இரண்டு அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்!
ஆதிக்கச்சாதிவெறியர்களின் அடாவடித்தனத்திற்கு முடிவுகட்டு!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பொலங்காளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் நவீன்குமார் மற்றும் கூலித்தொழிலாளி கிருபாகரன் ஆகிய இருவரையும் 21.11.2023 அன்று கடுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவுண்டர் சாதி வெறியர்கள் கடுமையாக தாக்கினர். மயக்கம் வரும்வரை தாக்கியது மட்டுமல்லாமல் தண்ணீர் கேட்கும் போது “இந்தாட சக்கிலி நாயே” என்று திட்டியவாறு வாயில் சிறுநீரை கழித்தார்கள். சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., வி.சி.க, தமிழ் புலிகள், திராவிட இயக்கத்தினர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அருந்ததியர் இளைஞர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன் தலைமையில் கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர் சாதியைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்ப்பட்ட மக்களைத் திரட்டி பேரணி, ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். கடந்த ஐந்து நாட்களாக ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் சமூக விரோதக் கும்பலை தடுத்து நிறுத்தக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்” என துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரம் செய்து வந்துள்ளனர்.
அருந்ததிய இளைஞர்களை தாக்கிய சாதிவெறி கும்பலான ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் கன்னுசாமி, சன் டி.வி மற்றும் தினகரன் செய்தியாளர் ரமேஷ், சிறுநீர் கழித்த மெக்கானிக் வெங்கடேஷ் உள்ளிட்ட 22 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. வன்கொடுமை வழக்கை நீக்கக் கோரி இந்து முன்னணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சாதிவெறியர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
22 பேர் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை நீக்கவும், உண்மை தன்மையை ஆய்வு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளது இக்கும்பல். இவ்வழக்கை நீக்காவிட்டால் 07.12.2023 அன்று பேரணி, ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், போலீசு அனுமதி மறுத்து விட்டது.
அதனை மீறியும் நடத்துவதாக பேரணி, ஆர்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்களை குவித்திருந்தது மாவட்ட நிர்வாகம். அதன்பின், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உண்மைக்குழு விசாரித்ததன் அடிப்படையில் “வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை, திருடர்களை பிடித்த போது ஊர்மக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறு தான் வன்கொடுமை வழக்காக தவறாக பதியப்பட்டுள்ளது” என பச்சைப் பொய் கூறப்பட்டது. அதனால் 22 பேர் மீதான வன்கொடுமை வழக்கை ரத்துச் செய்ய போவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்து. அதனையடுத்து, பேரணி, ஆர்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆதிக்க கவுண்டர் சாதிவெறியர்களுக்கு அப்பட்டமாக துணை போய் வருகிறது மாவட்ட நிர்வாகமும் போலீசும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அச்சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ச்சியாக கவுண்டர் சாதிவெறியர்கள் பேசி வருகின்றனர். இதற்காக ஆதிக்கச் சாதிவெறியர்கள் “வன்கொடுமை சட்ட பொய் புகார் எதிர்ப்பு கூட்டமைப்பு” ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். கொங்கு தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டி கொங்கு மண்டல மக்களுக்கு அறைக்கூவல் விடுத்து சமூக ஊடகங்களில் பேசி வருகிறார். இதுபோன்று கொங்கு மண்டலத்தில் பலரும் சாதிப்பெருமைகளை பேசுவது அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. இவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிச மதவெறி கும்பலுடன் களத்தில் நேரடியாக கைக்கோர்த்து சாதிவெறியை ஊக்குவிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் கட்டண உயர்வு, மூலப்பொருட்களின் விலையேற்றம், ஜி.எஸ்.டி வரிவசூல், வரி உயர்வு போன்றவற்றால் கோவை, திருப்பூர், ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வரும் சூழலில் அதனை கண்டித்து பல்வேறு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மதவெறி, இனவெறி, சாதிவெறி போன்றவாறு மக்களை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்துமுண்ணனி போன்ற அமைப்புகளையும், பாசிச கும்பலின் பிடியில் செயல்பட்டு வரும் சாதிவெறி அமைப்புகளையும் அம்பலப்படுத்திப் புறக்கணிக்க வேண்டும்.
சாதிவெறிக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களை அரசு செய்ய வேண்டும். ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள் சனாதான ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் சாதிவெறி தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது.
ஆதிக்கச் சாதிவெறிகளுக்கு துணைப்போகும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம்!
பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு உடனடியாக நடவடிக்கை எடு!
ஆதிக்கச் சாதிவெறியை ஊக்குவிக்கும் கட்சிகள், சங்கங்கள் பிரச்சாரங்களைத் தடை செய்!
ஆர்.எஸ்.எஸ் தொடர்பிலிருக்கும் சாதிய கட்சிகள், சாதிய சங்கங்களைத் தடை செய்!
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube