போர்…!

எப்போது குண்டு விழுமோ என்று
அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன்

கால்கள் களைத்து
இரைந்து கேட்கிறது ஓய்வை

உழைக்க ஓடிய கால்களும்
ஓடியாடி விளையாடிய கால்களும்
உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன

அப்பாவின் அப்பா இறந்து போனதை
அவரின் கால்தழும்புகள் தான் அடையாளமாய் தெரியப்படுத்தின

அப்பா அடிக்கடி சொல்லுவார்
வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை
நாடில்லா வாழ்க்கை நரகம் என்பார்

எப்போதும் அவர் உடலில்
எதையாவது கிறுக்கியபடி இருப்பார்
ஏனென்று கேட்டால்
குண்டுகளில் சிக்கி
இறந்து போனால் அடையாளமற்ற பிணமாக மாட்டேன்
இதுவே எனதுடலின் அடையாளம் என்பார் சவக்களை கொண்ட விழிகளோடு

நானும் தங்கையுமே ஒருநாள் அப்பாவிடம் கேட்டோம்
எப்போது நாங்கள் தெருக்களில் விளையாட முடியுமென்று

இந்த விளையாட்டுகள் அனைத்தும்
முடியும் அன்று
விளையாட முடியுமென்று அப்பா சொன்னார்

அம்மா திருமண நாளில்
குண்டுகள் தான் அட்சதை யாம்
சொல்லி சிரித்து விட்டு
எங்களை வெறித்து பார்ப்பாள்

ஆசைப்பட்ட வாழ்க்கை நீர்க்குமிழி போல்
எப்போது வெடிக்குமென்று யாருக்கு தெரியும்

வெடித்து தான் போனது ஒருநாள்

எத்தனையோ சடலங்களின் இடுக்கில் அப்பாவின் உடல் சிதறி கிடந்தன
அன்றைய நாளிலும் அப்பா ஏதோவொன்றை
கிறுக்கியிருந்தாரென்று எண்ணினேன்
ஆனால்

துண்டித்துக் கிடந்த கைகளில்
அப்பா இப்படி எழுதியிருந்தார்
என்னவளே இனியவளே
உரிமைகீதம் பாடும் இந்நிலம்போல
உன்னை நினைத்தபடியே காதல் கீதம் பாடுவேன் என் இறுதி வரை

குருதி வெளியேறி குப்புற கிடந்த அப்பாவின் மார்பில் இப்படி எழுதியிருந்தது
என் மகளே
இளம் விதவை பட்டம் உனக்கு கிட்டாமல் போகட்டும்

உள்ளங்கையில் வீட்டின் முகவரியும்
எனக்கான வாழ்த்தையும் இப்படி எழுதியிருந்தார்
மகனே நீயாவது பேரன் பேத்தி பெற்று
பெருவாழ்வு வாழ்ந்து மடி அல்லது வாழ்ந்து முடி என்று
எழுதியிருந்ததா என்ற
விடையற்ற குழப்பத்தில் நின்றபடி
அப்பாவின் கால்களைப் பார்க்க

எம் முன்னோர்கள் சுவாசித்த
மூச்சு காற்று உலாவும்
இந்நாடு என்நாடு
என்று கால்களில் எழுதி இருந்தது

இப்போதும் இதே வரிகளை எனது கால்களில் எழுதி
எப்போது குண்டு விழுமோ என்று
அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன்….!


ஏகலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க