கட்சியின் பங்கு:

புரட்சிக்கான புறநிலையை சரியாக கணக்கிட்டது, அடித்தட்டு மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அவர்களை திரட்டியது, அவர்களை ஒழுங்கமைத்து செயலுக்கு வழிகாட்டியது, பரந்த கட்சி வலைப்பின்னலை உருவாக்கி அதை நிறுவன ரீதியாக திறம்பட இயக்கியது, ஊசலாட்டக்காரர்களை வென்றெடுத்தது, சீர்குலைவுவாதிகளை முறியடித்தது என அனைத்தையும் நிறைவேற்றி போல்ஷிவிக்குகள் புரட்சியை சாதித்தார்கள். இதை ஜான் ரீட் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், “போல்ஷிவிக்குகள் ஆட்சியதிகாரம் வென்றுகொண்டது, சொத்துடைத்த வர்க்கங்களுடன் அல்லது பிற அரசியல் தலைவர்களுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலமல்ல. பழைய அரசாங்கப் பொறியமைவுடன் இணக்கம் கண்டதன் மூலமல்ல. குறுங்குழு ஒன்றின் ஒழுங்கமைந்த வன்முறையின் மூலமல்ல. மக்கள் பெருந்திரளினர் ரஷ்யா எங்கும் எழுச்சி நடத்தத் தயாராய் இருந்திராவிடில், அந்த எழுச்சி நிச்சயம் தோல்வியுற்றிருக்கும். போல்ஷிவிக்குகளது வெற்றிக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். மக்களின் அனைத்துப் பிரிவினரையும் அறைகூவி அழைத்துப் பழையனவற்றை தவிர்த்து ஒழித்திடும் பணியில் ஈடுபடச் செய்ததும், பிறகு இந்தத் தகர்வின் புகையினிடையே புதியனவற்றின் கட்டுமானத்தை எழுப்புவதில் இம்மக்கள் திரளினருடன் சேர்ந்து பாடுபட்டும், இவர்களது மிகப்பரவலான எளிய விருப்பங்களை நிறைவேறச் செய்தனர் என்பதும்தான் காரணம்”.

ஒவ்வொரு முறையும் அவநம்பிக்கையாளர்களால் முட்டுக்கட்டைகள் போடப்படும்போதும் தளராமல் முன்முயற்சி எடுத்து புரட்சியை முன்னெடுத்துச் சென்றார்கள் போல்ஷிவிக்குகள். கம்யூனிஸ்ட்கள் மக்களை சார்ந்து இருக்கவேண்டும். அதேவேளையில், மக்களைவிட முன்னோக்கி சிந்திக்கும் திறனுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை நடைமுறையில் நிரூபித்தார்கள்.

“மக்கள் அனைவரது அறிவுத்துறை வளர்ச்சி அனுமதிக்கையில் மட்டும்தான் சோஷலிஸத்தை கைகூடச் செய்யமுடியுமெனில் குறைந்தது 500 ஆண்டுகளுக்கு நம்மால் சோஷலிஸத்தை பார்க்க இயலாது என்றாகிவிடும்… கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். மக்கள் பெருந்திரளின் சராசரிக் கல்வி நிலையின் பற்றாக்குறைக்கு தன்னைத் தடுத்து நிறுத்துவதற்கு இக்கட்சி இடந்தரலாகாது” என்றார் லெனின்.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 4


மிக முக்கியமாக முன்னேறிய வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளாற்றலிலும், விவசாயி வர்க்கத்துடனான கூட்டணியிலும் லெனின் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உள்ளாற்றலிலும் அதன் வெற்றியின் சாத்தியப்பாட்டிலும் டிட்ராஸ்கி போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. புரட்சியின் யதார்த்த நிலைக்கு ஏற்ப இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என்ற லெனினின் முடிவை சந்தர்ப்பவாதிகள் ஏற்கவில்லை. டிட்ராஸ்கி போன்ற சந்தர்ப்பவாதிகளை சோவியத்துகளின் காங்கிரஸிற்காக காத்திருப்பவர்களை, உடனடி எழுச்சியை எதிர்ப்பவர்களை லெனின் சாடினார். சில பிரச்சினைகளை வாக்கெடுப்பின் மூலமாக அல்லாமல், வன்முறையின் மூலம் தீர்மானிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றார் லெனின்.

டிட்ராஸ்கி, ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மற்றும் பிற உழைக்கும் வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஐரோப்பாவின் பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியில்லாமல், ஆதரவில்லாமல் ரஷ்யாவில் புரட்சி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையை கொண்டிருந்தார். அதற்கேற்பத்தான் மார்க்ஸிய விரோத “நிரந்தரப் புரட்சி” என்ற தனது கோட்பாட்டை முன்மொழிந்தார். ஆனால் ரஷ்ய உழைக்கும் வர்க்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த லெனின், ரஷ்ய தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், படையாட்களுக்கும் உள்ள அணி சேர்க்கையின் மூலமாக புரட்சியை வெல்லமுடியும் என்பதை நடைமுறையில் சாதித்துக்காட்டினார்.

இவையெல்லாம், நமக்கு விலைமதிப்பற்ற படிப்பினைகளை வழங்குவதாய் உள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்பது தங்களது சொந்த சித்தாந்த பலத்திலும், புரட்சியாளர்களின்‌ உள்ளாற்றலை அடிப்படையாகக் கொண்டும் நிற்கவேண்டும். பிற கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கை நம்பி இருக்கக்கூடாது. மேலும், நம்பிக்கையற்றவர்கள், ஊசலாட்டக்காரர்களின் செல்வாக்கிற்கு இரையாகக்கூடாது. ஆனால் இந்திய கம்யூனிஸத்தின் வரலாறு நெடுக ஊசலாட்டக்காரர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளின் கை ஓங்கியே இருந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் பங்கேற்பு என்பது மார்க்ஸிய-லெனினிய சித்தாந்தத்தின் பிரயோகமாக இல்லாமல் சந்தர்ப்பவாதமாகவே இருந்திருக்கிறது. ஆளும் வர்க்க கட்சிகளிடம் தங்களது கட்சியையும் சித்தாந்தத்தையும் அடகு வைத்திருக்கின்றனர். எல்லாம் சில சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீட்டுக்காகத்தான். தொழிற்சங்க என்பது வர்க்க ரீதியாக தொழிலாளர்களை திரட்டுவது என்பதை கைவிட்டு, வெறுமனே பொருளாதார கோரிக்கைகளை சாதித்துக் கொள்வது என்ற நிலையில் இருக்கிறது.


படிக்க: மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 5


கட்சியின் நிறுவன அமைப்புகளை கட்டுவது, அவற்றின் கொள்கைகளை வகுப்பது, மக்கள் போராட்டங்களில் தலையிடுவது, தேர்தலில் பங்கேற்பது என அனைத்து முனைகளிலும் வரலாறு நெடுக இந்திய கம்யூனிஸத்தின் சந்தர்பவதாம் நடந்தேறியிருக்கிறது.

இன்றைய தினத்திலும் கூட இந்த நம்பிக்கையற்ற ஊசலாட்டக்காரர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் மக்களின் உள்ளாற்றலில் நம்பிக்கை இல்லாதவர்கள். நாட்டையே நாசமாக்கி வரும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பலின் பாசிசத்தை தேர்தல் மூலமாக மட்டுமே வீழ்த்தமுடியும் என்றும் அப்போதுதான் மூச்சுவிட அவகாசம் கிடைக்குமென்றும் சொல்லி வருகிறார்கள். இவர்களைத்தான் லெனின் சாடுகிறார். இதற்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சி என்பது தனது சொந்த சித்தாந்த பலத்தைக்கொண்டு, நிறுவன ஒழுங்கமைப்பைக் கொண்டு, மக்கள் அடித்தளத்தை கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ரஷ்யப் புரட்சியின் வாயிலாக நமக்கு போல்ஷிவிக்குகள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.

(முற்றும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க