Saturday, May 25, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாகுடியுரிமை திருத்தச் சட்டம் பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் வளர்ச்சி நாயகன் என்ற பிம்பம் வடக்கே எடுபடாது என்பதையறிந்த மோடி - அமித் ஷா கும்பல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், மக்களைத் திசைதிருப்பவும், இந்து முனைவாக்கம் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

-

டந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கியது மோடி அரசு. ஆனால், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக உடனே நடைமுறைப்படுத்தவில்லை. அதே சமயத்தில், சட்ட விதிமுறைகளை வகுப்பதற்கான காலக்கெடுவை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நீட்டித்துக் கொண்டதன் மூலம் இச்சட்டம் காலாவதி ஆகாமல் உறுதிசெய்தும், மக்கள் மீது ஏவுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியும் காத்திருந்தது. தற்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பாக, மார்ச் 11-ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், நாடெங்கிலும் மோடி அரசுக்கெதிராக வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்பவும், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதன் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் முடியும் என நம்புகிறது பாசிசக் கும்பல்.

மக்கள் போராட்டங்களும் பாசிசக் கோழைகளும்!

2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனே அதற்கெதிரான போராட்டங்களும் துவங்கி விட்டன. போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டிசம்பர் 15 அன்று போலீசு தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டித்து டெல்லி – ஷாஹீன்பாக் பகுதியில் இசுலாமியப் பெண்கள் துவங்கிய போராட்டமானது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏராளமான பகுதிகளில் ஷாஹீன்பாக் போராட்டங்கள் துவங்கின. சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்த இப்போராட்டங்களில், இதுவரை இல்லாத வகையில் இலட்சக்கணக்கான இசுலாமியப் பெண்களும் இதர உழைக்கும் மக்களும் பங்கெடுத்தனர்.

அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்ற இப்போராட்டத்தை, கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டியும் காவி கும்பலை வைத்து கலவரம் நடத்தியும் ஒடுக்கியது மோடி அரசு. குறிப்பாக டெல்லியில், போலீசின் துணையோடு காவி குண்டர்கள் கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டு பெரும் கலவரத்தை நடத்தினர். இசுலாமிய மக்களின் வீடுகளும், கடைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவி கும்பலின் தாக்குதல் மற்றும் போலீசு துப்பாக்கிச் சூட்டில் டெல்லியில் 53 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 25 பேரும் கொல்லப்பட்டனர். எனினும், நாடெங்கிலும் நடந்த மக்களின் உறுதியான போராட்டங்களைக் கண்டு அஞ்சிய மோடி அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தற்காலிகமாகப் பின்வாங்கியது.

ஆனால், தற்போது தனது இரண்டாவது ஆட்சிக்காலம் முடியும் தருவாயில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சுமார் 236 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே அசாம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்களும் துவங்கிவிட்டன. அதே சமயத்தில், போராட்டங்கள் நடக்காமல் தடுப்பதில் மோடி கும்பல் கவனம் செலுத்தியது. டெல்லி மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை செலுத்தியது போலீசு. டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த முறை தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளை குவித்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தியது. சமூக ஆர்வலர்கள் பலரையும் தொடர்பு கொண்டு போராட்டங்களில் ஈடுபட கூடாது என்று மிரட்டியது. கடந்த முறை போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களை வீட்டுக் காவலில் சிறை வைத்தது என ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுதான் சி.ஏ.ஏ.வை இம்முறை நடைமுறைப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.


படிக்க: CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !


இரட்டை நாக்குபாசிஸ்டுகளின் இயல்பு!

அடக்குமுறைகள் செலுத்தினாலும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தால் தங்களுக்குப் பிரச்சினையாகிவிடும் என்பதை உணர்ந்துள்ள பாசிஸ்டுகள், சி.ஏ.ஏ – என்.ஆர்.சி தொடர்பாக வெவ்வேறு வகைகளில் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றனர்.

2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படியே தற்போதும் விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இசுலாமிய மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குவது குறித்து பேசாமல், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதற்கான விதிமுறைகளை மோடி அரசு அறிவித்துள்ளது.

1955-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 1987 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களை மட்டும் குறிவைத்து தவிர்த்துள்ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்த அடிப்படையிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அம்பலமாகிவிட்டது.

கடந்த காலங்களில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பதே இசுலாமியர்களுக்கு எதிரானது தான் என்பதை எவ்விதத் தயக்கமும் இன்றி அறிவித்து வந்தது பாசிசக் கும்பல். “முதலில் குடியுரிமை திருத்த மசோதா (CAB) வரும். அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும். அதன் பிறகு என்.ஆர்.சி.. வரும். அதனால் அகதிகள் கவலைப்பட வேண்டாம், ஆனால் ஊடுருவுபவர்கள் கவலைப்பட வேண்டும். காலவரிசையைப் புரிந்து கொள்ளுங்கள்.” என்றும் “நாடு முழுவதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம். பவுத்தர், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தவிர்த்த ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டிலிருந்து அகற்றுவோம்” என்றும்  2019 ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது அமித் ஷா வெளிப்படையாகப் பேசி வந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி சி.ஏ.ஏ.வுக்கான விதிகளை அறிவித்த பின்னர் அமித் ஷா உள்ளிட்ட பாசிசக் கும்பலின் பேச்சில் சுதி மாறியிருக்கிறது. சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், முன்பு போல சி.ஏ.ஏ – என்.ஆர்.சி இடையிலான தொடர்பை வெளிப்படையாகக் கூறாமல், எதிர்க்கட்சிகள் இசுலாமிய மக்களை தவறாக வழிநடத்துவதாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.


படிக்க: வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!


இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (என்.ஆர்.சி) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றும் “குடியுரிமை திருத்தச் சட்டத்தில் என்.ஆர்.சி.யின் மரபணு கூட இல்லை என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் நாட்டின் சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன. முஸ்லீம் சகோதர சகோதரிகள் அவர்களை நம்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் மீண்டும் அரசியல் செய்கிறார்கள். மூன்று அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை வழங்க முடியும்” என்று பேசியிருக்கிறார். இன்னொரு பேட்டியில், “இப்போது என்.ஆர்.சி இல்லை, சி.ஏ.ஏ பற்றி மட்டுமே பேசுங்கள்”, “இரண்டு சிக்கல்களையும் கலக்க வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார்.

இசுலாமிய எதிர்ப்பை மையப்படுத்தியே தமது அரசியலை அமைத்துக் கொண்ட பாசிஸ்டுகள் திடீரென, சகோதர சகோதரிகளே அஞ்சாதீர்கள் என்று பேசுகிறார்கள்; நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேடு – தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை (CAA-NRC-NPR)கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள், இப்போது அதைப்பற்றி பேச ஏதுமில்லை, இவற்றுக்கு இடையே எந்தத் தொடர்புமில்லை என இரட்டை நாக்கில் பேசுகிறார்கள். காரணம் வேறொன்றுமில்லை, இந்தச் சூழலுக்கு இப்படிப் பேசினால் தான் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இசுலாமியர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கவும், இந்துக்களின் வாக்குகளைப் பெறவும் முடியும் எனக் கணக்கு போடுகிறார்கள். என்.ஆர்.சி பற்றி இப்போது பேசினால் இந்துக்களிடையேயும் பிரச்சினை எழும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

இந்துக்களுக்கும் எதிரானதே என்.ஆர்.சி!

2019-ஆம் ஆண்டு துவங்கிய சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களில், சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் என்ற மூன்றையும் சேர்த்து எதிர்த்ததை அனைவரும் அறிவோம். ஆனால், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை மட்டும் மோடி-அமித்ஷா கும்பல் அமல்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களின் பாதுகாவலன், உள்நாட்டு இசுலாமியர்களுக்குத் தொந்தரவு தர விரும்பாத சகோதரன் போன்ற வேடங்களைப் புனைந்துகொள்ள முடியும் என நம்புகிறது பாசிசக் கும்பல். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய பாசிச சட்டங்களை நடைமுறைப்படுத்தி தனது இந்துராஷ்டிர கனவை நோக்கி நகர்வதே அதன் உண்மையான நோக்கம்.

தேசிய குடிமக்கள் பதிவேடானது இந்து, முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட அனைத்து இந்திய மக்களும் தாங்கள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் என்று தங்கள் குடியுரிமையை நிரூபிக்கக் கோருகிறது. மக்களிடம் உள்ள இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே குடியுரிமையைச் சோதிக்கிறது. அதன்படி பார்த்தால், ஆவணங்கள் இல்லாத எந்த ஒரு நபரையும் சட்டவிரோதக் குடியேறியாக மோடி அரசால் முத்திரை குத்த முடியும். தங்களின் பாசிச நோக்கத்திற்கேற்ப முறையாக ஆவணங்களைக் கொண்டுள்ள எந்த ஒரு நபரையும் சட்டவிரோதக் குடியேறியாக முத்திரை குத்த முடியும்.


படிக்க: சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!


ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கணவனோ அல்லது மனைவியோ மட்டும் என்.ஆர்.சி.யில் இடம்பெற முடியாமல் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவது, வாக்காளர் அட்டையில் – பான் கார்டில் பெயரில் உள்ள குழப்பம் காரணமாக என்.ஆர்.சி.யில் விடுபட்டிருப்பது என ஏராளமான துயர நிகழ்வுகள் அசாம் மக்களிடையே குவிந்து கிடப்பதே என்.ஆர்.சி.யின் பயங்கரத்தன்மைக்குச் சான்று.

ஏனென்றால் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி.யானது யாருக்கு எப்பொழுது குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது வழங்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மோடி அரசின் கொடுங்கரங்களில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது. எந்தச் சூழலில் எந்தப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தங்களின் பாசிச நோக்கத்திற்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலே தீர்மானிக்கும். வெள்ளைத்தாளிலோ 10 ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற ஸ்டாம்ப் ஒட்டிய தாளிலோ உள்ளூர் பூசாரி கையெழுத்திட்டு கூட சி.ஏ.ஏ.வுக்கான தகுதிச் சான்றை வழங்கலாம் என விதிமுறை வகுத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. மக்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் முழு அதிகாரமும் அதிகாரிகளிடம் உள்ளதால் அதிகார மட்டங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களைக் கொண்டே அதை நிறைவேற்றிக் கொள்ளும்.

அசாம் மாநிலத்தில் நிகழும் சம்பவங்களே மேற்சொன்ன நிகழ்வுகள் நிச்சயம் நடக்கும் என்பதற்குச் சான்று. அசாம் மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அசாம் மக்கள் மத்தியில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய அனைவரையும் தங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ள போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக என்.ஆர்.சி.யில் இடம்பெற முடியாத, வங்கதேசத்தில் இருந்து குடியேறிய பல இலட்சம் இந்து மக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அவர்களின் வாக்குவங்கியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பா.ஜ.க. கும்பலின் நலனே காரணம் ஆகும்.

ஆனால், ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான மாநில அரசோ, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இசுலாமியக் குடியிருப்புகளை புல்டோசர்களை வைத்து இடித்து வருகிறது. இவர்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லீம் மக்கள் என்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. சோனிட்பூர் மாவட்டத்தில் காஸிரங்கா வனப்பகுதிக்கு அருகில் குடியிருந்த மக்கள், வனப்பாதுகாப்புச் சட்டத்தின் படி நில உரிமைக்கான ஆவணங்களை வைத்திருந்த போதும் வலுக்கட்டயாமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


படிக்க: வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!


இன்னொரு பக்கத்தில், என்.ஆர்.சியில் விடுபட்டவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம் ஒன்றையும், ஒன்றிய உள்துறை அமைச்சக நிதியுதவியுடன் புதிதாகக் கட்டியிருக்கிறது அசாம் மாநில அரசு. இம்மாநிலத்தில் ஏற்கெனவே ஆறு சிறைச்சாலை வளாகங்களுக்குள் இத்தடுப்பு முகாம்கள் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான மக்களை இந்த முகாம்களுக்குள் ஆண், பெண் என தனித்தனியே பிரித்து அடைத்து அவர்களின் மைய சமூகத் தொடர்புகளை அறுப்பதும், பிறரை பீதியூட்டுவதும் இதன் நோக்கமாக இருக்கிறது.

இவ்வாறு அசாம் மாநில அரசானது என்.ஆர்.சி.யை மக்கள் மத்தியில் இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தன்னுடைய அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாசிச நோக்கத்திற்கு ஏற்ப சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று மோடி கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் குறிப்பிட்ட பாசிச நோக்கத்திற்கேற்ப என்.ஆர்.சி.யை செயல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி. மூலம் மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வருங்காலங்களில் கிறித்துவ மக்கள் மீதும், தனது இந்துராஷ்டிர நோக்கத்திற்கு அடிபணியாத பெரும்பான்மை இந்து மக்கள் மீதுமே தாக்குதல் தொடுக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள பேரபாயமாகும். அதற்கேற்ப சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரமும் மோடி அரசிடம் உள்ளது. இதன் மூலம், கார்ப்பரேட் நலன்களுக்காக தமது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு விடாமல் தடுப்பதும் பாசிசக் கும்பலின் இலக்காகும். ஒரு குடிமகனின் அடிப்படைக் குடியுரிமையைப் பிரச்சினைக்கு உள்ளாக்கி விட்டால் அவரால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளுவதை இலக்காகக் கொண்டே இத்தகு சட்டங்களை இயற்றி வருகிறது மோடி – அமித் ஷா கும்பல்.

அனைத்திற்கும் பின்னே அம்பானிஅதானிகளின் நலன்!

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் போன்ற பயங்கரவாதச் சட்டங்களை மோடி அரசு தீவிரமாக அமல்படுத்துவதற்கான காரணம் காவி கும்பலின் இந்துராஷ்டிரக் கனவு என்று சுருக்கிப் பார்க்க முடியாது. காவிகளின் இந்துராஷ்டிரம் என்பது அம்பானி-அதானிகளின் ஏகபோக நலனுக்காக சர்வாதிகாரமே. அம்பானி-அதானி கும்பல் இந்திய நாட்டையும், அதன் இயற்கைவளங்களையும் வரைமுறையின்றி சுரண்டுவதற்கான ஏற்பாடுகளையே மோடி அரசு செய்து வருகிறது, இந்துக்கள்-முஸ்லீம்கள்-கிறித்துவர்கள் என ஒட்டுமொத்த இந்திய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி, ஒரு பகுதி மக்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்று முத்திரை குத்தி முகாம்களில் அடைப்பது, பிற மக்களை அச்சுறுத்தி நாட்டையே திறந்தவெளி முகாம்களாக மாற்றுவது, இதன் மூலம் எந்தவித எதிர்ப்புமின்றி கார்ப்பரேட்டுகள் கொள்ளையைடிக்க வழிவகை செய்வதே பாசிசக் கும்பலின் நோக்கமாகும். இதற்கான சோதனை முயற்சியாகவே மணிப்பூரில் குக்கிகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியது. அம்மக்களை வந்தேறிகள் என முத்திரை குத்தி ஒடுக்குவதும், மலைப்பகுதிகளைக் கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைப்பதும் இதன் பின்னுள்ள நோக்கங்கள். இதற்காக என்.ஆர்.சி – சி.ஏ.ஏ மூலம் அம்மக்கள் மீது சட்டப்பூர்வமாகத் தாக்குதல் தொடுக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.


படிக்க: Implementation of CAA: Cowards’ Terrorism


பாசிசக் கும்பலின் இந்து முனைவாக்கமும் தோல்விமுகமும்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமைக்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெற்றி, குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் என்று தனது இந்துராஷ்டிரக் கனவை நோக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தது பாசிசக் கும்பல். எனினும், சி.ஏ.ஏ.வுக்கு எதிரான எழுச்சிமிகு போராட்டங்களும், விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டமும் பெரும் திருப்புமுனையாகவும், பாசிசக் கும்பலுக்கு அரசியல்ரீதியில் பெரும் அடியாகவும் அமைந்தன. மணிப்பூரில் குக்கி பழங்குடிகளுக்கு எதிரான கலவரத்திலும் பாசிஸ்டுகள் அம்பலப்பட்டுப் போயினர்.

அதன் பிறகும் கூட மூன்று குற்றவியல் சட்டங்கள் திருத்தம், அயோத்தியில் இராமன் கோவில் திறப்பு, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என இந்து முனைவாக்கத்தை மீண்டும் நிகழ்ச்சிநிரலாக்குவதில் பாசிஸ்டுகள் முன்னேறிச் சென்றனர். ராஜஸ்தான், சத்திஸ்கர், ம.பி ஆகிய மாநிலங்களில் கிடைத்த தேர்தல் வெற்றியும் இதற்கு சாதகமாக இருந்தது. ஆனால், மோடி அரசின் புதிய தண்டனைச் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்கள் போராட்டமும், விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டமும் இம்முறை திருப்புமுனையாக அமைந்தன. கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசால் தங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதோடு, மிச்சமிருக்கும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு வருவதைப் பொறுக்க முடியாத நிலைக்கு மக்கள் வந்துள்ளதையே நாடெங்கிலும் தொடர்ந்து நடக்கும் மக்கள் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் வளர்ச்சி நாயகன் என்ற பிம்பம் வடக்கே எடுபடாது என்பதையறிந்த மோடி – அமித் ஷா கும்பல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், மக்களைத் திசைதிருப்பவும், இந்து முனைவாக்கம் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. எனினும், அசாமில் என்.ஆர்.சி ஏற்படுத்திய பாதிப்பானது, கடந்த 2019-ஆம் ஆண்டில் இவர்கள் சொன்ன பொய்களை எல்லாம் நம்பிய அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் வங்கதேசத்து அகதிகளான இந்து மக்களுக்கு உண்மை நிலவரத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. எனவே தான் வழக்கமான முறையில் ஏறியடித்து இந்துமத வெறியைக் கிளப்பிவிட முடியாமல் தவிக்கிறது பாசிசக் கும்பல்.

ஒருபுறம் மக்கள் போராட்டங்களைக் கண்டு அஞ்சும் கோழையான மோடி – அமித் ஷா கும்பல்; மறுபுறம் இப்போராட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து பாசிசக் கும்பலை வீழ்த்தும் கண்ணோட்டமில்லாத எதிர்க்கட்சிகள் என்ற அவலநிலையே இன்றைய எதார்த்தம். தேர்தல் களத்திலும் கூட இதுவே பிரதிபலிக்கிறது. மணிப்பூர் கலவரத்தால் அம்பலப்பட்டு, வட கிழக்கு மக்களிடம் தனிமைப்பட்டுள்ள நிலையில் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. நேரடியாகப் போட்டியிட அஞ்சி பின்வாங்கியுள்ளது.

மக்கள் எழுச்சியில்லாமல் பாசிசத்தைத் தேர்தல் களத்திலும் கூட எதிர்கொள்ள முடியாது என்பதற்கு மக்கள் போராட்டங்களும், அவற்றைக் கண்டு பாசிசக் கும்பல் அஞ்சுவதும் சான்றாக உள்ளன. சி.ஏ.ஏ எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட மோடி அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஆதரிப்பது, உடனிருந்து போராடுவது மட்டுமன்றி, இப்பிரச்சினைகளுக்குப் பொருத்தமான மாற்றினை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மட்டுமே தேர்தல் களத்தில் கூட எதிர்க்கட்சிகளுக்கு உதவும். இனிவரும் காலம், பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும், எழுச்சிகளும் நிறைந்த காலமாக இருக்கட்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க