ராமன் கோவில் திறப்பு என்ற பெயரில் பாசிசக் கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் சகித்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன. அரசு இயந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் மதவெறியைக் கிளப்பி வருகிறது இக்கும்பல். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்தும் காவி பாசிஸ்டுகளுக்கு சேவகம் புரிவதற்கான ஏற்பாடுகளை முனைப்பாக செய்து வருகின்றன. ஆனால், எப்போதும் போல இவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்களாக உழைக்கும் மக்கள்தான் உள்ளனர்.

மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை

அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ராமன் கோவில் திறப்பு காரணமாக 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று ஜனவரி 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இந்த முடிவை திரும்ப பெற்றுள்ளது.

மருத்துவமனைகள் மூடப்படுவதால் டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் 32,000 நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என “தி வயர்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களின் உயிரை காவிக்கும்பல் எப்படி பார்க்கிறது எனபதற்கு இது சிறந்து சான்று.

அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மதியம் 2.30 மணிக்கு முன் உள்நுழைய தேவையில்லை என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

சில மாநிலங்களில் முழு நாள் விடுமுறை

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், கோவா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், திரிபுரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் முழு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் இதே போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இதற்கிடையில், நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசும் விடுமுறை அளித்துள்ளது.

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மக்களை மதவெறிக்குள் மூழ்கடிப்பதற்கான ஏற்பாடுகள்தான்.


படிக்க: உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!


பணம் மற்றும் பங்குச் சந்தைகள் மூடப்படும்

இந்திய ரிசர்வ் வங்கியும் ஜனவரி 22-ஆம் தேதி பண சந்தைகள் மூடபடும் என்று அறிவித்துள்ளது. அரசாங்கப் பத்திரங்கள் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை), அந்நியச் செலாவணி, பணச் சந்தைகள் மற்றும் ரூபாய் ஆகியவற்றில் எந்தவிதமான பரிவர்த்தனைகள் மற்றும் செட்டில்மென்ட்கள் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கூடுதலாக, தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையும் ஜனவரி 22 அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யப்படும் கோவில்கள்

ஜனவரி 22-ஆம் தேதி ராமன் கோவில் திறப்பை முன்னிட்டு ’தூய்மை இயக்கம்’ ஒன்றை மோடி தொடங்கி வைத்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம் செய்வதற்கான இயக்கம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கலாராம் கோவிலில் சுத்தம் செய்வது போல வீடியோ எடுத்து தன் அதிகார்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மோடி.

அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முதல்வர்கள், ஆளுநர்கள்  என ஒட்டுமொத்த காவிக்கும்பலும் இதேபோன்ற ”துடைத்த தரையை துடைப்பது” போன்ற படங்களைப் பதிவேற்றத் தொடங்கியது.

மும்பை நகரத்தின் உலகின் பணக்கார குடிமை அமைப்புகளில் ஒன்றான பிரஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், கோவில் வளாகங்களைசுத்தம் செய்யும் இதேபோன்ற இயக்கத்தில் பங்கேற்க மக்களையும் அழைத்துள்ளது. ஆனால் உண்மையில் மும்பை நகரம் 10 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளுடன் உலகின் 10 அசுத்தமான பெரிய நகரங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குப்பையெல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது போலும்.

இறைச்சிக் கடைகள் அடைப்பு

ராஜஸ்தான் பா.ஜ.க அரசு, ஜனவரி 22-ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து பண்டிகைகளையொட்டி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என அடிக்கடி வன்முறைகள் நடைபெறுவதே இந்த அறிவிப்புக்கான காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது பா.ஜ.க அரசு. வன்முறைகளில் ஈடுபடுவதும் இதே பா.ஜ.க-வின் குண்டர்படை தான் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மின்சார சேவை

மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஏ.கே சர்மா, ராமன் கோவிலில் நடைபெறும் விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் “தடையின்றி உயர்தர மின்சாரம் வழங்கப்படுவதை” உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ஒத்திகை நடத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதேசமயம், நாடு முழுவதும், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் தென் மாநிலங்களில் மின்வெட்டு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா முழுவதும் குறிப்பாக ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ராமன் கோவில் திறக்கப்படும் அதே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா செக்டார் 53-இல் மின்வெட்டு காரணமாக கடுமையான குளிரில் சிக்கித் தவிக்கும் மக்கள்  ஹீட்டர்களை இயக்க முடியாமல் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலவச ரயில் சேவை

சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்தி யாத்திரைக்கு ஆர்வமுள்ள மக்களுக்கு இலவச ரயில் பயணத்திற்கான அனுமதியை அளிப்பதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கரின் புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜனவரி 10-ஆம் தேதி இந்த முடிவை  அறிவித்தார்.

ஆனால் இதே இந்த இந்திய ரயில்வே துறைதான் இதற்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரிப்பதற்காக, பொதுப்பெட்டிகளை குறைத்தது. இதனால், முக்கியமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கழிவறைகளில் அமர்ந்து வர வேண்டிய அவலநிலைக்குக் கூட மக்கள் தள்ளப்பட்டனர். இப்போது ராமன் கோவில் செல்ல மட்டும் இலவச ரயில் சேவை வழங்கப்போகிறார்களாம்.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க