) செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்டத்தை ஆதரித்தும் போராடும் விவசாயிகள் மீது போலீசில் புகார் அளித்தவர்களின் கருத்துக்கள்:

செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்டத்திற்கு தானாக முன்வந்து நிலம் அளிக்க முயன்ற போது மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாய இயக்க முன்னணியாளர்கள் மிரட்டினார்கள் என்று புகார் அளித்த 5 பேரில் 4 பேரை சந்திக்க திட்டமிட்டுச் சென்றோம். அவ்வாறு சென்ற போது செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் த/பெ துரைசாமி, இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி த/பெ பலராமன், ஆகிய இருவரை மட்டுமே நேரில் சந்திக்க முடிந்தது. வட ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் த/பெ லோக நாதன், அத்தி கிராமத்தைச்சேர்ந்த பழனி த/பெ முத்து ஆகிய இருவரும் வீட்டில் இல்லை.அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து கருத்துக்களைப்பதிவு செய்தோம்.

1. வேல்முருகன் /பெ துரைசாமி

நான் விருப்பப்பட்டுதான் என்னுடைய நிலத்தை சிப்காட்டுக்கு கொடுக்க முன்வந்தேன் என்று கூறினார் . நிலம் உங்களின் பெயரில் உள்ளதா என்று உண்மை அறியும் குழுவினர் கேட்டதற்கு நிலம் என்னுடைய சம்பந்தியின் பெயரில் உள்ளது. நிலத்தை விற்று அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே நான் முயன்றேன் என்றார். இது குறித்து அந்த நிலத்தின் உரிமையாளரான அன்பரசு என்பவரின் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லை. அவரின் மகனோ, சிப்காட் வருவது தெரியும். எங்களுடைய நிலத்தை சிப்காட்டுக்கு எடுப்பது தொடர்பாக எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை. எனவே எங்கள் நிலத்தை அரசுக்கு ஒப்படைப்பது பற்றி நாங்கள் பேசவே இல்லை என்றார். வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலையத்தில் 316/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கையில் வேல்முருகன் தனக்கு சொந்தமான நிலம் 2 ஏக்கரை சிப்காட்டுக்கு தானாக முன்வந்து கொடுக்க உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. கருணாநிதி /பெ பலராமன்

கருணாநிதி என்பவர் செய்யாறு எம்.எல்.ஏ ஒ.ஜோதியிடம் வேலை செய்வதாக கூறிய அவரின் தந்தை பலராமன், தான் இளநீர் குன்றம் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடைய பெயரில் நிலம் எதுவும் இல்லை என்றும் தான் முன்பு வேலை செய்த முதலாளி மேல்மாவில் 37 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் அதற்கு தான் பவர் ஆப் அட்டார்னியாக இருப்பதாகவும் தெரிவித்தார். தான் சொல்லியே தன்னுடைய மகன் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். சிப்காட் வந்தால் வேலை பெருகும் என்றும் அரசை மீறி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். 318/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கையில் கருணாநிதி தனக்கு சொந்தமான நிலம் 2 ஏக்கரை சிப்காட்டுக்கு தானாக முன்வந்து கொடுக்க உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

3. கலைச்செல்வம் /பெ லோகநாதன், வட ஆளப்பிறந்தான் கிராமம்

இவரை உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் சந்திக்க சென்ற போது வீட்டில் இல்லை என்பதால் அருகில் உள்ளவர்களிடம் தகவல் கேட்கப்பட்டது. அவரின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களோ சிப்காட் வரவுள்ள எல்லையில் கலைச்செல்வத்திற்கு நிலம் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்ட எல்லையில் அவரின் மாமியாருக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் கலைச்செல்வம் திமுகவில் நிர்வாகியாக இருப்பதையும் தெரிவித்தனர். இவரின் புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலையத்தில் 320/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. பழனி /பெ முத்து

இவரை சந்திக்கச்சென்ற போதும் வீட்டில் இல்லை. அருகில் இருந்தவர்களிடம் சிப்காட் வேண்டும் என்ற போராட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் இவர் திமுகவில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இவருக்கு நிலம் இருப்பது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். இவரின் புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலையத்தில் 319/2023 என்ற பதிவெண்ணுள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1


) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள / சிறையில் இருந்து வெளியே நிபந்தனை பிணையில் இருப்பவர்களின் கருத்துக்கள்

1. பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள திரு.அருள் /பெ ஆறுமுகம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான முருகன் சிறையில் என்னை அடைத்து தனிமைப்படுத்தி வாழ்நாள் முழுவதும் தனிமைச்சிறை தான் உனக்கு என்று சொல்லாமல் சொல்லி என்னை மன உளைச்சலை ஏற்படுத்தினர். என்னை பார்க்க பல்வேறு அமைப்பு தோழர்கள் வந்து போக இருந்தால் என்னை வழக்கமான சிறைக் கூடத்திற்கு மாற்றினர்.

இங்கிருக்கும் கைதிகள் என்ன தண்டனைக்காக வந்திருக்கீங்க என்று விசாரித்து, மக்களுக்காக போராட்ட வழக்கில் தான் வந்து இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். மக்களுக்கு தெரிவியுங்கள் நான் மன உறுதியோடு இருக்கிறேன். ஒரு கைப்பிடி மண்ணைக்கூட விவசாயி நிலத்திலிருந்து எடுக்க விட மாட்டேன். விவசாய மக்களுக்கு உறுதியோடு இருப்பேன். ஒரு வழக்கில் எனக்கு ஜாமின் வந்து விட்டது. ஆனால் இன்னொரு வழக்கு போட்டு உள்ளனர், அது என்னவென்று தெரியவில்லை. என்னைவெளியே விடமால் இருக்க திமுக அரசு வேலை செய்கிறது.

2. திரு.பச்சையப்பன், ஒருங்கிணைப்பாளர், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் (குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு பின்னர் தமிழ்நாடு அரசால் குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளார்.)

சிப்காட் வரவேண்டும் என்று போராடுகின்றவர்கள் யாரும் உள்ளூர் காரர்கள் இல்லை அல்லது அவர்களது நிலம் இந்த திட்டத்திற்கான எல்லைக்குள் இல்லை என்பதே உண்மை. அவ்வாறு அவர்களுக்கு நிலம் இருந்தால் அவர்களின் பட்டாவை காட்டச்சொல்லுங்கள், அரசுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். எங்கள் மீது புகார் கொடுத்த 5 பேருக்கும் இந்த சிப்காட் திட்டம் வர உள்ள எல்லையில் நிலமே இல்லை. சிப்காட் வேண்டாம் என்று சொல்லவில்லை. விவசாய நிலங்களை அழித்து சிப்காட் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். நாங்கள் 128 நாட்கள் போரடியும் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. நாங்கள் சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, அமைச்சர் எ.வ வேலு, சிப்காட் பிரிவு, மாவட்ட ஆட்சியர் என எல்லோரிடமும் மனு அளித்து விட்டோம். எங்களை சாலை மறியல் செய்ய வைத்ததே அரசின் அணுகுமுறைதான். சாலை மறியல் செய்தோம் என்று எங்கள் மீது வழக்கு போட்டு சிறையிலடைத்தார்கள். இன்று (23.11.2023) சிப்காட் வேண்டும் என்று போராடுகின்றவர்களை கைது செய்தார்களா என்றால் இல்லை. எங்கள்மீது எப்படிப்பட்ட அடக்குமுறைகளை செலுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம், சிப்காட்டுக்கு நிலத்தை கொடுக்கமாட்டோம்.

3. கைது செய்யப்பட்டு நிபந்தனைப்பிணையில் உள்ள 19 பேரையும் சந்தித்தோம்.அவர்களை சந்தித்ததில் தொகுப்பாக,

வட ஆளப்பிறந்தான் கிராமத்தைசேர்ந்த பாபுவிற்கு சொந்தமாக 71/2 ஏக்கர் நிலம் உள்ளது. இரவு பதினோரு மணிக்கு எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார். விவசாயிகள்மீது புகார் அளித்துள்ள கலைச்செல்வன் த/பெ லோகநாதன் இவரின் உறவினர் என்றும் கலைச்செல்வத்திற்கு சிப்காட் வரவுள்ள எல்லைப்பகுதியில் நிலம் இல்லை என்றும் தெரிவித்தார். குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டு நிபந்தனைப்பிணையில் வெளிவந்துள்ள மணிப்புரம் கிராமத்தைசேர்ந்த சோழன், மேல்மாவைச்சேர்ந்த திருமால் ஆகியோர் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். குறும்பூரைச்சேர்ந்த பாக்கியராஜ் கணிணி அறிவியலில் முதுநிலை படிப்பை நிறைவு செய்துவிட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்.

) மாவட்ட துணை ஆட்சியர்

மாவட்ட துணை ஆட்சியரை, செய்யாறில் உள்ள அலுவலகத்தில் இருமுறை சந்தித்து கருத்துக்கள் பெற திட்டமிடப்பட்டது. முதல் முறை அவர் அலுவலகத்தில் இல்லை. இரண்டாவது முறை அவரை சந்திக்க இயலாதென மாவட்ட துணை ஆட்சியரின் உதவியாளர் தெரிவித்துவிட்டார்.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 2


சிப்காட் வேண்டும் தொடரும் போராட்டங்கள்திமுக, அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் சமூக விரோத செயல்பாடுகள்

23.11.2023 அன்று சிப்காட் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக

இந்த போராட்டத்தில் உண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களின் களச்செய்தி

23.11.2023 காலை 10 மணி அளவில் மேல்மா கூட்டுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் பல்வேறு ஊர்களில் இருந்து 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வந்தவர்களை டாட்டா ஏஸ் வாகனம் வைத்து திமுக வினர் அழைத்து வந்துள்ளனர். இப்போராட்டத்தில் சிப்காட் வேண்டும் என்றும் பெண்களுக்கு வேலை வேண்டும், தரிசு நிலத்தை சிப்காட்டுக்கு ஒதுக்குவதன் மூலமாக வேலை கிடைக்கும் போன்ற பல்வேறு பதாகைகளை பெண்கள் பிடித்திருந்தனர்‌. சிப்காட் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, 100 நாள் வேலை வேண்டுமென்றால் அவசியம் ஆர்ப்பாட்டத்திற்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். ரூ 200 பணம் தருவதாகவும் பிரியாணி பாக்கெட் தருவதாகவும் சொல்லி அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு வயதான பெண்மணி பசியின் காரணமாக அருகில் உள்ள ஓட்டலில் உணவுக்காக சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல் உரிமையாளர் “நாங்கள் விவசாய நிலத்தை கொடுக்கமாட்டோம், நீங்கள் வேறு ஊரில் இருந்து வந்து சிப்காட் வேண்டும் என்று கூறுகிறீர்கள்” என்று அந்த பெண்ணுக்கு முதலில் உணவு தர மறுத்துள்ளார். பிறகு அவரின் முதுமையை பார்த்து அவர்களை அழைத்து உணவு வழங்கியுள்ளார். அப்போது உங்கள் நிலத்தை எடுத்துக் கொள்ளும் தகவல் எனக்கு தெரியாது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் மேல்மா, நெடுங்கள் உள்ளிட்ட கிராமங்களில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரித்ததில், பலரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக பொறுத்து இருக்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும் மேலும் பகுதி மக்களை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது உளவுத்துறை போலீசார் உண்மை அறியும் குழு உறுப்பினர்களையும் அச்சுறுத்தும் வகையில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

திமுக கிளைச் செயலாளர் என்றால் ஐம்பது பேர் வரையிலும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் என்றால் 50 பேர் முதல் 100 பேர் வரையேனும் அழைத்து வரவேண்டும் என மேலிடம் உத்தரவு போட்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு கிளைச் செயலாளர் தெரிவித்தார். காஞ்சிபுரம், திண்டிவனம், வேலூர் மாவட்டம்- மேச்சேரி, செய்யாறு, கலவை, ஆற்காடு, வெம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 1300 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இதில் மினி வேன், லாரி மற்றும் செய்யாறு சிப்காட்டில் உள்ள நிறுவனங்களின் பத்துக்கும்மேற்பட்ட பேருந்துகள் மூலம் வெளியூர் மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

உள்ளூர் மக்கள் இப்போராட்டத்தை கண்டு கடும் ஆத்திரத்தில் உள்ளனர். காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறோம். சிப்காட் வந்தால் குடிநீர் ஆடு மாடுகள் மேய்ப்பது போன்ற இடங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். சிப்காட்டுக்கு நிலத்தை கொடுத்துவிட்டு பணம் வாங்கிக் கொண்டால் பணம் சீக்கிரம் செலவழிக்க வேண்டுமோ? பிறகு என்ன நாங்கள் பிச்சை எடுத்தா பிழைக்க முடியும் ? எங்கள் உயிரை வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம். நிலத்தை விட்டு தர மாட்டோம் என கிராம மக்கள் கூறுகின்றனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் 43 முதல் 46 வரை நில கையகப்படுத்துதல் பற்றி கூறியுள்ளது. அதில் இரட்டிப்பு இழப்பீடு வழங்குதல், மக்கள் விரும்பினால் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது. அதை தற்போது அப்பட்டமாக மீறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

24.11.2023 பைக் பேரணி

சிப்காட் வேண்டும் என்ற முழக்கத்தோடு வேலை இல்லா இளைஞர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் பைக் பேரணி மேல்மா சுற்றுவட்டார கிராமங்களில் நடத்தப்பட்டது. சுமார் 100 பேர் இருசக்கர வாகனங்களில் கொடியை கட்டியபடி, வேண்டும் சிப்காட், வேண்டும் வேலை என்று முழங்கியபடி சென்றுள்ளனர். இதை அறிந்த மக்கள் அவர்களுக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு தயாராக இருந்தனர். மக்களிடம் இருந்த கருப்புக்கொடியை போலீசு பிடுங்கிச்சென்றுள்ளது. அதனால் வேறு வழி இன்று போலீசு பாதுகாப்புடன் பைக்கில் வந்தவர்களை மறித்து, வெளியூரில் இருந்து வந்து இங்கே சிப்காட் வேண்டும் என்று கேட்கிறீர்களே, உங்கள் நிலத்தை சிப்காட்டுக்கு கொடுங்கள் என்று கூறியுள்ளனர். போராடிய மக்களை தடுத்துவிட்டு வாகனப்பேரணியை போலீசு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. வெளியூரிலிருந்து வந்து தங்கள் ஊரில், தங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது, மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களின் எதிர் நடவடிக்கைகளால் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

23, 24 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கு பணம் கொடுத்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பதையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பேருந்துகள் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதையும் கிராம இளைஞர்கள் மற்றும் உண்மை அறியும்குழு உறுப்பினர்கள் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர்.

(தொடரும்..)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க