அயோத்தியில் ராமன் கோயில் திறப்பையொட்டி, அப்பகுதியில் ஆங்காங்கே புல்டோசர்கள், துளையிடும் இயந்திரங்கள் காணக்கிடக்கின்றன. இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபாதை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று முக்கிய சாலைகளுக்கு, ராமர் பாதை, பக்தி பாதை, ராம ஜென்மபூமி பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழித்தடங்கள் காவி நிறமிடப்பட்டதாகவும், வில் மற்றும் அம்பு கொண்ட ராமாயண உருவங்களாலும், சூலாயுதம், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புதிய விமான நிலையம், இராமாயண தீம் பார்க், இணைய வசதி மண்டலங்கள் (wifi zones) கொண்ட பகுதியாக அயோத்தி மாற்றப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள், தாங்கள் எதிர்ப்பார்த்த வளர்ச்சி இதுவல்ல என்று குமுறுகிறார்கள். ராமன் கோயிலுக்காக யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வரும் ‘மேம்பாட்டு திட்டம்’ என்பது காலங்காலமாக அங்கு வசித்து வந்த மக்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்து எழுப்பப்பட்டு வருகிறது.
“அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்படுகிறது. இனி மத கலவரங்கள், ஊரடங்கு உத்தரவுகள், போலீஸ் கண்காணிப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்” என்று எண்ணியிருந்த மஞ்சு மோதன்வால், அயோத்தி ராமன் கோயில் திட்டத்தின் ஒரு பகுதியாக – சாலை விரிவாக்கத்திற்காக – இடிக்கப்பட்ட தனது வீட்டில் எஞ்சியிருக்கும் பொருட்களை எடுத்துகொண்டே “இனி என்ன இருக்கிறது” என பெருமூச்சு விடுகிறார்.
கடந்தாண்டு ஏப்ரலில், அயோத்தி சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக மஞ்சு மோதன்வால் குடும்பத்தின் வாழ்வாதாரமான சிறு கடையை கொண்ட அவர்களது வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது. இதுவன்றி, பழங்கால கோவில்கள் மற்றும் மசூதிகள் உட்பட, 13 கி.மீ.க்கு சாலையை விரிவுபடுத்த 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கடைகள் இடிக்கப்பட்டன. மஞ்சு மோதன்வால் போல்தான் அப்பகுதியில் வசித்து வந்த பெரும்பாலான மக்கள் ராமன் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டபோது தங்களது வீடுகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் என்று துளியும் எண்ணியிருக்கவில்லை.
படிக்க: ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்
சிறு வியாபாரியான பாபு சந்த் குப்தா, “அயோத்தியின் முக்கிய நகரத்தில் சாதாரண மக்களுக்கு நிலம் எதுவும் இல்லை. அனைத்து நிலங்களையும் அரசு கையகப்படுத்தி வருகிறது. நாங்கள் எங்கு செல்ல” என கேள்வி எழுப்புகிறார்.
நடுத்தர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தையே முழுவதுமாக இழந்து நிர்கதியாக்கப்பட்டிருக்கின்றனர். “பூர்வீக மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திட்டம் நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம், அச்சுறுத்தப்படுகிறோம்” என்கிறார் அயோத்தி உத்யோக் வணிகர் தொழிற்சங்கத் தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருமான நந்து குமார் குப்தா. சாலை விரிவாக்கத்திற்கு வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், தனது வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவரது கடையில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். “சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யாரும் குரல் எழுப்பத் துணிவதில்லை. குரல் எழுப்பினால், போலீஸ் வழக்கு போடுமோ, அல்லது புல்டோசர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது” என்கிறார்.
ராமன் கோயிலுக்கு நூறு மீட்டர் தொலைவில் உள்ள நிலத்தை நம்பியிருந்த மக்களையும் கையறுநிலைக்கு தள்ளியுள்ளது யோகி அரசு. அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த பூ தோட்டத்தை அழித்துள்ளது.
கடந்த ஆகஸ்டு 23 அன்று, சாலை விரிவாக்கத்திற்காக கிஷோர் என்பரது தோட்டத்தில் இருந்து பூக்களை அகற்றுமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து சென்ற அடுத்த நாளே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ், ஜேசிபி இயந்திரத்துடன் வந்து பூச்செடிகளை தரைமட்டமாக்கினர். கையகப்படுத்தப்பட்ட இடத்தின் ஒரு பகுதி சாலையாகவும், மீதமுள்ள பகுதி அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கும் சென்றது. அவ்விடத்தில் விரைவிலேயே கான்கிரீட் கூடாரங்கள் போடப்பட்டது.
“இந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு நாங்கள் என்ன அகதிகளா? எங்கள் பேச்சை கேட்க யாரும் இல்லை. நாங்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் எங்கே போவது?” என கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.
“கோயில் கட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் உள்ளுக்குள் நாங்கள் வருத்தப்படுகிறோம். இது எங்கள் வாழ்நாள் சேமிப்பு. நாங்கள் ஏழைகளாக இருப்பதால் துன்புறுத்தப்படுகிறோம். ஏழைகள் வெளியேற்றப்பட வேண்டும் என ராமர் கூறினாரா?” என்கிறார்கள் தலித் சமுக மக்கள்.
படிக்க: இராமர் கோவில் திறப்பிற்கு எதற்கு அரசு விடுமுறை?
ரகுநந்தன் யாதவ் என்பவர் “என்னிடம் மூன்று எருமைகள் இருந்தன. அவைதான் எனது குடும்பத்திற்கு வாழ்வாதாரம். ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டதும் அவைகளை வைத்து பராமரிக்க முடியவில்லை. கொஞ்ச நாளிலேயே அவையும் இறந்துவிட்டன” என்கிற அவர், “நான் விளையாடி வளர்ந்த இடத்தில் இன்று என்னால் செல்ல முடியாது. நாங்கள் எங்கள் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டால், வேறு எங்கு செல்வோம்” என்கிறார் விரக்தியாக.
42 வயதான கீதா யாதவ் என்பவர் தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு ராமன் கோயில் வளாகத்தின் மேற்கு எல்லையில் வசித்து வருகிறார். அவர், “நான்கு அறைகள் கொண்ட வீடு இருந்தது. ஆனால் இப்போது எருமைகள் வைத்திருந்த கொட்டகையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். என் வாழ்வாதாரம் போய்விட்டது. எனக்கு உணவு இல்லையென்றால், ராமனை பார்த்தால் உணவு வந்துவிடுமா?” என்கிறார்.
கோவிலில் மத சடங்குகளை செய்து வரும் விஷால் பாண்டே என்பவர் “எனது நஷ்டம் ரூ.25 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் அதை விட குறைவாகதான் நஷ்ட தொகை பெற்றுள்ளேன். ராமர் கோயிலால் அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதால், புகார் செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லீம் மக்களின் நிலை என்ன?
பாபர் மசூதி இருந்த பகுதியில் இந்து மக்களுடன் அண்டை வீடுகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு பாபர் மசூதி இடிப்பு தொடங்கி நீண்ட காலமாகவே மதவெறியர்களால் பயங்கரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தபோது அப்பகுதியில் இந்துமத வெறியர்கள் ஈடுபட்ட கலவரத்தில் பல முஸ்லிம் குடும்பங்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளை சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.
கோட்வாலி எனும் பகுதியில் வசிக்கும் முகமது உமர், “இனி அயோத்தியில் ஏராளமான இந்து யாத்ரீகர்கள் வரத் தொடங்குவார்கள். அப்போது நடந்தது மீண்டும் இப்போது நடக்கலாம்” என்று டிசம்பர் 1992 நிகழ்வுகளை நினைவு கூர்கிறார். 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தனது வீடு இந்துத்துவ மத வெறியர்களால் எரிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கட்டிய வீடும், கடையும் கடந்த டிசம்பரில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக முஸ்லிம்கள், இந்துக்கள் என பாரப்பட்சமில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களது வீடுகளும் வாழ்வாதாரமும் ராமன் கோயில் திட்டம் பெயரில் பறிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை எப்படி மீட்பது என்பது தெரியாமல் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.
ஜனனி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube