சத்தீஸ்கர்: விவசாய மானியங்களை அள்ளிவீசிய காங்கிரஸ் – பா.ஜ.க.!

2018-இல் இம்மாநிலத்தில் தனக்கு (பா.ஜ.க.வுக்கு) ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து கொள்ள விவசாயிகளை கவரும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 12

டந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தியாவின் நெற்களஞ்சியமாக விளங்கும் இம்மாநிலத்தில் விவசாயிகளின் வாக்குகளை பெற பா.ஜ.க.வும் ஆளும் காங்கிரஸ் கட்சியும் போட்டிபோட்டிக் கொண்டு விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசியிருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு, 15 ஆண்டுகால பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது, அன்று விவசாயிகளுக்காக காங்கிரஸ் அளித்த இதே வாக்குறுதிகளால்தான். அன்று விவசாயிகள் மத்தியில், ஆளும் பா.ஜ.க. மீதிருந்த மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ்.

இத்தேர்தலிலும், விவசாயக் கடன் தள்ளுபடி, குவிண்டாலுக்கு குறைந்தப்பட்சம் ரூபாய் 2,800-க்கு கொள்முதல், குறுகிய கால பயிர் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறது காங்கிரஸ்.

மேலும், NYAY (விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் முதியோர்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியத் திட்டங்கள்), கிராமப்புற தொழிற்பூங்காக்களை அமைப்பது உள்ளிட்டவை மட்டுமல்லாது சத்தீஸ்கரிலும் இந்துக்கள் வாக்குக்களை கவருவதற்காக, ராமனும் சீதையும் வனவாசத்திற்கு சென்றதாக நம்பப்படுகின்ற பாதையை சுற்றுலா தளமாக்கும் திட்டமான ராம் வான் கமான் பாத், கோயில்கள், தேவக்குடிகளை நிறுவுவது என அடுக்கடுக்கான இந்துத்துவா பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது காங்கிரஸ்.

மற்ற மாநிலங்களைப் போல சத்தீஸ்கரிலும் “பூபேஷ் பாகெல் ஆட்சி ஊழல் ஆட்சி”, என்ற பிரச்சாரத்தை தேர்தலில் பிரதானமாக கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க., பழங்குடியினர்கள் வாழும் பாஸ்டர் பகுதி மக்களை காங்கிரஸ் கட்டாய மதமாற்றம் செய்துவருவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில்தான் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டிவருகிறது.


படிக்க: ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்


இவைமட்டுமன்றி, 2018-இல் இம்மாநிலத்தில் தனக்கு (பா.ஜ.க.வுக்கு) ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து கொள்ள விவசாயிகளை கவரும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை காங்கிரஸ் கொடுத்ததைவிட கூடுதலாக (ஒரு ஏக்கருக்கு 21 குவிண்டாலுக்கு) ரூபாய் 3,100க்கு கொள்முதல் செய்வதாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியிட்ட தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இது காங்கிரஸ் அளித்த கொள்முதல் விலையைவிட ரூபாய் 500 கூடுதலாகும். மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த இரண்டாண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய கொள்முதல் ஊதியமான குவிண்டாலுக்கு 300 ரூபாயை வரும் டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் வழங்குவோம் என்று தேர்த்தல் வாக்குறுதிகளை வீசியிருக்கிறது.

இதனை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பா.ஜ.க “காப்பி” அடித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டினாலும், பா.ஜ.க. அறிவித்த இரண்டு நாட்களுக்கு பிறகு அதாவது நவம்பர் 5 ஆம் தேதி காங்கிரஸ் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில், கொள்முதல் விலையை ஏற்றி, (ஏக்கருக்கு 20 குவிண்டால்) நெல்லை ரூபாய் 3,200-க்கு கொள்முதல் செய்வதாக மாற்றி அறிவித்திருந்தது.

இவை, விவசாயிகளின் வாக்குகளை காங்கிரஸ் கணிசமாக அறுவடை செய்யும் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும், “விவசாயிகளுக்காக அளிக்கப்படும் வாக்குறுதிகள் வெறும் தேர்தல்களில் தங்களை கவருவதற்காக ஓட்டுக்கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டி” என சத்தீஸ்கர் மாநில விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் இல்லை. அம்மாநில மக்கள், “எங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி வேண்டும், வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வேண்டும். இதுகுறித்துதான் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட வேண்டும்” என்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க.வும், காங்கிரசும் கவர்ச்சிவாத பிரச்சாரங்களையும், மத முனைவாக்கத்தை ஏற்படுத்த இந்துத்துவ பிரச்சாரங்களையும் முன்னெடுத்துவருகிறதோயொழிய, மக்கள் கோரிக்கைகளை காதுக் கொடுத்து கேட்பதில்லை என்பது சத்தீஸ்கரிலும் நிரூபனமாகியிருக்கிறது.


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க