நேற்று ராகுல் காந்தி! இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?

இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் மைக்கை அணைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவிக் கும்பல் இனி அதானி-அம்பானி குறித்து பேசுவோருக்கு நாடாளுமன்றத்திலேயே இடமில்லை என்று அறிவிக்கின்றனர்.

ன்று (டிசம்பர் 8) திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி பறிக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படும் பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பி.ஜே.பி எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. அக்குழு தனது அறிக்கையை நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமலேயே பதவி நீக்கம் செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று அறிவித்தார்.

மோடி அரசின் இந்த பாசிச தாக்குதலின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்காக புதிய ஜனநாயகம் டிசம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரையை வெளியிடுகிறோம். டிசம்பர் மாத இதழ், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

***

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான அதானியின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக, சில மாதங்களுக்கு முன்பு மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைப்போல, தற்போது அதானி குறித்து கேள்வி எழுப்பியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான மஹுவா மொய்த்ராவையும் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, பா.ஜ.க. கும்பல்.

தேர்தல் பிரச்சார உரையில், “மோடி-சமூகத்தை இழிவுப்படுத்திவிட்டார்” என்று அவதூறு வழக்கின் மூலமாக ராகுல் காந்தியின் பதவியை பறித்தது போல, நாடாளுமன்றத்தில் அதானி நிறுவனத்திற்கு எதிரான கேள்விகளை எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியுள்ளார் என்று பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து மஹுவா மொய்த்ராவின் பதவியையும் பறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு.

நாடாளுமன்றத்தில் மோடி மற்றும் அதானியின் கள்ளக்கூட்டணி குறித்தும் அதானியின் ஊழல் முறைகேடுகளைப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியவர், மஹுவா மொய்த்ரா. பல சமயங்களில் இவர் எழுப்பும் கேள்விகள் இந்தியா முழுவதும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகும்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான போது, மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவு குறித்து மஹுவா எழுப்பிய கேள்விகள் மோடி அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தின. “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. ஒரு தொழிலதிபர் உங்களோடு எல்லா இடங்களுக்கும் பறக்கிறார். பல நிகழ்ச்சிகளிலும் உங்களோடு பங்கேற்கிறார். சொல்லப்போனால் பிரதமர் மோடியை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தானே இயக்குவதுபோல் உலகத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்வியால் பா.ஜ.க. கும்பலை கதிகலங்க வைத்தார், மஹுவா.

இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, “கேள்வி கேட்காமல் இருப்பதற்காக பணம் கொடுக்க முன்வந்த அதானி, தற்போது பணத்தை வாங்கிக்கொண்டு தான் கேள்வி கேட்கிறேன் என்று போலியான குற்றச்சாட்டை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதன் மூலம் எதற்காக காவிகளால் இத்தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை மஹுவா மொய்த்ராவே அம்பலப்படுத்தியுள்ளார்.

சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்!

கடந்த அக்டோபர் மாதம், பா.ஜ.க-வை சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷாந்த் துபே மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ராவுக்கும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனிக்கும் இடையில் லஞ்சம் பரிமாற்றப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருக்கிறது” என்றும் “2019 – 2023 ஆண்டுகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் மஹுவா எழுப்பிய 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமத்தைப் பற்றியவையே” என்றும் வழக்கறிஞர் ஒருவரின் ஆவணத்தை சுட்டிக்காட்டினார். இதனால், மஹுவாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மேலும், மஹுவா மொய்த்ரா “தனது மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்தும் பயனர் அடையாள எண் மற்றும் கடவு சொல்லை (User Id and Password) ஹிராநந்தினி மற்றும் ஹிராநந்தினிக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு, தங்கள் சொந்த லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.

இதற்கு எதிர்வினையாக, “நிஷாந்த் துபே மீதான போலிச் சான்றிதழ் பற்றிய விசாரணைகளை முடித்துவிட்டு என் மீது விசாரணைக் குழுவை அமைக்கவும்” என்று ஓம் பிர்லாவை குறிப்பிட்டும், “அதானி நிலக்கரி ஊழலை விசாரித்துவிட்டு தன் வீட்டுப்படிக்கு வரவும்” என்று அமலாக்கத்துறையை குறிப்பிட்டும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மோடி அரசை எள்ளி நகையாடியிருக்கிறார், மஹுவா. மேலும், “அவர்களால் என் தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று உறுதியுடன் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா பதவியை குறுகிய காலத்திற்குள் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. எம்.பி-க்களை பெரும்பான்மையாக கொண்ட “நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு” அமைத்து அவர் மீதான விசாரணையை விரைவுப்படுத்தியது, மோடி அரசு. வேக வேகமாக செயல்பட்டு 23 நாட்களிலேயே தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை கச்சிதமாக முடித்தது நெறிமுறைகள் குழு. மஹுவா லஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை நிரூபிக்காமலேயே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது.


படிக்க: ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!


“மஹுவா மொய்த்ரா இனியும் மக்களவை உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மஹுவா மொய்த்ரா, தர்ஷன் ஹிராநந்தினி ஆகியோருக்கு இடையேயான பணப்பரிவர்த்தனை குறித்து, இந்திய அரசு சட்ட ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் விசாரணை நடத்த வேண்டும்” என்று நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ரா நிஷாந்த் துபேவின் போலி பட்டச்சான்றிதழை அம்பலப்படுத்தியதால்தான், மஹுவாவை பழிவாங்குவதற்காக  நிஷாந்த் துபே மேற்கூறிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், உண்மையில் மஹுவா மீதான துபேயின் புகார் சிறப்புரிமைகள் குழு அல்லது பிற சிறப்புக் குழுக்களுக்கு (Committee of Privileges or other Special Panels) அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த குற்றசாட்டுக்கும் நெறிமுறைகள் குழுவுக்கும் சம்மந்தமில்லை என்பதையும் மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளரான பி.டி.தங்கப்பன் ஆச்சாரி, தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே இது திட்டமிடப்பட்ட பாசிசத் தாக்குதல் என்பதும் மஹுவா மொய்த்ரா பெண் என்பதால் அவரை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்நெறிமுறைகள் குழு அமைக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகிறது.

ஆரம்பத்தில் இருந்தே மஹுவாவை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் செயல்பட்டு வந்தது. அந்த அடிப்படையிலேயே விசாரணையில் கேள்விகளும் கேட்கப்பட்டன. “எந்த ஹோட்டலில் தங்கியிருந்தீர்கள்?”, “யாருடன் தங்கியிருந்தீர்கள்?” என்பது போன்ற மிகவும் கீழ்த்தரமான கேள்விகளை குழுவின் தலைவர் வினோத் சோன்கர் கேட்டதாக குற்றம்சாட்டுகிறார், மஹுவா. அந்தக் கேள்விகள் “என்னுடைய உடைகளைப் பறிப்பதற்கு சற்றும் குறைவானவை அல்ல” என்று தன்னுடைய ஆதங்கத்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

விசாரணையில் பங்கெடுத்துக்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதனை அம்பலப்படுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் எம்.பி-யான என்.உத்தம் குமார் ரெட்டி, “மஹுவாவிடம் மிகவும் அந்தரங்கமான கேள்விகளை நெறிமுறைகள் குழுவினர் கேட்டனர்” என்று குற்றம்சாட்டி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.


படிக்க: ராகுலின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம், இன்று பதவி, நாளை தேர்தல் !


ஆனால் இன்னொருபுறம், வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்தும் எதிர்க்கட்சிகள் மஹுவா மீதான தாக்குதலை கூட்டாக சேர்ந்தோ தனித்தனியாகவோ கூட எதிர்க்கவில்லை. ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கண்டனக் குரல்கள் கூட இந்நடவடிக்கைக்கு எழவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அடக்கிதான் வாசிக்கிறது. இந்த விவகாரம் எழுந்து பல நாட்கள் வரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தார், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி.

“தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தானே எதிர்த்து போராடும் அளவுக்குத் திறமையானவர் மஹுவா மொய்த்ரா என்று நான் உணர்கிறேன். நான்கு வருடங்களாக அவர்கள் (பா.ஜ.க அரசு) என்னையும் பலிகடாவாக்கினார்கள். இது அவர்களின் வழக்கமான நடைமுறை” என்று கூறியுள்ளதன் மூலம் திரிணாமுல் கட்சி மஹுவாவை கைவிட்டுவிட்டதை வெளிப்படுத்தி இருக்கிறார், திரிணாமுல் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி.

புதிய இயல்புநிலை!

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகிய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதைப் போல, மக்களுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுத்துறையினர் மீது ஊபா போன்ற கொடுஞ்சட்டங்கள் பாய்ச்சப்படுவதைப் போல, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ ஏவப்படுவதைப் போல, இதுவும் நாடாளுமன்றத்தில் மோடி-அதானி கும்பலை கேள்வி எழுப்புபவர்கள் மீது தொடுக்கப்படும் சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதலாகும். ராகுல் காந்தி, மஹுவா மொய்த்ரா மீதான தாக்குதல்கள் அதையே நமக்கு உணர்த்துகின்றன.

இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் மைக்கை அணைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவிக் கும்பல் இனி அதானி-அம்பானி குறித்து பேசுவோருக்கு நாடாளுமன்றத்திலேயே இடமில்லை என்று அறிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என்று மக்களவை குழு தலைவர் ஓம் பிர்லாவிற்கு நெறிமுறைகள் குழு பரிந்துரைத்துள்ளதன் மூலம் இனி அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவே முடியாது என்ற புதிய இயல்பு நிலையை பாசிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க