6-9 வகுப்பு மாணவர்களுக்கு நாளை (அதாவது பிப்ரவரி 26) முதல்…

திறன் அடிப்படையிலான மதிப்பீடு

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டமான மாநில மதிப்பீட்டுப் புலம் என்று இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இவங்களா பேர் போட்டுக்கிறாங்க போல முன்னோடித் திட்டம் என்று)

சுற்றறிக்கையில் இவர்கள் சொல்லும் நேரத்தில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 6-9 வகுப்பு குழந்தைகளையும் அவர்கள் பெற்ற கற்றல் விளைவுகளையும் (learning outcomes) திறன் வழித் தேர்வுகள் முறையில் (Skills – Competencies based) மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஏனுங்க, இன்னும் இங்கு கற்றலே நிகழாமல் தான் டிசம்பர் மாதம் வரை, 6-9 வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையோருக்கு (60% and above) அடிப்படை வாசிப்புப் பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களை முழுவதுமாக நடத்தக் கூட நேரமே இல்லை என்று ஆசிரியர்கள் புலம்பல் ஒரு பக்கம்.

ஒரு வகுப்பில்/பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள்ளேயே கற்றலை மதிப்பீடு செய்வது என்றால், அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்க்கு தான் மாணவர் பற்றித் தெரியும். அந்த ஆசிரியர் செய்வது தான் உண்மையான மதிப்பீடு. அதோடு மாணவர்களுக்கு எந்தத் திறனையும் நாம் கற்றுக் கொடுக்கவில்லை, வெறும் மனப்பாடத் திறன்களை மட்டுமே வலியுறுத்தும் கல்வி முறையை வைத்துக் கொண்டு திறன்களின் அடிப்படையிலான மதிப்பீடு என்பதை எப்படி வரையறை செய்கிறோம் என்பது புரியாத புதிர்.


படிக்க: பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு? கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி


இந்தத் திட்டம் மாணவரை போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பு செய்யும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் திட்டத்தின் ஒரு வடிவம் தான். இது மையப்படுத்தப்பட்ட அதிகார முறை. இந்த முறையில் மாணவரின் உண்மையான திறனை மதிப்பீடு செய்ய இயலாது. பெரும்பாலும் ஒத்தையா இரட்டையா முறை தான் இதற்கு மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் பாட நூலில் உள்ள கருத்துகளைப் புரிந்து சிந்தித்து பதில் தர வேண்டிய தரமான கல்வி பெறும் இடத்திற்கு நம் குழந்தைகளை ஆசிரியர்களாகிய நாம் இன்னும் தயார் செய்ய வில்லை. இங்குள்ள கல்விச் சூழலும் அத்தகைய மேம்பட்ட நிலையில் இல்லை‌.

வகுப்பாசிரியர் கட்டாயமாக குறிப்பிட்ட தேதிகளில் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் எனக் கூறுகிறது சுற்றறிக்கை. ஆனால் வழக்கமான பாடங்களை நடத்தும் நேரத்தை எங்கிருந்து பெறுவார்கள் என்பதை சுற்றறிக்கையில எங்கேயும் சொல்ல வில்லை. தலைமை ஆசிரியர்களும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், இது போன்ற சுற்றறிக்கைகளை ஆசிரியர்களது பள்ளிக் குழுக்களில் பகிர்ந்து அவர்களை செய்து முடிக்க விரட்டுவது மட்டுமே தலைமை ஆசிரியர்களின் அதிகார வரம்பின் எல்லையாக உள்ளது.

இந்த மாநில மதிப்பீட்டுப் புலம் வழித் தேர்வு என்பது, நம் மாணவர்களுக்கு தேவையா தேவையில்லையா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஆசிரியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் அவர்களுக்கு இது பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வமோ நேரமோ கிடையாது. வகுப்பில் தன்னிடம் உள்ள குழந்தைக்கு முழுமையான கற்பித்தல் நிகழ்த்தி கற்றல் விளைவைக் கொடுக்க முடியாது என்பதை அறிந்து இருந்தாலும் அதிகாரங்களின் கட்டுப்பாட்டில் தலையாட்டும் பொம்மைகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆக எப்படியாவது தேர்வை நடத்தியது போல ஒரு நாடகம் எல்லாப் பள்ளிகளிலும் நடக்கும்.

இந்தக் கடிதத்தில் பார்வையை கவனியுங்கள். இதற்காக ஒரு அரசாணையே போடப்பட்டுள்ளது (அரசாணை எண் 155). நவம்பர் மாதம் 2021/11/16. ஒரு அரசாணை போடப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டம்.

ஏன் கொண்டு வருகிறது கல்வித்துறை, எதற்காக இந்த நடைமுறை, இதனால் மாணவர்கள் அடையும் நன்மை என்ன? நடைமுறை சாத்தியம் என்ன என்பதெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் கவனம் கொண்டனவா? இந்த சங்கத் தலைமைகள் துறையில் உயர் அலுவலர்களிடம் பேசினார்களா என்பதையும் இங்கு நாம் அனைவருக்குமான சந்தேகமாக முன்வைக்கிறோம். ஏனெனில் வகுப்பறையில் பாடம் நடத்தி மாணவர்களை உருவாக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே. உண்மை நிலையைக் கூறி மாணவர்களுக்காக நிற்க வேண்டியதும் சங்கங்களின் பொறுப்பு அல்லவா?


படிக்க: பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி


பாடப் புத்தகங்கள் என்னவோ SCERT தயாரிப்பு என்றாலும், இந்த மதிப்பீட்டு முறையான மாநில மதிப்பீட்டு புலத்தின் தயாரிப்பும் SCERT தான் செய்கிறது என்கின்றனர். இருந்தாலும் மாநில அரசின் நிதி 40% இத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் திட்ட இயக்ககத்தின் (மத்திய அரசின் திட்டம் -சமக்கிர சிக்ஸா அபியான்) 60% நிதி வழங்குவதையும் வைத்துப் பார்த்தால், ஒருவேளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம் இருக்கிறதாகவும் கூட ஒரு வகையில் புரிந்து கொள்ள முடிகிறது (இது ஆய்வுக்குறியதே).

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏன் இந்த மதிப்பீட்டு புலம் வழியாகத் தேர்வுகள் நடத்துவதில்லை? ரொம்ப எளிதாகப் புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் அங்கு மாணவர்களை இச்சமயத்தில் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வேலையில் பிசியாக இருப்பார்கள். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் கல்விக் கட்டணத்தை சரியாகக் கொடுப்பதோடு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையும் பள்ளிகளுக்கு நடக்கும்.

ஆனால் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிகாரத்துக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் பணிக்கு குந்தகம் வராது, பள்ளி மாணவர்கள் கற்றல் இழப்பைப் பற்றியோ கற்றல் அடைவை மதிப்பீடு செய்வது பற்றியோ கவனம் செலுத்த வேண்டியதேவை இல்லை, தலைமை ஆசிரியர்கள், BRT உள்ளிட்டவர்களின் வாட்ஸ் அப் செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தை மாணவர் சமுதாயத்திற்கு இழைக்கும் அநீதிகள் குறித்தான செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தானவற்றுக்கு தரமறுப்பது ஏனோ!

அதோடு ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் நம் முதல்வர் கருத்தை ஆமோதிக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கல்வி அமைச்சர் இந்த ஒரே மாநிலம் ஒரே தேர்வு முறையை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். ஆம்…கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்று சொல்லும் நாம் மதிப்பீட்டு முறைகளை மாநில அளவில் ஒரே மாதிரியாக நடத்த அனுமதிப்பது சரியா என்றும் விவாதிக்க வேண்டும்.

சு.உமா மகேஸ்வரி
கல்விச் செயற்பாட்டாளர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க