கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்னரே, மோடி அரசின் முதல் ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. அந்த உண்மையை மறைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘‘ஒளிரும் இந்தியா’’ உருவாகி வருவதாக இந்துவெறி கும்பல் புளுகியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனாவின் மேல் பழியைப்போட்டு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை மறைக்க முடியாமல் ஒப்புக் கொண்டது.

கொரோனா பெருந்தொற்றின் முதலாவது அலைக்குப் பின்னால் பொருளாதாரம் மொத்தமாக ஸ்தம்பித்துப் போனது. இதன் பின்னர் பொதுமுடக்கம் ஓரளவிற்கு தளர்த்தப்பட்டிருந்தாலும், கொரோனா இரண்டாவது அலையின் போதிலிருந்து தொழிற்துறை வளர்ச்சி சரிவிலேயே சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ஒற்றை இலக்கில் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது எதிர் குறியீடுக்கு (மைனஸ்) சென்றுவிட்டது. அதாவது, தரைதட்டிக் கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், பூமிக்குள் சென்று புதைந்துவிட்டது.

படிக்க :
♦ புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

ஆனால் மோடி அரசோ, எந்த கார்ப்பரேட் − காவி பாசிசத் திட்டங்களை அமல்படுத்தியதால் பொருளாதாரம் இந்த நிலைக்கு ஆளானதோ, அதையே மீண்டும் மீண்டும் வெறித்தனமாகச் செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், சென்றமுறை புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், மூன்று வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல அடக்குமுறைகளை ஏவிய மோடி அரசு, இந்தமுறை இன்னும் பல புதிய தாக்குதல்களைத் தொடுக்கும் நோக்கத்தோடு நடக்கின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்ய உள்ளது.

000

தேசப் பாதுகாப்பு குறித்து வாய்கிழியப் பேசும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பல், ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களான 41 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் முதல் நடவடிக்கையாக, அதனை ஏழு நிறுவனங்களாக இணைக்க இருக்கிறது. அரசின் இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிலாளர்கள் போராடி வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக ‘‘அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவைகள் மசோதா’’ −வைக் கொண்டுவந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நோக்கத்தில் 98 பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள 172 சுயேட்சையான இயக்குநர் பதவிகளில் 86 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை புகுத்தியுள்ளது, மோடி அரசு. ஏற்கெனவே கார்ப்பரேட்டுகளுக்குக் கூலிப்படையாக செயல்படும் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மென்மேலும் இவ்விடங்களில் புகுத்தப்படுவதன் மூலம் பொதுத்துறைகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதை மேலும் தீவிரமாகச் செய்து வருகிறது.

இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் அரசின் மிகப்பெரிய பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யையும் நூறு சதவிகிதம் தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளது, மோடி அரசு. கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பால் வளர்க்கப்பட்ட இந்த நிறுவனங்களின் மதிப்பு இன்று பல இலட்சம் கோடிகளாக வளர்ந்து, உயர்ந்தோங்கியுள்ளது. இதனைக் கார்ப்பரேட்டுகளுக்குக் கறி விருந்தாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது, மோடி அரசு.

மேலும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும், பெறவும் உதவியாக இருக்கும் வகையில் 2008−ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் ‘‘தேசிய நிதி செலுத்து வாரியம்’’ (National Payment Corporation of India). இந்த அமைப்பில் நாட்டின் 80−க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்த நிலையில், இதனை மேலும் பலப்படுத்துவதற்குப் பதிலாக இவ்வாரியத்தை முடக்கி வருகிறது, மோடி அரசு.

அதற்கு மாறாக, தனியார் மூலம் இத்தகைய பரிவர்த்தனைகளை நடத்தும் வகையில், சட்ட வாய்ப்புகள் குறைவாக உள்ள யு.என்.ஐ. என்ற அமைப்பை ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பணப் பரிவர்த்தனைகள் முழுவதும் தனியார் கைகளுக்குச் செல்வதற்கும், வங்கிகளில் உள்ள நிதிகள் அனைத்தும் சூறையாடப்படுவதற்கும் வழிவகை செய்துள்ளது மோடி அரசு.

இதேபோல, வருமான வரியை வசூலிப்பதற்கான அரசு நிறுவனக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டும் வகையில், வருமான வரித்துறைக்குப் புதிய இணைய தளம் ஒன்றை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இணைய தளத்தை இன்ஃபோசிஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. நாட்டில் ஏற்கெனவே கார்ப்பரேட் நிறுவனங்களால் வருமான வரி மோசடிகள் சர்வசாதாரணமாக நடக்கும் நிலையில், வரி வசூலிக்கும் இணையப் பரிவர்த்தனையையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடமே ஒப்படைத்துள்ளது, மோடி அரசு.

இவையன்றி, இலவச மின்சாரத்தை ஒழித்துக்கட்டி, மின்சாரத் துறையை முற்றிலும் தனியார்மயக்கும் ‘‘மின்சாரச் சட்டத் திருத்த மசோதா’’வையும் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற இருக்கிறது. மக்களின் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு அரசாங்கம் வழங்கிவரும் மானியங்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பது இம்மசோதாவின் முக்கியமான அம்சம்.

‘‘புதிய போக்குவரத்துச் சட்டத் திருத்தம்” அமலுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஓட்டுநர் உரிமம் வழங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் பணியைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திருப்பிவிடும் வேலையை இதில் மோடி அரசு செய்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக, போக்குவரத்து வழித்தடங்களைக் கூட கார்ப்பரேட் நிறுவனங்களிடமே விட்டுவிடும் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறது.

இதன்மூலம் அரசுப் பேருந்துகள் அரசு போட்ட சாலைகளில் செல்வதற்குக்கூட டோல்கேட் என்ற பெயரில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டணம் கட்டுவது போல, நாளை பேருந்து விடுவதற்கே கார்ப்பரேட்டுகளின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலைக்கு இச்சட்டம் கொண்டுசெல்லவிருக்கிறது.

பன்னாட்டுக் கம்பெனிகள் நம் கடல் வளத்தை வரைமுறையின்றிச் சுரண்டுவதற்கு வகைசெய்யும் ‘‘இந்திய மீன்வள வரைவு மசோதா”வையும் இக்கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவுள்ளது, மோடி அரசு. 12 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியைச் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்து அப்பகுதியினைக் கார்ப்பரேட்டுகளின் ஏகபோக உரிமையாக்க உள்ளது. ஏற்கெனவே, இரட்டை மடிப்பு வலை, டீசல் விலை உயர்வு, கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை இம்மசோதா முற்றிலும் ஒழித்துக்கட்டி கடலிலிருந்தே அவர்களை விரட்டியடிக்கும்.

இவ்வாறு கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் அனைத்திலும் அதனை மீறுகின்ற சாமானிய மக்களுக்கு சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்க வகை செய்துள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, மக்கள் நலனிலிருந்து அரசு முற்றுமுழுதாக விலகுவதோடு மட்டுமன்றி, அந்த இடத்தில் கார்ப்பரேட் கும்பல்களின் ஆட்சி நிலை நாட்டப்படும் அபாயம் நம் கண்முன் தெரிகிறது.

மேலும், இதுபோன்ற சட்டத்திருத்த மசோதாக்கள் எவற்றையும் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவது என்ற சடங்கைக்கூட மோடி அரசு செய்யத் தயாராக இல்லை. 31 மசோதாக்களைத் தாக்கல் செய்யும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் 19 நாட்கள் மட்டுமே நடக்கவிருக்கிறது. இதில் பாதி நேரம்கூட விவாதங்கள் நடக்கப் போவதில்லை. தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்து பலாத்காரமாக இச்சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றிவிடும். நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தைக் கட்டிக்காத்துவிடத் துடிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட யாரும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

இவையல்லாது, மோடி அரசின் வரி பயங்கரவாதத்தால் நாளுக்கு நாள் உயர்ந்துவரும் பெட்ரோல் − டீசல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ, லாரி, டாக்சி ஓட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படும் அபாய நிலையில் உள்ளனர்.

ஐ.டி. முதல் ஆட்டோமொபைல் தொழில்வரை அனைத்துத் துறைகளிலும் கொத்தாக வேலை பறிப்புகள் நடந்து வருகின்றன. இதுபோக, உலகளாவிய அளவில் புகுத்தப்படும் தானியங்கி எந்திர முறையால் 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

தொடரும் கொரோனா கால ஊரடங்காலும், அரசால் ஊக்குவிக்கப்படும் இணையவழிக் கல்வி முறையாலும் கல்வியை இழந்த லட்சக்கணக்கான ஏழை−எளிய குழந்தைகள் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக குழந்தைத் தொழிலாளர்களாக்கப் படுகின்றனர்.

இப்படியாக, ஒருபுறம் கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதை நோக்கிச் சென்று கொண்டிருப்பதும், இதன் விளைவாக மக்கள் வாழவழியற்ற நிலைக்குத் தள்ளப்படுவதும் ஒருசேர நடக்கிறது.

படிக்க :
♦ லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு
♦ கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று

இச்சூழலை முன்னுணர்ந்து வெடித்தெழக் காத்திருக்கும் மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காக, புரட்சியாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதற்காக ஊபா, என்.ஐ.ஏ. உள்ளிட்ட புதிய ஆள்தூக்கிச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது கிரிமினல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப் படுகின்றன. கருத்தியல் தளத்தில் அடக்குமுறை செலுத்துவதற்காக, புதிய சமூக ஊடக வழிகாட்டு விதிமுறைகளும் திரைப்படத் தணிக்கைச் சட்டங்களும் கொண்டுவரப் படுகின்றன.

எத்தகைய எதிர்ப்புகள் வந்தபோதும் திட்டமிட்ட ரீதியில் தனது கார்ப்பரேட் − இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நிகழ்ச்சிநிரலை நோக்கி வேகமாக முன்னேறிவரும் மோடி கும்பலின் கார்ப்பரேட் − காவி பாசிசப் பேரிருளை கிழித்தெறிவதற்கான ஒரு மக்கள்திரள் எழுச்சியை நாம் உருவாக்காமல் போனால், எதிர் நோக்கும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது என்பதையே நிலைமைகள் காட்டுகின்றன.


புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க