சென்னையில் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை, கடந்த 12 ஆம் தேதி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 14 அன்று, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்ததாக, பிப்ரவரி 15 அன்று, வேப்பேரியில் உள்ள போலீசு கமிஷனர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஈ.வெ.ரா.சாலை சிக்னல் சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவிகித இட ஒதுக்கீட்டில் விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 1 சதவிகித உள் ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி தேர்வில் விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர்.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு, அவர்கள் மீது போலீசு வன்முறையை ஏவியுள்ளது. கிஞ்சித்தும் மனிதாபிமானமற்ற முறையில் மாற்றுத்திறனாளிகளை தமிழ்நாடு போலீசு குண்டுக்கட்டாக கையாண்டு வருகிறது. போராடும் மாற்றுத்திறனாளிகளை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களை இருட்டு அறைகளில் அடைத்து வைத்து தாக்கியதாகவும் மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போராடுபவர்களை நேரில் சந்திப்பதற்குக் கூட நேரமில்லை. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தான் முதலமைச்சர் சார்பாக போராடும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்துப் பேசி வருகிறார்.
படிக்க: செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!
முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நடைமுறைப் படுத்திவிட்டன. ஆனால், ‘சமூக நீதி காக்கும்’ திமுக அரசு இத்தீர்ப்பை இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
இதனை எதிர்த்து சில மாற்றுத் திறனாளி அரசு அலுவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு 3 மாதத்திற்குள் பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் இந்த தீர்ப்பை தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ்நாடு அரசின் செயலின்மையைக் கண்டித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு 7 மாதங்களுக்கும் மேலாக வாய்தா வாங்கி வருகிறது.
போராடி வரும் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அவர்களை போலீசைக் கொண்டு தாக்குவது தான் சமூக நீதியா? மாற்றுத்திறனாளிகள் ஒரு பொருட்டே இல்லை; தேர்தலில் அவர்களின் ஓட்டுகள் தேவையில்லை என்று கருதுவதால் தான் சமூக நீதிக்காக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசு இவ்வாறு அராஜகமாக நடந்துகொள்கிறது.
பிப்ரவரி 14 ஆம் தேதியன்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே ஆற்காடு சாலையில் இரு திசைகளிலும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
#WATCH | Chennai, Tamil Nadu: Physically challenged youth seeking jobs from the government hold 'Road Roko Protest'. pic.twitter.com/4K6LU4ENVa
— ANI (@ANI) February 14, 2024
நேற்று (பிப்ரவரி 20) லயோலா கல்லூரி அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை மிருகத்தனமாக கையாண்ட போலீசு
அடிப்படை உரிமைகளைக் கோரி போராடி வரும் மாற்றுத்திறனாளிகளை ஒடுக்கி வரும் திமுக அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு புரட்சிகர – ஜனநாயாக சக்திகள் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகிறது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube