போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!

சுருங்கக் கூறின் வசூலும், லாபமும் தனியாருக்கு! வருவாய் இழப்பும் நட்டமும் அரசுப் பேருந்துகளுக்கு!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!

மிழ்நாட்டில் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 27,000 காலிப்பணியிடங்களை நிரப்புவது, நிறுத்தப்பட்ட 5000 பேருந்துகளை மீண்டும் இயக்குவது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 8 அன்று அரசுடன் நடந்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையிலேயே இப்போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ”அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு” சார்பில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். நெருக்கடியான நிலையில் தவிர்க்கவே முடியாமல் ஏன் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம் என்பதை அதில் கூறியுள்ளனர். இது வினவு தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதலான செய்திகளையும், அரசியல் ரீதியான அம்சங்களையும் குறிப்பிட விரும்புகிறோம்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை பட்டியலிட்டு, அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அன்றைய அதிமுக அரசிடம் 324 பக்கங்களில் கோரிக்கை வைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளைத்தான் தொழிலாளர்கள் இன்று எழுப்புகின்றனர். ஆனால் திமுக அமைச்சரோ அரசியல் உள்நோக்கங்களுக்காக தொழிலாளர்கள் போராடுவதாக இழிவுபடுத்துகிறார்.

தொழிலாளர்களின் பிரச்சனைகளோ மிகத் தீவிரமாக இருக்கின்றன. கடந்த 108 மாதங்களாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு காப்பீடு திட்டம் கிடையாது. ஒரு தொழிலாளி பணியின்போது இறந்து விட்டால் அதற்கான பென்சனும் மனைவிக்கு உடனடியாக கிடைப்பதில்லை.

அதேபோல் ஓய்வு பெற்றால் கிடைக்க வேண்டிய பணபலன்கள் உடனடியாக கொடுக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மூன்று தவணைகளாக ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும் இதுவரை கொடுக்கப்படாமல் உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணபலன்களில் இருந்து, போக்குவரத்துக் கழகங்களின் நட்டத்தைக் காரணம் காட்டியும் ஏறக்குறைய 2000 கோடி எடுத்து  நிர்வாகச் செலவிடப்பட்டுள்ளது. தற்போது பணிசெய்யும் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பிடித்தம் தொடர்பான நிதியை எடுத்து போக்குவரத்து கழகங்கள் அதையும் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இதன் மதிப்பு 13,000 கோடி ஆகும். இவையெல்லாம் தொழிலாளிகளின் கவனத்திற்கு வராமலேயே அதிகாரத்திமிரோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல வரவு – செலவு அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி செய்யும் என்றும், கூடுதலாக 24% நிதியும் கொடுக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. அந்த வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை.

ஏறக்குறைய 27000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அதைப் பூர்த்தி செய்வதற்கு எந்த முயற்சியும் இல்லை. இதில் வாரிசுதாரர் பணியிடங்கள் 8000 என்ற அளவில் நிரப்பப்படாமல் உள்ளது.

இதன் காரணமாகவே 5000 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் மாநகரப் பேருந்துகள் மட்டும் 900 ஆகும். குறிப்பாக, தனியார், ஆம்னி பேருந்துகள் கொள்ளையடிப்பதற்கேற்ப நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் உள்ளன என்பது தற்செயலானதல்ல. இதற்கு எவ்வளவு தொகை அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் கைமாறி இருக்கும் என்பது புரிந்து கொள்ளத்தக்கதே.

சுருங்கக் கூறின் வசூலும், லாபமும் தனியாருக்கு! வருவாய் இழப்பும் நட்டமும் அரசுப் பேருந்துகளுக்கு!

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள இத்தகைய சூழலானது போக்குவரத்துத் தொழிலாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவதற்கு அடிப்படையாக உள்ளது.

ஊதிய ஒப்பந்தம் குறித்து 3 ஆண்டுகளுக்கொருமுறை பேசப்பட்டு வந்த நிலையில் அந்தக் காலவரையறையானது தற்போது 4 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அது குறித்து கடந்த 2023 செப்.1 அன்று பேசப்பட வேண்டிய நிலையில் இன்றுவரை இழுத்தடித்து வந்துள்ளனர். தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்த காரணத்தாலேயே நிர்ப்பந்தம் காரணமாகவே தற்போதைய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தொழிலாளிகளின் வேலைநிலை கொடுமையானதாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணியில் உள்ள தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். தொடர்ச்சியாக பணிநேரத்தைத் தாண்டி 3 Duty பார்க்க வைப்பது, 3 Attendence என்ற நிலையை மாற்றி 2 Attendence என்ற நிலையைக் கொண்டு வந்துள்ளனர். இதனால் 24 மணிநேரம் தொடர்ச்சியாக வண்டி ஓட்டும் சூழலுக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அயற்சி, மன உளைச்சல் காரணமாக விபத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. உயிர் இழப்பு, உடல் பாகங்கள் இழப்பு ஆகியவற்றிற்கு தொழிலாளிகள் ஆளாகின்றனர். ஆனால் விபத்து ஏற்பட்டால் தொழிலாளிகள் மீது அதிகாரிகள் பழியைப்போட்டு அவர்களுக்கு பணிகொடுக்காமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. போக்குவரத்துத் தொழிலாளிகள் மீதான அதிகாரிகளின் அடக்குமுறையும் மிக மோசமானதாக உள்ளது.

இத்தகைய காரணங்களால் பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளிகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு ஆட்பட்டு பெரும்பாதிப்புக்கு ஆளாகும் சூழலும் ஏற்பட்டு வருகின்றது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் துயரங்கள் வார்த்தைகளால் அளவிட முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றது.

இன்னொரு பக்கம் தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இதுவரை பெர்மிட் கிடையாது. டூரிஸ்ட் பெர்மிட் வைத்துதான் ஓட்டுகிறார்கள். RTO, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் யாரும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்டுகொள்வதில்லை. பல அமைச்சர்களின் பேருந்துகள் இப்படி இயங்கிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

அதேபோல் முக்கியமான பயண நேரங்களை தனியார் பேருந்துகளுக்கு அதிகாரிகள் கொடுக்கின்றனர். இதனால் அரசுப்பேருந்துகளுக்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பேருந்துகளின் பயண தூரம் 50 கி.மீக்கு மேலாக அனுமதிக்கப்பட்டது. இன்றும் இது தொடர்கிறது. இதனால் தொலைதூர வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு கொள்ளை லாபம் அடிப்பதால் அரசுப்பேருந்துகளுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.

உதிரிபாகங்களைப் பொறுத்தவரை, முன்பு கூண்டு கட்டுவது (பாடி) என்பது அரசின் சார்பாகவே செய்யப்பட்டு வந்தது. தற்போது அது தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

SETC ல் ஏற்கனவே ஒப்பந்தப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், ASTC உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் தொழில்நுட்ப – பராமரிப்புப் பணிகள் தொடர்பான விசயத்தில் அதனை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் அரசுக்கு உள்ளதாக தெரிகிறது. ஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்புகள் வரும் என்பதால் அமல்படுத்தப்படவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் தனியார் பேருந்துகளை பெருமளவில் அனுமதித்து அதில் ஓட்டுநர் தனியார் நிறுவனத்தின் ஆளாகவும், நடத்துநர் அரசு ஊழியராகவும் வைத்துக் கொண்டு இயக்குவது, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயித்து அதை தனியார் பேருந்து உரிமையாளர்கள் வசூலித்துக் கொள்வது, அவ்வாறு  வசூல் ஆகவில்லை என்றால் அந்த நட்டத்தை அரசு ஈடுகட்டும் என்ற வகையில் ஒரு திட்டத்தை அரசு வைத்துள்ளதாகவும், அதை அமல்படுத்த தயார் நிலையில் உள்ளதாகவும் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம் அதிகாரிகளின் ஊழலும் கொடிகட்டிப் பறக்கிறது. வண்டி கூண்டு (பாடி) கட்டுவது, டயர் கொள்முதல், உதிரி பாகங்கள், பேப்பர் வாங்குவது, ஆயில் வாங்குவது, தொழிலாளிகளுக்கு மெமோ கொடுத்து அதை ரத்து செய்வதற்கு லஞ்சம் வாங்குவது என எல்லாவற்றிலும் அதிகாரிகள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றனர். காலிப் பேருந்து இயக்கப்பட்டால் கூட அதிகாரிகளுக்கு இன்சென்டிவ் போன்ற அயோக்கியத்தனமான நடைமுறைகள் அமலில் உள்ளது. இவை ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

இவ்வளவு மோசமான சூழ்நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் நெருக்கடியில் இருப்பதன் பின்னே போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கைதான் முக்கியக் காரணமாகும்.

ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடியைக் காரணம் காட்டி அந்தத் துறையை முழுவதுமாக தனியார் – கார்ப்பரேட்  முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் வேலையை திமுக தலைமையிலான அரசும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 288(A) அரசுப் பேருந்தை தனியார் எடுத்து ஓட்டிக் கொள்ளலாம் என்கிற வகையில் அனுமதிக்கிறது. இந்தச் சட்டத்திருத்தத்தை திமுக அரசும் ஆதரிக்கிறது.

இன்னொரு பக்கம்  தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன சட்டத்தின் 115, 119, 132, 159 மற்றும் 308 – 316 ஆகிய சட்டப் பிரிவுகளில்  திருத்தம் கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் நிரந்தரப் பணியாளர்களை இனி நியமிக்க வேண்டியது இல்லை. அதேபோல் தற்போதைய பணியாளர்களின் பாதுகாப்பையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் இரத்து செய்கின்றன என்று கூறுகின்றனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள். தற்போது பணிசெய்து வரும் நிரந்தரத் தொழிலாளர்கள் வெளியே போனால் மொத்தமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலைகளை செய்து கொள்ளலாம் என இந்தச் சட்டத் திருத்தங்கள் அனுமதிக்கின்றன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கே இவை வேட்டு வைக்கின்றன.

இதற்கெல்லாம் மூலக்காரணமாக, கடந்த 2015 ம் ஆண்டு பாசிச மோடியின் ஆட்சியில் நிதின் கட்கரி தலைமையில் சாலைப் பாதுகாப்புச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதாவது பொதுப் போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதும் நீக்கி, கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம். மக்கள் குறைந்தபட்சம் சாலையில் நடமாடுவதற்கான உரிமையையும், போக்குவரத்து உரிமையையும் பறிக்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று என்னவெனில், அரசின் போக்குவரத்தை ஒழித்துக் கட்டி அதனை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பது என்பதாகும். போக்குவரத்துக் கட்டணங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்பதாகும்.

மேலும் இச்சட்டப்படி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் – உதிரி பாகங்கள் விற்பனை – இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே சொந்தம் என்ற நிலைமை உருவாகும். மேலும் ஆட்டோ, டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுனர்கள், உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், ஒர்க் சாப்கள், சிறு வாகன உரிமையாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் சூறையாடப்படும் என்பது முக்கியமானது.  இதனோடு இணைத்துதான் போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடியையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி ஜியோ போன்ற கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வளர்ப்பதற்காக உலகிலேயே அதிகமான நெட்வொர்க் வசதி கொண்ட BSNL-ஐ திட்டமிட்டு அழித்தார்களோ அதுபோல் போக்குவரத்துக் கழகங்களை அழித்து, அத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மோடி அரசின் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டே இன்னொரு பக்கம் திமுக அரசு கார்ப்பரேட் திட்டங்களையும், சட்டங்களையும் பாசிச மோடி அரசோடு இணைந்து நிறைவேற்றியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய சமூக நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் மொத்தமாக மக்களின் அடிப்படை உரிமைகளையே காவு கொடுக்கும் கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது திராவிட மாடல் அரசு. ஒரு நியாயத்தை மறுத்துவிட்டு இன்னொரு பக்கம் நியாயம் வழங்குவதாக கூறுவது சமூகநீதி அல்ல.

  • மொத்தமாக, தனியார்மயத்தை அமல்படுத்திக் கொண்டே போக்குவரத்துக்கழகங்களின் பிரச்சினையை ஒருக்காலும் தீர்க்க முடியாது. அது சந்தித்து வரும் பிரச்சினைகளை தீவிரப்படுத்தவே செய்யும்.
  • போக்குவரத்துக் கழகம் என்பது தமிழ்நாட்டு உழைக்கும் மக்களுடைய சொத்து. அதை தனியார் – கார்ப்பரேட்மயமாக்குவது என்பது பச்சையான அயோக்கியத்தனம்.
  • மக்களுடைய சொத்தான போக்குவரத்துக் கழகத்தை நட்டமாக்கி கார்ப்பரேட் கையில் தள்ளிவிடும் சதிகாரர்களான அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மக்கள் போராட்டங்கள் எழ வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர முடியும்!
  • போக்குவரத்துக் கழகங்களின் உண்மையான உரிமையாளர்களான மக்களைத் திரட்டி போராடுவதன் மூலமே, தொழிலாளர்களின் உரிமைகளையும், மக்களின் பயண உரிமையையும் பாதுகாக்க முடியும்!
  • நாட்டையே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காடாக மாற்றி வரும் தனியார்மயத்தை முறியடிப்போம்!


தோழர். பரசுராமன்,
பொதுச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்,
பதிவு எண் – 24/KRI,
தொடர்புக்கு – 97880 11784

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க