தமிழ்நாடு மீனவர்கள் கைது: தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம்

இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

டந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 32 பேர் 5 விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, சுமார் 60 மீனவர்கள் இலங்கை சிறையில் தவித்துவரும் நிலையில், கடந்த ஓரிரு வாரங்களில் 4 முறை வெவ்வேறு இடங்களில் மேலும் பல தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது போல தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் சுமார் அரை நூற்றாண்டு காலமாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். மார்ச் 26-ஆம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்துவது எனவும், ஏப்ரல் 8-ஆம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ராமேஸ்வரம் தாசில்தாரிடம் ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்வது எனவும் முடிவு செய்து இருந்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்காலிகமாக இப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் மீனவர்கள் என அறிவித்துள்ளனர்.


படிக்க: நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!


இதற்கிடையே, தமிழ்நாடு மீனவர்களின் கைதுக்கு இலங்கைக் கடற்படையும் இந்திய ஊடகங்களும் சொல்லும் ஒற்றைக் காரணம், “தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர்” என்பதுதான். இதே பல்லவியை இந்திய மைய ஊடகங்களும் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த பிரச்சாரத்திற்கு பலியான இலங்கைத் தமிழ் மீனவர்கள் சிலர், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகவும், இழுவைமடி வலைகளைப் பயன்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு எந்த முயற்சியும் செய்வதில்லை என்று கூறி இலங்கை அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கின்றனர் என்பதே அப்பட்டமான பொய் பிரச்சாரமாகும்.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கின்றனரா?

1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக் நீரிணைப்பு வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அவ்வுடன்படிக்கையில் உள்ள 5-வது, 6-வது சரத்துகள், கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றன.

உடன்படிக்கையின் சரத்து 5, “மேற்குறிப்பிட்டவற்றுக்கு உட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெற வேண்டுமென தேவைப்படுத்த முடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது” என்கிறது. சரத்து 6, “இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்” என்கிறது.

இவ்வாறு இரு நாடுகளிடையே கடல் பரப்பு எல்லைகள் வரையறுக்கப்பட்ட போதும், இருநாட்டு மீனவர்களும் தங்களது பாரம்பரிய உரிமையைக் கச்சத்தீவு பகுதியிலும் இருநாடுகளின் கடற்பரப்பிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவ்வுடன்படிக்கையில் ஏற்கொள்ளப்பட்ட அம்சங்களாகும். ஆனால் 1983-க்கு பிறகு தமிழ்நாடு மீனவர்கள் மீது படிப்படியாக அதிகரித்த இலங்கை கடற்படையின் அட்டகாசம் 1990-களில் தீவிரமடைந்தது. ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐம்பது தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என கணக்கெடுத்தால், அந்த எண்ணிக்கை பல நூறு பேரைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமாக உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையோ இதைவிட பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.

எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இலங்கைக் கடற்படை மேற்கண்ட ஒப்பந்தத்தை மீறி தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்தும் தாக்கியும் வருகிறது.

ஏன் இந்திய அரசு கண்டுகொள்ள மறுக்கிறது?

மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. அரசானது மீனவர்களை, மீன்பிடித் தொழிலிருந்தும் கடல்பரப்பிலிருந்தும் வெளியேற்றும் வகையில் சாகர் மாலா திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தும், இந்திய கடல் மீன் வளச் சட்டம் 2021, இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 என அடுத்தடுத்த புதிய சட்டங்களை நிறைவேற்றியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்று விவசாயச் சட்டங்களின் வாயிலாக விவசாயத்தை முழுக்க கார்ப்பரேட் பகாசுர கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல முயற்சி செய்ததைப் போல, கடல்சார் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் மீன்பிடித் தொழிலை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்ப்பது; கடற்பரப்பை கார்ப்பரேட் பகாசுரக் கம்பெனிகளின் கனிமவளக் கொள்ளைக்கும் சுற்றுலா கேளிக்கை விடுதிகளுக்கும் திறந்துவிடுவது என்ற நாசகர திட்டம் தீட்டி காத்திருக்கிறது பாசிச மோடி அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒக்கி புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படும்போது கூட எந்தவித உதவிகளையும் செய்யாமல் தனக்கே உரிய பாசிச திமிரோடு நடந்து கொள்வது என்ற திட்டமிட்டு செயல்படுகிறது மோடி அரசு.


படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !


இயற்கைச் சீற்றங்கள் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாமல், மீன்பிடித் தொழிலை விட்டு மீனவர்கள் தாமாகவே வெளியேற வேண்டும் என்று பாசிச மோடி அரசு பிணந்தின்னிக் கழுகு போலக் காத்திருக்கிறது. அதற்கேற்ப சரியான தருணங்களைப் பயன்படுத்தி மீனவர்களை வஞ்சித்து வருகிறது.

மாநிலத்தை ஆண்ட, ஆளும் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளுக்கும் கார்ப்பரேட் நலனே கொள்கையாக உள்ளது. எனவே மீனவர்கள் பாதிக்கப்படும்போது அறிக்கை விடுவது கடிதம் எழுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடுகிறது. கடந்த மார்ச் 10-ஆம் தேதி 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டபோதும் கூட ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு முதல்வர் ஸ்டாலின் அவரது வேலையை முடித்துக் கொண்டார்.

களப் போராட்டங்களே மீனவர்களைக் காக்கும்

அரசுகள் நடைமுறைப்படுத்தும் கார்ப்பரேட் நலத் திட்டங்களால் பாதிக்கப்படும் மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் என அனைவரும் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க அமைப்பாகிப் போராடுவது மட்டுமே தீர்வாக அமையும்.

வீரம்செறிந்த விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இதற்கான சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அப்போராட்டம்தான் மூன்று விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைத்தது. இப்போது, “உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறு” என்ற முழக்கத்தோடு இரண்டாம்கட்டப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்தத் தேர்தல் சமயத்தில் டெல்லி விவசாயிகளின் பாதையில், மீனவர்கள் அமைப்பாவதும் தன் வாழ்வுரிமையைக் காக்கப் போராடுவதும்தான் இந்திய அரசைப் பணியவைக்கும். பிற கட்சிகளையும் இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்த வைக்கும்.


முகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க