டல் மற்றும் கடல்சார் வளங்களையும், கடல்வழிப் போக்குவரத்தையும் ஒட்டுமொத்தமாக பெரும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் தாரைவார்ப்பதற்கான வேலைகளை மோடி அரசு சத்தமின்றி செய்து வருகிறது.

கடந்த ஜூன் 22, 2021 அன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கடற்கரை மற்றும் சிறு துறைமுகங்களையும் தன்னகத்தே கொண்ட ஒன்பது மாநில முதல்வர்களுக்கு ஒன்றிய மோடி அரசு கொண்டு வரவிருக்கும் இந்திய துறைமுகங்கள் மசோதா -2021-ஐ புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் என்பது நாம் அறிந்ததே.

படிக்க :
♦ குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, கோவா, மராட்டியம் ஆகிய 9 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த புதிய சட்ட மசோதா இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

தமது கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், இதுவரையில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறு துறைமுகங்கள் அனைத்து சீராகவும் சிறப்பாகவும் இயங்கி வருகின்றன என்றும் அப்படி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சிறிய துறைமுகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு எடுக்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சரகம் வரைவாக அறிமுகப்படுத்தியுள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021-ல் சிறிய துறைமுகங்களுக்கான தற்போதைய மேலாண்மை நடைமுறையை மாற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

எண்ணூர் துறைமுகம்

ஏற்கெனவே இருக்கின்ற இந்திய துறைமுகங்கள் சட்டம் (1908)-ன் படி, சிறிய துறைமுகங்களுக்கான திட்டமிடுதல், வளர்ச்சி, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்தும் மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்தன.

தற்போது இந்த புதிய சட்ட வரைவு மசோதாவானது, மாநில அரசிடம் இருந்த அதிகாரத்தை பறித்து, இதுவரையில் மாநில அரசுக்கு ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்த “கடற்சார் அரசு மேம்பாட்டுக் கவுன்சில்” எனும் அமைப்பின் கையில் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.

சிறிய துறைமுகங்களை மேலாண்மை செய்வதில் மாநிலங்களின் மேலாண்மையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும், பிற மாநிலங்களும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

சிறிய துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் மாநில அரசின் கையில் இருப்பதில், மோடி அரசிற்கு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது?

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு முதல், ஒரே நாடு ஒரே மொழி என்பது வரை ஒரே நாட்டை நோக்கி மோடி அரசாங்கமும், சங்க பரிவாரக் கும்பலும் முன் வைத்து நடைமுறைப்படுத்தும் கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ நிகழ்ச்சிரலுக்கு ஏற்ற படிதான் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றி வருகிறது மோடி அரசு.

ஒரு நாட்டின் சர்வதேச அளவிலான பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதில் துறைமுகங்கள் மற்றும் விமான சரக்குப் போக்குவரத்து ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தையும் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்களிடம் ஏற்கெனவே தாரைவார்த்துவிட்டது மோடி அரசு.

தற்போது அடுத்தகட்டமாக, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு துறைமுகங்களையும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காகவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளது மோடி அரசு.

தொலைதொடர்புத்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை வளர்க்க “டிராய்” எனும் அமைப்பை உருவாக்கி அதற்கு முழு அதிகாரத்தையும் வழங்கியதைப் போல சிறு துறைமுகங்களின் கட்டுப்பாட்டையும் மையப்படுத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது.

தூத்துக்குடி துறைமுகம்

இந்த வகையிலும், மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற வகையிலும், இச்சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், பிற மாநிலங்களோடு இணைந்து இச்சட்டத்தை எதிர்க்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இது தவிர, ஆழ்கடல் வளங்களை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முடிவையும் தற்போது மோடி அரசு எடுத்துள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் நிதித்துறை கமிட்டி சமீபத்தில், ஆழ்கடல் அகழ்வுக்கு ரூ.4,077 கோடி மதிப்பிலான செயல்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.

இந்த அகழ்வு என்பதன் பொருள், கடலில் இருக்கும் வளங்களை மீன் முதல் கடலின் கீழ் கிடைக்கும் தாதுப் பொருட்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் வரை அனைத்தையும் அகழ்ந்து எடுப்பதுதான்.

இந்த புதிய செயல்திட்டத்தின் படி, நமது நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள மீன் வளம் மற்றும் கனிம வளங்களை எடுத்துக் கொள்ளவும், ‘ஆய்ந்தறியவும்’ உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கிறது. இதில் கொடுமை என்னவெனில், இதற்கு முன்னர் ஒன்றிய அரசால் முக்கியமான கடல் பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட கடற்பகுதிகளையும் கூட தற்போது கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட முடிவெடுத்துள்ளது.

இதன் முதல் கட்டம் 2021 – 2024 காலகட்டத்தில் ரூ.2,823.4 கோடி செலவில் துவங்கப்படும் என்றும் பல்வேறு தனியார் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் இந்தப் பணியில் பங்கேற்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பணியை இந்தியாவின் புவியியல் அமைச்சரகம் ஒருங்கிணைக்கும் என்றும் கூறப்படுகிறது.

படிக்க :
♦ இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !
♦ கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !

ஏற்கெனவே, கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கப்பட்ட தண்டகாரன்யா காடுகள் மற்றும் பிற சுரங்கங்களின் கதி என்னவென்பதை அனைவரும் அறிவர். அப்பகுதியை சுற்றியிருந்த மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இயற்கை வளங்களை கட்டுக்கடங்காமல் சூறையாடின கார்ப்பரேட் நிறுவனங்கள்.

தற்போது, கடல்வளம் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாக பாதிக்கும். மேலும், மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச் சூழலை ஒட்டுமொத்தமாகக் காவு கொடுக்கும் ஒரு நடவடிக்கையை மோடி அரசு செய்யத் துவங்கி இருக்கிறது. தற்போதே இதை தடுக்கத் தவறினால், பின் விளைவுகளை எப்போதும் தடுக்க முடியாது !


கர்ணன்
செய்தி ஆதாரம் : Deshabhimani, Hindustan Times

1 மறுமொழி

  1. ஏற்கனவே ஆயில் ரிக்குகளின் அகழாய்வு உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள கடல்களில் நடந்தே வருகிறது… இதனில் 2000 முதல் 3000 மீட்டர் வரை ஆழம் அகழாய்வு சென்று அதனில் சைடு ட்ராக்காக மேலும் 2000 மீட்டர் உட்புகுந்து பூமியை பிளக்கும் வேலைகள் தொடர்ந்தே வருகிறது… ஏன் சுனாமி என்ற பேரழிவு கூட சுரண்டல் ஆதிக்க லாப வெறியால் ஏற்பட்ட பேரிடர் என்பதை எந்த நிபுணர்களோ அல்லது ஊடகங்களோ வெளியிட்டனவா…!!!???
    மேலும் கடல் வளம் மீனவர் நலம் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய்… கடந்த 1991 உலகமயமாக்கல் தொடர்ந்து இன்றைய வரை ஆழ்கடல் மீன்பிடிப்பில் இறங்கி கொள்ளையிடும் பன்னாட்டு பகாசுர சர்வாதிகார முதலாளித்துவ ஏகாதிபத்திய நிறுவனங்கள் நலன் கருதியே உள்நாட்டு மீனவர்களுக்கு எல்லை வரையறை, இதனில் சேதுசமுத்திரமும் கச்சத்தீவு ஒப்பந்தமும் முக்கிய சாதனம்… இவற்றையெல்லாம் மூடிமறைத்து மழுங்கடிக்கவே மானியம் நிவாரணம் போன்ற நாடகங்கள்… கண்ணெதிரே உள்ள நிலத்தில் நடக்கும் உண்மைகளையே மூடிமறைக்கும் இவர்களுக்கு கண்னுக்கெட்டா நிலையில் உள்ள கடற்கொள்ளைகள் பற்றியான உண்மைகளா வெளிவரப்போகிறது…!!!???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க