பாலஸ்தீனம்: ஹமாஸின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ள யூத இனவெறி இஸ்ரேல் அரசு!

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.

டந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து தொடங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் நூறு நாட்களைக் கடந்தும் மிகக் கொடூரமான முறையில் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி உலகின் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன; பல நாட்டு அரசுகள் ஐ.நா சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன; சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு போரை நிறுத்துவதற்கான நான்கரை மாதங்களுக்கான மூன்று கட்டத் திட்டத்தை முன்மொழிந்துள்ள போதும், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு அதை உடனே நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார் மற்றும் எகிப்திய அரசுகளால் தங்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு பதிலளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளது, ஹமாஸ் அமைப்பு.

45 நாட்களை உள்ளடக்கிய முதல் கட்டத்தின் போது இஸ்ரேலிய அரசு இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 1,500 பாலஸ்தீனியப் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்பதற்கு ஈடாக, தாங்கள் தங்களிடம் உள்ள அனைத்து பெண் பிணைக் கைதிகள், 19 வயதிற்குட்பட்ட ஆண் கைதிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.

இந்த முதல் கட்டத்தில் இஸ்ரேலிய அரசு, காசாவின் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தனது இராணுவப் படைகளை திரும்ப பெற வேண்டும; தினமும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர், மருந்துகள், எரிபொருள் போன்ற நிவாரணப் பொருட்கள் காசா மக்களுக்கு வழங்கப்படுவதை தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படுத்த வேண்டும்; காசா முழுவதும் முழுமையாகவும், பகுதியளவும், செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை புணரமைக்க வேண்டும்; மக்கள் தங்குவதற்கு தேவையான அளவில் முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் ஹமாஸ் கோரியுள்ளது.

பரஸ்பர இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து முழுமையான அமைதிக்குத் திரும்புவதற்குத் தேவையான பேச்சுகள் இஸ்ரேல் அரசுக்கும் தங்களுக்கும் முடிவடையும் வரை இரண்டாம் கட்டத்தின் அமலாக்கம் தொடங்காது என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் தங்களிடம் மீதமுள்ள பணயக் கைதிகளான ஆண்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மூன்றாம் கட்டத்தில் மீதமுள்ள உடல்கள் மற்றும் எஞ்சியுள்ளவை பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் முன்மொழிந்துள்ளது ஹமாஸ்.


படிக்க: பாலஸ்தீனம் என்ற வார்தையையே அழிக்கத் துடிக்கும் யூத மதவெறி இஸ்ரேல்! | காணொளித் தொகுப்பு


இவ்வாறு மூன்று கட்ட போர்நிறுத்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை தற்காலிகமாக தடுத்து நிறுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறது, ஹமாஸ் அமைப்பு.

ஆனால், இஸ்ரேலிய அரசு காசா பகுதியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்; ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும்; பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக இன அழிப்பு செய்து தங்களின் யூத இனவெறியை தீர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற நோக்கங்களிலிருந்து ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது.

ஹமாஸ் போர்நிறுத்தத் திட்டத்தை முன்மொழிந்த அன்றே, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதை நிராகரித்தார். முழுமையான வெற்றியை அடையும் வரை காசா மீதான போரை இஸ்ரேல் அரசு தொடரும் என்று உறுதியளித்தார். இதற்கு முன்னரும் ஹமாஸ் அமைப்பினரின் போர் நிறுத்தம், காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரை வெளியேற்றுதல் போன்ற பல கோரிக்கைகளை நிராகரித்தே வந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ளதன் மூலம், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது திட்டமிட்டு இன அழிப்புப் போரை நடத்தி வருவதும்; போர்க்குற்றவாளி இஸ்ரேல் அரசு தான் என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது.

இஸ்ரேலிய அரசின் இத்தகைய நடவடிக்கை மூலம், ஹமாஸிடம் பணயக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இஸ்ரேல் அரசுக்கு துளியும் கிடையாது என்பதும் மீண்டும் தெளிவாகிறது. இதற்கு முன்னர் நவம்பர் மாத இறுதியில் பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் அரசு ஒரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததும் கூட, தங்கள் குடும்பத்தினரை மீட்டுத் தரக் கோரி இஸ்ரேலுக்குள் நடைபெற்ற யூத இன மக்களின் போராட்டம் மற்றும் உலகின் பல நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களின் விளைவே ஆகும்.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழித்து, காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.

இஸ்ரேலிய தாக்குதலால் பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் காண்போரின் நெஞ்சைப் பிழிகின்றன. இஸ்ரேலிய தாக்குதலால் இறந்துபோன பாலஸ்தீனியரின் உடலை பூனைகள் கடித்துக் குதறும் வீடியோ, தண்ணீர் தாகத்தால் சாலையில் தேங்கியுள்ள சுத்தமற்ற தண்ணீரை ஐந்து வயதிற்குப்பட்ட சிறுவன் குடிக்கும் வீடியோ போன்ற பாலஸ்தீன மக்களின் அவலநிலையை தெரியப்படுத்தும் வீடியோக்கள் அல்ஜசீரா போன்ற செய்தி ஊடகங்களால் அன்றாடம் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமீபத்திய காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 27,585 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும். 67,100 மேற்பட்ட மக்கள் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்துள்ளனர். தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து 85 சதவிகித மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.

எனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நிர்பந்திக்கும் வகையில் மாபெரும் தேசங்கடந்த மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே, பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை தடுத்த நிறுத்த முடியும். பாசிஸ்டுகளை பணிய வைக்க கடந்த கால வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடமும் அதுதான்.


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க