டந்து முடிந்த – இல்லை.. இல்லை.. பாஜக பாசிச கும்பலால் விரைவாக முடித்துக் கொள்ளப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்யவிருந்த 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் ஒன்றான தேசிய கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) பெருவாரியான மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது படகோட்டி திரைப்படத்தில் வரும் “கடல்மேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்” என்ற பாடல் வரிகளே. கரையில் மட்டுமல்ல, கடலிலும் வாழத் தகுதியற்றவர்களாக மீனவர்களை மாற்றுவதே இந்த கடல் மீன்வள மசோதா.

இம்மசோதாவின் படி, மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு உட்பட்டே மீன்களை பிடிக்க வேண்டும். அதேவேளையில் எந்த வகையான மீன்களை பிடிக்கப்போகிறார்கள் என்பதையும் முன் கூட்டியே அரசு அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.

படிக்க :
♦ மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

கரையில் அரசு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட மீன் வகைகளை மட்டுமே பிடிக்க வேண்டும். இதை மீறினால் முதல்முறை அபராதமும்; இரண்டாவது முறை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும்; மீன்றாவது முறையும் மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும்; மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது முடக்கப்படும்.

அப்படியென்றால் மீதமுள்ள கடல் மைல்களில் யார் மீன் பிடிப்பார்கள்? ராட்சத பகாசுரக் கம்பெனிகளும் அதன் ராட்சதக் கப்பல்களும் வலைகளும் தான். இவைகளன்றி மீன் பிடி தொழிலில் ஈடுபடும் (கட்டுமரப்படகு, நாட்டுப்படகு) எந்திர நாட்டுப்படகு, எந்திரப்படகு, விசைப்படகு என்ற 3 வகையினரை பெரும் அளவில் பாதிக்கும்.

மேலும், 12 கடல் மைல் தொலைவுக்குள் மட்டும்தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை. இதனால் முதலீடு, பராமரிப்பு செலவுகளுக்கேற்ற வருவாய் இருக்காது. நடுக்கடலுக்கு செல்லும்போது மட்டுமே இதற்கான வருவாயை எட்ட முடியும்.

கரையில் ஒப்புக் கொண்டபடி, இந்த வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும். மற்ற மீன் வகைகள் கிடைத்தாலும் திருப்பி கடலிலேயே விட்டு விட வேண்டும் என்பது கவைக்கு உதவாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடலின் சூழலுக்கேற்ப பலவகை மீன்கள் வாழவே செய்யும். அவைகள் அனைத்தும் வலையில் சிக்கவே செய்யும். இவற்றை தவிர்க்க முடியாது. இவைகளை திருப்பி விட வேண்டும் என்ற நிபந்தனை மீனவர்களின் முதலீட்டிற்கான வருவாயை தடை செய்து; அவர்களின் வாழ்வுரிமையை பறிப்பதாகவே அமையும்.

இதைவிடக் கொடுமை மசோதாவின் விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லையெனில் அபராதம், அதையும் மீறினால் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை, தொழில் முடக்கம். இதன்மூலம் மீன்களின் வாழ்வுரிமையைப் பறித்து தற்கொலைக்கு தள்ளும். இதைவிட வக்கிரம் வேறு என்ன இருக்க முடியும்?

இத்தகைய சட்டங்களும், மசோதாக்களும் நம் கடலின் மீன் வளத்தை நம் நாட்டு மீனவர்களுக்கும், மக்களுக்கும் சேர்க்க தகுதியற்றது என்பதை நிறுவுகிறது. இது இன்று மட்டும் நடந்த நிகழ்வல்ல.

இதற்கான அடிக்கல்லை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே நாட்டப்பட்டது. தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உடிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.

ஆனால், அன்றைய தினத்தில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவு அன்றைய நரசிம்மராவ் அரசால் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு முன்பும், பின்பும் பல்வேறு ஒழுங்காற்று மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் மீன்வர்களின் அயராதப் போராட்டங்களினால் அவை தோல்வியையே தழுவி இருக்கின்றன. குறிப்பாக தற்போது 2021-ல் கொண்டு வரப்போகும் மசோதா ஏற்கனவே 2009, 2019-ல் கொண்டு வரப்பட்டு மீன்வர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

இது மீனவர்கள் பிரச்சனை என்று நாம் ஒதுங்கி இருக்க முடியாது. போராடியாக வேண்டும். ஏனெனில் நம் அனைவரின் அன்றாட உணவோடு தொடர்புடைய மீன் பிடி தொழிலில் பகாசுரக் கம்பெனிகளின் ராட்சத கப்பல்களை அதன் வலைகளை அனுமதித்தால், நாம் விரும்பி உண்ணும் பலவகை மீன்கள், ‘புத்தம் புதியதாகக்’ கிடைக்காது. அவைகளை அவர்கள் கப்பலிலேயே சுத்தம் செய்து டப்பாக்களில் அடைத்து அங்கிருந்தே தேவைப்படும் சந்தைகளுக்கு அனுப்பி விடுவார்கள். வேண்டுமானால் டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்களும், குளம், குட்டைகளின் மீன்களும்தான் நமக்கு கிடைக்கும். தரமான மீன்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பன்னாட்டு கார்ப்பரேட் மீன் பிடி கப்பல்கள், ராட்சத வலைகள் மூலம் முட்டைகள், குஞ்சுகள், தாய் மீன்கள், இறால்கள் அனைத்தையும் சேர்த்து அள்ளி விடுவார்கள். இதனால், மீன்வளம் அடியோடு அழிந்து, மீன் உற்பத்தியையே தடை செய்யப்படும். இதுதான் தனியார்மய தாரளமய உலகமயத்தின் சாதனை; நமக்கோ வேதனை. அதே வேளையில் நம்முடைய மீனவர்களோ, வலையில் சிக்கும் தாய் இறால்களையும் மீன்களையும் மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்கள். அவர்கள் வலையில் குஞ்சுகளும் முட்டைகளும் சிக்காது. அப்படியே ஒரு சில நேரங்களில் குஞ்சுகளும் முட்டைகளும் சிக்கினாலும் அவைகளை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்கள். ஆகையால் மறுஉற்பத்திக்கு தடை ஏற்படாது. மீன்வளம் அழியாது.

நாட்டையும் மக்களையும் பாதிக்கும் இது போன்ற மசோதக்களை ஏன் ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என்று கேள்வி எழலாம். இதற்கு பதில் நமது ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கமும் மறுகாலனியாக்கத்திற்கு கோடாரி கொம்பாக மாறியதன் விளைவே ஆகும்.

இதற்கு எதிராக இதுவரை பல்வேறு போரட்டங்கள் நடத்ததையும் கண்டோம். இனிமேல் போராட்டத்தை தொடர்ச்சியாக – இடைவிடாமல் நடத்திதான் ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது கூட தமிழகத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்ததையும், ஊர்வலத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். இருப்பினும் இவைகளை விட இன்னும் மூர்க்கமாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் தற்போது நடக்கும் அதானி, அம்பானி கும்பலால் RSS, BJP தலைமையில் நடத்தப்படும் பாசிச ஆட்சி இதற்கெல்லாம் (தற்போதையப் போராட்டங்களுக்கு எல்லாம்) அசைந்து கொடுக்காது.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

லட்சக்கணக்கான விவாசாயிகள் மாத கணக்கில் போராடியும் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரைப் பறி கொடுத்தும் வளைந்து கொடுக்காததோடு, கொடூரமாக ஒடுக்கவும் செய்தது மோடி அரசு. எனவே, மீனவர்கள மட்டுமல்லாமல். விவசாயிகள், தொழிலாளர்கள் அதே பிரிவினர் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது இந்த தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் என்பதை நினைவில் நிறுத்தி அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த வகையில் குறிப்பாக ஆட்சியாளர்களுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் போராடினால் ஒழிய இதற்கு விடிவும் பிறக்காது. இக்கோடரிக் கொம்பான பாசிசக் கும்பலை விழ்த்தவும் முடியாது.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க