கடந்த அக்டோபர் மாதம் ஒன்றிய பாசிச மோடி அரசானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்கிற பெயரில், இளைஞர்களின் உழைப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒட்டச் சுரண்டுவதற்கான “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்” (PM Internship scheme) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 21 முதல் 24 வரை என நியமித்துள்ளது.
மேலும், பி.எம்.இண்டர்ன்ஷிப் திட்டத்தில் பயிற்சி பெற தேர்ச்சியாகும் இளைஞர்களுக்கு ஓர் ஆண்டிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படும் என்றும் இந்த பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை என்ற பெயரில் மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பயிற்சியின் அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
முக்கியமாக இங்கு கவனிக்கவேண்டியது இளைஞர்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 தொகையில் ரூ.500 மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களால் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.4,500 மக்களின் வரிப்பணத்திலிருந்து மோடி அரசே வழங்கும். அதாவது பயிற்சி என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக இளைஞர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு, இளைஞர்களுக்கு வழங்கப்படும் அடிமாட்டு கூலியைக் கூட மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊதியமற்ற வேலையாட்களை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.
மேலும், பயிற்சி முடிந்த பின்பு நிரந்தர வேலை வழங்கப்படும் என்று சொல்லுவதெல்லாம் அதிகப்படியான இளைஞர்களை கார்ப்பரேட் நிறுவனங்களை நோக்கி ஈர்ப்பதற்காகவே அன்றி வேறல்ல. ஏனென்றால்,பயிற்சி முடிந்த பின்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்போவது கிடையாது. தன்னுடைய லாபத்திற்காக பயிற்சியை முடித்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சுழற்சி முறையில் அடுத்தடுத்து புதிய இளைஞர்களை இந்நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளும்.
இன்று நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை உள்பட அனைத்து துறைகளிலும் நிரந்தரப் பணி படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். ஒப்பந்த வேலைமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத மோடி அரசானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒப்பந்த முறையை விட மோசமான கொத்தடிமை முறையை தொழில்துறையில் நடைமுறைப்படுத்துகிறது. மோடி அரசின் புள்ளிவிவரப்படியே, நாட்டின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.2 சதவிகிதமாக அதிகரித்துள்ள, நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்கிறோம் என்ற பெயரில் மோடி அரசானது வேலையின்மையை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram