப்புக்கு ஆதரவாக என்றும் தீர்மானகரமான பிளவுகளை சந்தித்தது.

போல்ஷிவிக்குகளிடம் அறிவுத்துறையினர் யாரும் இல்லை. ரஷ்யா ஒரு நகரத்தைப் போன்றதல்ல. அது மிகப்பெரிய நாடு. அவர்களால் ஒரு சில நாட்களுக்கு மேல் நீடிக்கமுடியாது என்று சிலர் ஏளனம் செய்தனர். ஆனால் போல்ஷிவிக் கட்சி தொழிலாளர்கள், படையாட்கள் போன்ற அடித்தட்டு மக்களிடம் வெகுவான அடித்தளத்தை கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு படையதிகாரிகள் இல்லாமல், கட்டுப்பாடில்லாத ஒழுங்கமைப்பற்ற இந்த படையாட்கள் திரள், தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைமையின் கீழ் செயல்படும் சேனையாக உருமாறி வேலைகளை செய்ய வைக்கும் அளவிற்கு போல்ஷிவிக் கட்சியின் வலைப்பின்னல் இருந்தது.

மிதவாத அறிவுத்துறையினர் பெருமளவில் நடுநிலை வகித்தபோதும், குட்டி முதலாளித்துவ பணியாளர்கள் புரட்சிக்கு எதிரான இருந்தபோதும், போல்ஷிவிக் கட்சிக்கு உண்டான பரந்த மக்கள் அடித்தளமும், நிறுவன ஒழுங்கமைப்பும் இந்த குறைபாடுகளை கடந்த புரட்சியை சாதிக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் உறுதுணையாக இருந்தது.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க