தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்

தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.

மும்பை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை, “தாராவி மறுசீரமைப்புத் திட்டம்” என்ற பெயரில் அதானிக்கு தாரைவார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது, மகாராஷ்டிர மாநில அரசு. தாராவி மக்களின் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பறித்து, அவர்களை அகதிகளாக்கி அதானிக்கு சேவை செய்ய மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் தமிழர்கள் உள்ளிட்ட தாராவி மக்களுக்கு துரோகம் செய்கிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, அரபு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த தாராவி மறுசீரமைப்புத் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அதானி நிறுவனத்துக்கு தூக்கிகொடுத்தது; ஏலத்திலும் மற்ற கட்டுமான நிறுவனங்களை விட குறைந்த தொகையை முன்மொழிந்திருந்த அதானி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கி சட்டவிரோதமாக செயல்பட்டது; அதானி நிறுவனத்தால் தாராவியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையை அதிகரிப்பதற்காக டி.டி.ஆர் எனப்படும் (Transfer of development rights) விதிகளில் திருத்தங்களைச் செய்தது ஆகியவை கடந்த ஆண்டே அம்பலப்பட்டு போயின.

அண்மைக்காலமாக, தாராவியில் புதியதாக கட்டப்படும் வீடுகளை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக கூறப்படும் மக்களை மும்பை நகருக்கு வெளியே குடியமர்த்துவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது; தாராவியில் புதியதாக கட்டப்படும் வீடுகளை பெறுவதற்கு தகுதியானவர்களாக கருதப்படும் குடிசைவாசிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது என தாராவி மறுசீரமைப்புத் திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன.

குடிசை மாற்றுத் திட்டம் என்ற பெயரில், தமிழர்கள் உள்ளிட்ட சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் வசித்துவரும் இந்த நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறது மகாராஷ்டிரா அரசு என அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக உள்ளதற்கு பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் நலனே காரணமாகும்.


படிக்க: தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!


தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதானி நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து தாராவி மறுசீரமைப்பு திட்ட பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தாராவியில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் வரும் என்றும், 2000 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை கட்டப்பட்ட குடிசைகளுக்கு மட்டுமே புதிய வீடுகள் வழங்கப்படும் என்றும் அடாவடித்தனமாக தெரிவித்துள்ளது.

தாராவியில் புதியதாக கட்டப்படும் வீடுகளை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படும் குடிசைவாசிகளுக்கு மாநில அரசின் வாடகை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மும்பை நகருக்கு வெளியே வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடுகளையும் அதானி நிறுவனமே கட்டிக்கொடுக்கிறது. அந்த வீடுகளின் கட்டுமான செலவாக, தான் நிர்ணயிக்கும் தொகையை தாராவி மக்கள் செலுத்தினால் தான் அந்த வீடுகளில் குடியேற முடியும் என்று அநியாயமாக தெரிவித்துள்ளது, அதானி நிறுவனம்.

புதிய வீடுகள் பெறத் தகுதியில்லாத குடிசைகளை கணக்கெடுக்கும் பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளன. அத்தகைய குடிசைவாசிகளை மும்பை நகரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புறநகர் பகுதிகளில் குடியமர்த்த திட்டமிட்டு அதற்கான பணிகளை அதானி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மும்பையின் கிழக்கு புறநகரில் உள்ள காஞ்சூர்மார்க் பகுதியில் இருக்கும் 200 ஏக்கர் நிலம், முலுண்ட் பகுதியில் உள்ள 58 ஏக்கர் நிலம், வடாலாவில் உள்ள 28 ஏக்கர் நிலம் போன்ற புறநகர் பகுதிகளில் உள்ள நிலங்களில் தாராவி மக்களுக்கு வீடு கட்டப்பட இருக்கிறது. அதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த நிலத்தின் பெரும்பகுதி ஒன்றிய அரசுக்கு சொந்தமானது ஆகும். எனவே இந்த நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும்படி ஒன்றிய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் வழக்கமாக நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு கொடுப்பது தான் வழக்கம். ஆனால் அந்த சட்டவிதிகளையும் மீறி 99 ஆண்டுகளுக்கு நிலங்களை குத்தகைக்கு கொடுப்பது, அதானி கொள்ளை லாபம் சம்பாதிக்க அடிமாட்டு விலைக்கு நிலங்களை தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது.


படிக்க: மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!


மேலும், தாராவி மறுசீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் தாராவி மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டு, கடந்த 23 ஆண்டுகளாக தாராவியில் கட்டப்பட்ட குடிசைகளுக்கு புதிய வீடுகளை பெறத் தகுதியில்லை என்று அடாவடித்தனமாக அறிவிப்பதும்; மும்பை நகருக்குள் தினக்கூலி வேலை செய்து பிழைக்கும் தாராவி மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி துளியும் கவலைப்படாமல் நகரத்திற்கு வெளியே விரட்டியடிப்பதும்; புதிய வீடுகளுக்கு அதானி நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையை தந்தால் தான் அந்த வீடுகளில் குடியேற முடியும் என்று கூறுவதும் மகாராஷ்டிர மாநில அரசும் அதானி நிறுவனமும் கூட்டு சேர்ந்து கொண்டு தாராவி மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட அப்பட்டமான பாசிசத் தாக்குதலாகும்.

தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.

தாராவியில் புதிய வீடுகளை பெறத் தகுதியற்றவர்களில் பெரும்பாலானோர், மும்பை நகருக்கு வெளியே கட்டப்படும் வீடுகளில் குடியேற வாய்ப்பு இல்லை. ஏனென்றால், வீடுகளுக்கு அதானி நிர்ணயிக்கும் தொகையை செலுத்துவதற்கான பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்காது. தாராவியில் 3 லட்சம் குடிசைகள் இலவச வீடு பெற தகுதியற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2014-இல் மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு, நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம், அனல் மற்றும் சூரிய மின்சார உற்பத்தி, பகிர்வு, துறைமுகங்கள் பராமரிப்பு, விமான நிலையங்கள் பராமரிப்பு போன்ற நாட்டின் பல துறைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, அதானியின் ஆதிக்கம் படிப்படியாக நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் கட்டுமான அதிபராகவும் அதானி உருவெடுத்து வருகிறார்.

தாராவி மறுசீரமைப்புத் திட்டம் மட்டுமின்றி, பல சட்டத்திட்டங்களை நிறைவேற்றி ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகள் அதானிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதெல்லாம், ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலகின் முதல் மூன்று பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கீழிறங்கிய அதானியை மீண்டும் தூக்கி நிறுத்தத்தான். மோடியின் ராமராஜ்ஜியத்தில் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க