காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!

யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

0

தெற்கு காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை அப்பகுதி முழுவதும் இஸ்ரேலிய படைகள் வான்வழியாக வீசியுள்ளன. இஸ்ரேல் தனது இனப்படுகொலையை தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான அறிவிப்புதான் இது.

நவம்பர் 16 அன்று இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரமான கிழக்கு கான் யூனிஸில் உள்ள குசா (Khuzaa), அபாசான் (Abassan), பானி சுஹைலா (Bani Suhaila) மற்றும் அல் கராரா (Al Qarara) ஆகிய பகுதிகளில் வீசியதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

படிக்க : காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை

“உங்கள் பாதுகாப்பு கருதி, நீங்கள் வசிக்கும் இடங்களை உடனடியாக காலி செய்து, அறியப்பட்ட தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டும். பயங்கரவாதிகளுக்கு அருகிலுள்ள எவரும் தங்கள் உயிரைப் பணயம் வைப்பவராவர். பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஒவ்வொரு வீடும் குறிவைக்கப்படும்” என்று துண்டுப்பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது.

அறியப்பட்ட தங்குமிடமா? அப்படி ஒன்று எங்கே இருக்கிறது? முற்றுகையிடப்பட்ட காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வார்கள்?

முன்னதாக, அக்டோபர் 21 அன்று இஸ்ரேல், காசாவின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த மக்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது. தற்போது செய்ததைப் போலவே துண்டுப் பிரசுரங்களை வீசியது. வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவர் என்றும் அச்சுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பை தீவிரப்படுத்தியது. அதன் காரணமாக, முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவிற்கு என்று தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், பயங்கரவாத இஸ்ரேல் அரசோ தற்போது தெற்கு காசாவில் உள்ள மக்களையும் வெளியேறுமாறு அச்சுறுத்துகிறது.

இதுகுறித்து நவம்பர் 16 அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் (Volker Turk), “தற்போதைய சூழலில், காசாவின் எந்தப் பகுதியையும் நாங்கள் பாதுகாப்பானதாக கருதவில்லை. இதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம்” என்று கூறினார்.

காசாவின் நிலைமைகள் தொற்று நோய் மற்றும் தீவிர பசிக் கொடுமைகளைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன என்று துர்க் மேலும் கூறினார்.

காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடர்வதாலும், இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் முற்றுகையாலும், உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் வழங்கப்படுவது கடுமையாகக் கட்டுப்படுத்துவதாலும், அடர்த்தியான தெற்கு காசாவில் ஒரு மனிதாபிமான பேரழிவு (humanitarian catastrophe) ஏற்படவுள்ளது என்று காசாவில் பணிபுரியும் உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஐ.நா.வின் கூற்றுப்படி, போரினால் இடம்பெயர்ந்த காசாவின் மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகிதத்தினர் தாங்கள் வீடு திரும்ப வாய்ப்பில்லை என்று கவலைப்படுகின்றனர். காசாவில் சுமார் 16 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர் என்பதுதான் இதன் பொருள்.

ஹமாஸ் அமைப்பை துடைத்தெறிவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் இஸ்ரேல், இதுவரை 11,470-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் குழந்தைகள்.

இஸ்ரேல், இந்த இனப்படுகொலையை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி ஏகாதிபத்தியங்களின் துணையோடுதான் நடத்திவருகிறது. ஜோ பைடன் அரசாங்கம் இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையை ஆரம்பம் முதலே முற்றும் முழுதாக ஆதரித்து வருகிறது.

படிக்க : இன அழிப்புப் போர்… | காசா | கவிதை

நவம்பர் 9 அன்று, காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று ஜோ பைடன் தெரிவித்தார். காசாவின் பள்ளிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் என ஒவ்வொன்றின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசிய போதெல்லாம், பைடன் அரசு “இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது” என்று கூறி இஸ்ரேலுக்கு துணையாக நின்றுள்ளது.

யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க