மோடி செல்ஃபி பாயிண்ட்: மக்களின் வரிப்பணத்தில் படாடோப விளம்பரம்!

வெள்ள நிவாரண நிதி கேட்டால் பல்வேறு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா - மோடி கும்பல் சுய விளம்பரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந்தவிதமான கூச்ச நாச்சமும் அற்றவர்கள்.

ந்திய மக்களுக்கு ஒரு ‘இனிய’ செய்தி! மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் பல்வேறு ‘இன்பங்களை’ அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசிவு, ஏழை மாணவர்களின் கல்வி பறிப்பு, பசி – பட்டினி சாவுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் என மோடியின் சாதனையை சொல்லிக் கொண்டே போகலாம். இதுபோன்ற எண்ணற்ற சாதனைகள் புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முப்பரிமாண புகைப்படத்துடன் மக்கள் இனி செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். ஆம், அதற்கு இந்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து ரயில்வேக்களும் மோடியின் முப்பரிமாண செல்ஃபி பாயிண்டை ரயில்வே நிலையங்களில் நிறுவிவருகின்றனர். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி அஜய் போஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு மத்திய ரயில்வே துறை அளித்துள்ள பதிலில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி, மத்திய ரயில்வே மும்பை, புசவால், நாக்பூர், பூனே மற்றும் சோலப்பூர் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 50 நிலையங்களில் ₹1.65 கோடி செலவு செய்து மோடி செல்ஃபி பாயிண்டை நிறுவியுள்ளது.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், கல்யாண், நாக்பூர், பெதுல் ஆகிய 30 A வகை நிலையங்களில் ₹1.25 லட்சம் செலவு செய்து தற்காலிக பாயிண்டையும் கர்ஜத், கசாரா, லத்தூர், கோபர்கான் ஆகிய 20 C வகை நிலையங்களில் ₹6.25 லட்சம் செலவு செய்து நிரந்தர பாயிண்டையும் நிறுவியுள்ளது மத்திய ரயில்வே.

மேலும், மேற்கு ரயில்வேவின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பாவ்நகர் மட்டுமே ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளித்தது. டிசம்பர் 4-ஆம் தேதி நிலவரப்படி, மேற்கு ரயில்வே பாவ்நகர் கோட்டத்தின் வெராவல், பாவ்நகர் டெர்மினஸ், பொடாட், தண்டூகா மற்றும் காந்திகிராம் ஆகிய ஐந்து நிலையங்களில் செல்ஃபி பாயிண்ட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.


படிக்க: ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு


வடக்கு ரயில்வேயும் 100 வெவ்வேறு இடங்களில் பிரதமரின் செல்ஃபி பாயிண்ட் நிறுவப்படும் என்று பதிலளித்துள்ளது. குறிப்பாக, டேராடூன், அம்பாலா, புது தில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் ஆகிய இடங்களில் ஒரே நிலையத்தில் மூன்று பாயிண்டை நிறுவ உள்ளது.

தெற்கு ரயில்வேவின் திருச்சிராப்பள்ளி பிரிவில், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்புகள் மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட 11 நிலையங்களில் பிரதமரின் 3டி செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி கோட்டம் தெரிவித்துள்ளது.

செல்ஃபி பாயிண்ட் நிறுவ எவ்வளவு செலவானது என்பதை வடக்கு, தெற்கு, மேற்கு ரயில்வேக்கள் தெரிவிக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸின் சசி தரூர் மற்றும் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் பிரதமரின் செல்பி பாயிண்டை விமர்சித்துள்ளனர்.

“வரி செலுத்துவோரின் பணத்தை முற்றிலும் வெறுக்கத்தக்க வகையில் வீணடிக்கிறது மோடி அரசு. மாநிலங்களுக்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியும் நிலுவையில் உள்ளது” என்று கார்கே சாடியுள்ளார்.

வெள்ள நிவாரண நிதி கேட்டால் பல்வேறு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா – மோடி கும்பல் சுய விளம்பரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந்தவிதமான கூச்ச நாச்சமும் அற்றவர்கள்.


படிக்க: கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!


பல ஆண்டுகளாக இந்திய ரயில்வே தேவைக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டே இயங்கி வருகிறது. குறிப்பாக தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளில் கூட போதுமான தொழிலாளர்கள் நிரப்பப்படவில்லை. தண்டவாளப் பராமரிப்புப் பணிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. இதை ஜூன் 2, 2023 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற கோர ரயில் விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. சி.ஏ.ஜி அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.

மோடியின் செல்ஃபி பாயிண்டை அமைப்பது என்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய ஆயுதப் படையில் 822 செல்ஃபி நிலையங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது மோடி அரசு. டிசம்பரில் யு.ஜி.சியும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களில் மோடி செல்ஃபி பாயிண்டை அமைக்க உத்தரவிட்டிருந்தது. பின்னர், பல்வேறு எதிர்ப்பு வந்ததன் பேரில் அந்த உத்தரவு கைவிடப்பட்டது.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்கள் மத்தியில் மோடியின் பிம்பத்தை உயர்த்திக்காட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ்-பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றாக இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க