அரசதிகாரம் மேற்கொள்ளல்:

ரு அரசு என்பது வெறும் ஆணைகளை வெளியிடும் அதிகாரத்தை மட்டுமல்ல, அதை நடைமுறையில் நிறைவேற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கவேண்டும். போல்ஷிவிக் ஆட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில், பழைய இடைக்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்த, புரட்சியை வெறுத்த அரசு அலுவலக பணியாளர்கள் பல சிக்கல்களை உண்டாக்கினார்கள்.

இப்படிப்பட்ட குழுக்கப்பங்களுக்கு மத்தியிலும், எதிர்புரட்சியின் சதிச்செயல்களுக்கும் மத்தியிலும் சோவியத்து அரசாங்கம் வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் (உணவு, மருந்து வழங்கல்), அரசியல் மாற்றங்கள் (மக்கள் நீதிமன்றங்கள்) பற்றியும், சமூக மாற்றங்கள் (நிலத்தை பரிமுதல் செய்து மக்களுக்கு ஒப்படைப்பது, தொழிற்சாலைகள் மீது தொழிலாளர்கள் கண்காணிப்பை நிறுவுவது) போன்ற செயல்களுக்கான அரசாணைகளையும் நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வந்தது.

ஆட்சியதிகாரப் பிரச்சினைகள் முடிந்ததும், நடைமுறை நிர்வாகப் பிரச்சினை காத்திருந்தது. எதிரிகளிடமிருந்து படைகலன்கள் பறிக்கப்பட்டுவிட்டாலும் கூட நாட்டின் பொருளாதார வாழ்வில் அவர்கள் தீர்மானகரமான பிடியை வைத்திருந்தார்கள். அவர்களால் இயன்ற அளவில் சீர்குலைவு வேலைகளைச் செய்தார்கள். அரசாங்க நிறுவனங்களை போல்ஷிவிக்குகள் கையில் எடுத்துக்கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முற்படும் ஒவ்வொரு முறையும் அரசாங்க ஊழியர்களின் ஒழுங்கமைப்பட்ட வேலை நிறுத்தத்தால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் மக்களுக்காக அடிப்படை தேவைகள் கிடைப்பதிலும், புரட்சியின் மையமான‌ கடமைகளை நிறைவேற்றுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 3


மக்களுக்கான பொது நலத்துறை, விவசாய அமைச்சகம், உணவு வழங்கல் துறை, நிதி அமைச்சகம் போன்றவற்றில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதும், நிதிப் பெட்டியின் சாவியை ஒப்படைக்காமல் இருப்பதும் தொடர்ந்தது. அவர்களிடமிருந்து சாவியை கைப்பற்றி பெட்டியை திறந்தால் முன்னாள் அமைச்சர்கள் ஏற்கனவே நிதிகளை எடுத்துச் சென்றுவிட்டிருந்தனர். தனியார் வங்கிகள் ஊக வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டது.

மது விற்பனை ரகசியமாக நடத்தப்பட்டு சீர்குலைவுவேலைகள் செய்யப்பட்டது.

சேனைகளுக்கும், மக்களுக்கும் கிடைக்கவேண்டிய பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது. இதனை தடுக்கும் படியும் பறிமுதல் செய்யும் படியும் வந்த வேண்டுகோளை ஏற்று பெருந்திரளான தொழிலாளர்களும் படையாட்களும் செயலில் இறங்கினர். ரஷ்யா எங்கும் தேடி பதுக்கல்களை பறிமுதல் செய்து விநியோகம் செய்தனர். மதுக்கிடங்குகள் சூறையாடப்பட்டு மது விற்பனை ஒழிக்கப்பட்டது.

விஷப் பிரச்சாரங்கள் செய்யும் முதலாளித்துவ பத்திரிகைகள் மீதான தடையை அகற்றச் சொல்லி போல்ஷிவிக்கு கட்சியில் உள்ள சிலரே கூச்சலிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கட்சியின் தலைமை சரியான பதிலடி கொடுத்தது. ”முதலாளித்துவ பத்திரிகைகளை முடூவது எழுச்சியின் போது நடந்த முற்றிலும் இராணுவ ரீதியான காரணங்களால் மட்டுமல்ல. இந்த புதிய ஆட்சிமுறை பத்திரிகைகள் பற்றி கொண்டுள்ள அணுகுமுறைக்கும் இதில் பங்கிருக்கிறது. முதலாளித்துவ பத்திரிகை சுதந்திரம் பற்றிய பிரச்சினையில் கம்யூனிஸ்டுகளுக்கு தொழில் நடத்துவதற்கு உரிய சுதந்திரம் பற்றிய அதே பார்வைதான் இருக்கமுடியும். எப்படி தொழிற்துறையிலும், நிதித்துறையிலும் தனியார் சொத்துகள் ஒழிக்கப்படுகிறதோ அதேபோல் பத்திரிகைத்துறையிலும் தனியார் சொத்துகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும். ஜாரின் ஒடுக்குமுறை ஆட்சியை வீழ்த்தியபோது முடியரசுவாத பத்திரிகைகள் மூடப்பட்டது போலவே முதலாளித்துவம் வீழ்த்தப்பட்ட போது முதலாளித்துவ பத்திரிகைகள் மூடப்படும்” என்று போல்ஷிவிக் அரசாங்கம் அதன் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தது.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 4


காமனெவ், ரீக்கவ், ஸினோவியெவ் போன்ற ஓடுகாலிகள் மத்திய கமிட்டியில் இருந்து விலகி ஓடினார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “ சோவியத்துகளில் உள்ள எல்லாக்கட்சிகளுடனும் சேர்ந்த ஒரு அரசாங்கம் அமைக்கவேண்டும். அப்போதுதான் போரை தவிர்க்க முடியும், பஞ்சம் வராமல் இருக்கும்” என்பது தான். ஆனால் லெனின் இதுபற்றி தெளிவாகவே குறிப்பிடுகிறார். “அரசாங்கத்தில் இடதுசாரி சோஷலிஸ்டு புரட்சியாளர்களை சேர்த்துக்கொள்ள எந்த நேரமும் தயாராக இருக்கிறோம். ஆனால், சோவியத்துகளின் இரண்டாவது அனைத்து ரஷ்ய காங்கிரஸ் போல்ஷிவிக்குகளுக்குதான் பெரும்பான்மை அளித்து ஆட்சியதிகாரத்தை கொடுத்திருக்கிறது. அதனால், அரசாங்கத்தை அமைக்கும் உரிமை போல்ஷிவிக்குகளுக்குதான் உண்டு”. போல்ஷிவிக்குகள் அரசாங்கத்தில் பெரும்பான்மை வகிக்க வேண்டும் என்பது பதவி ஆசையால் அல்ல. மாறாக, அனைத்து ரஷ்ய சோவியத்துகளின் காங்கிரஸ் அவர்களது கொள்கைகளை அங்கீகரித்து அவர்களுக்கு அதில் பெரும்பான்மை வழங்கியிருந்தது என்பதுதான் காரணம். இந்த கொள்கையை, அதன் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத மற்ற கட்சிகளிடம் ஆட்சியை பகிர்ந்து கொள்ளது சோவியத்துகளுக்கு செய்யும் துரோகமாகும்.

இப்படி பிற சிக்கல்களையும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளேயே இருந்த ஊசலாட்டத்தையும் சித்தாந்த ரீதியாக எதிர்கொண்டு புரட்சியை வழிநடத்திச் சென்றனர் லெனின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சியினர்.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க