செங்கடல்: ஹவுதியின் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: காசா மீதான இஸ்ரேலின் போரில், இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்குகின்ற வகையில் தற்போது ஹவுதி அமைப்பினரால் நடத்தப்படும் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது? சர்வதேச நிலைமைகளில் இதனை எவ்வாறு புரிந்துகொள்வது?

காசா மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் அக்டோபர் 7 அன்று தொடங்கியது முதலே, யேமனின் 80 சதவிகித பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி அமைப்பு இஸ்ரேலைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. செங்கடல் பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி வான்வெளித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதல் இஸ்ரேலால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்தது.

இதன் நீட்சியாக, யேமன் எல்லைக்கு அருகில் உள்ள குறுகலான செங்கடல் பகுதியின் பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாக இஸ்ரேலுக்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்களை (அமெரிக்க கப்பல்கள் உட்பட) ட்ரோன்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் ஹவுதி அமைப்பு தாக்கி வருகிறது. இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான வர்த்தக கப்பல் ஒன்றை ஹவுதி அமைப்பு கைப்பற்றவும் செய்தது. உலக வர்த்தகத்தில் 12 சதவிகித வர்த்தகம் செங்கடல் வழியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக பல்வேறு நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் அப்பிரிக்காவைச் சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செலவீனம் அதிகரிக்கிறது என்று கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் புலம்பித் தவிக்கின்றன. சமீபத்தில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உலகின் முகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான மேர்ஸ்க் (Maersk) செங்கடல் வழியான தனது சரக்குப் போக்குவரத்தை 48 மணிநேரத்திற்கு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பாலஸ்தீனத்தை ஆதரித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருவது அமெரிக்கா – இஸ்ரேலுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இந்நிலையில் ஹவுதி அமைப்பும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இவர்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும். இவ்விரு அமைப்புகளையும் ஈரான் ஆதரித்து ஆயுதங்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும்வரை தங்களது தாக்குதல் தொடரும் என்று இவ்வமைப்புகள் கூறியுள்ளன.

ஹவுதி அமைப்பினரை எதிர்கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் “ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. செங்கடல் வழியாகச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இந்நடவடிக்கையின் குறிக்கோள் என்று அமெரிக்கா கூறுகிறது. இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் இதில் இணைந்துள்ளன என்று அமெரிக்கா கூறிக்கொண்டாலும் பிரிட்டனைத் தவிர வேறு எந்த நாடும் நேரடி உதவி வழங்கவில்லை. அரபு நாடுகளில் பஹ்ரைன் மட்டுமே இதில் இணைவதாகக் கூறியுள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்கா மட்டும் தனியாக ஹவுதிகளைக் கையாளும் நிலைதான் தற்போது உள்ளது.

அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி நாடுகள் பெயரளவிற்கு மட்டுமே ஆதரிப்பதற்கும், சவுதி அரேபியா பெயரளவிற்குக் கூட ஆதரிக்காததற்கும் காரணம் அந்நாட்டு மக்கள் மத்தியிலுள்ள பாலஸ்தீன ஆதரவு மனநிலையும் இஸ்ரேலிய எதிப்புணர்வும்தான். அமெரிக்காவிலும் கூட ஜோ பைடன் தனது இஸ்ரேலிய ஆதரவு காரணமாக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறார்.

மக்கள் போராட்டங்கள்தான் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை ஹவுதி அமைப்பினருக்கு ஏதிரான நடவடிக்கையில் பங்கேற்காமல் பின்வாங்க வைத்திருக்கிறது. இன்னும் வீரியமான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே காசாவில் இனப்படுகொலை நடத்திவரும் இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணியை பின்வாங்க வைக்க முடியும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க