அயோத்தியில் ஜனவரி 22 அன்று முஸ்லீம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. குழந்தை ராமா் சிலை ’பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட உள்ளது. சிலை ’பிரதிஷ்டை’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். சங்கி ரஜினி உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ’பிரபலங்களுக்கு’ இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் முக்கிய பிரபலங்களுக்கு கோவில் அஸ்திவாரம் அமைக்கும்போது தோண்டப்பட்ட மண்ணில் சிறிதளவு பரிசாக வழங்கப்பட உள்ளதாக உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ராமர் கோவில் கட்டுவதற்காக படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் இரத்தம் மண்ணில் சிறிதளவு பரிசாக வழங்கப்படவுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு கோவில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையில் அது திறக்கப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், ஏப்ரல் மாதம் வரவிருக்கும் ’ராம நவமி’ வரை சங்கப் பரிவார கும்பலால் காத்திருக்க முடியவில்லை.
ராமர் கோவில் குடமுழுக்கு அறிவிப்பு வெளியான மறுகணமே அதில் கலந்துகொள்பவர்கள் யார் புறக்கணிப்பவர்கள் யார் என்பது விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. அதில் கலந்து கொள்ளாதவர்களை, குறிப்பாக எதிர்க் கட்சியினரை, “இந்து விரோதிகள், தேச விரோதிகள்” என்று முத்திரை குத்த காவிக் கும்பல் தயாராகிக்கொண்டு இருந்தது. சி.பி.ஐ (எம்), திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியையும் “இந்தியா” கூட்டணியையும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த எத்தனித்திருந்தது காவிக் கும்பல்.
படிக்க: இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?
ஆனால், ஆர்த்தடாக்ஸ் சங்கி ஜோம்பிகளோ மோடிக்கு எதிராகத் திரும்பி மோடியைக் கடித்துக் குதறத் தொடங்கிவிட்டனர். இதை மோடி – அமித் ஷா கும்பலே எதிர்பார்க்கவில்லை.
பார்ப்பனர் அல்லாதவரான மோடி பூஜை செய்வதைச் சகித்துக்கொள்ள முடியாததால் ராமர் கோவிலுக்குச் செல்லப்போவதில்லை என்று ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறிவிட்டார். மற்ற மூன்று சங்கராச்சாரிகளும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
முழுமையாகக் கட்டி முடிக்காமல் கோவிலைத் திறப்பதென்பதும், பார்ப்பனர் அல்லாத மோடி அதைத் திறந்து வைப்பதும் சனாதனத்தையும் வேத மரபையும் மீறுவதாகும் என்று சங்கராச்சாரிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பூரி கோவர்தன் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் நிச்சலானந்த சுவாமி, “சிலையை யார் தொட வேண்டும், யார் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மோடி சிலையைத் தொட்டு அதைத் திறந்து வைப்பார். நான் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமா?” என்று கூறியுள்ளார்.
மோடி ராமர் சிலையைத் தொட்டால் தீட்டுக் கழிக்க வேண்டும் என்றுகூட இவர்கள் சொல்லக்கூடும்.
இதற்கிடையே, ”ராமர் கோவில் அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமில்லை. ராமானந்தர் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம்” என்று ஒரு குழுவினர் உரிமை கோர, ”ராமானந்தர் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்றால் மற்றவர்களிடம் ஏன் பணம் வாங்கப்பட்டது?” என்று மற்றொரு பிரிவினர் அதற்கு எதிர்வினையாற்றி வருவது போன்ற கேலிக்கூத்துகளும் அரங்கேறி வருகின்றன.
இவற்றையெல்லாம் எதிர்பார்க்காத ஆர்.எஸ்.எஸ் அமைதி காத்து வருகிறது. இந்து ராஷ்டிரத்தின் சத்ரபதி சிவாஜியாக முடிசூட்டிக்கொள்ளத் திட்டமிட்டிருந்த பாசிஸ்ட் மோடிக்கு இதுவொரு நெருக்கடியை ஏற்படுதியுள்ளது.
இருப்பினும் திட்டமிடப்பட்டவாறு மோடி தலைமையில் ராமா் சிலை ’பிரதிஷ்டை’நடைபெறவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு பிரதான இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. ”ராமர் கோவில் திறப்பு விழாவின்போது கோத்ரா ரயில் எரிப்புபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது” என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தது நினைவு கொள்ளத்தக்கது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube