மதுரையில் வழக்கறிஞர்களிடம் மூக்குடைபட்டுப்போன பாஜக ‘மோடுமுட்டி’ கும்பல்!

பலரும் கண்டிக்க ஆரம்பித்தவுடன் பயந்து பின் வாங்கி ஓடியது பாசிச பா.ஜ.க வழக்கறிஞர்கள் கும்பல்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து ஜூன் 1 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதற்கு எதிராக பாசிச பா.ஜ.க கும்பலின் வழக்கறிஞர் பிரிவு “மூன்று சட்டங்களின் பெயரை மாற்றுவதற்கெல்லாம் போராடுவீர்களா” என்ற தொனியில் அறிக்கை விட்டு ஒட்டுமொத்த வழக்கறிஞர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி பத்திரிகை செய்தி வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் தான் இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஒன்று கூடி போராட்டத்தை நடத்த ஆரம்பித்தவுடன் 30 பேர் கொண்ட பாசிச பா.ஜ.க வழக்கறிஞர் கும்பல் வழக்கறிஞர் போராட்டத்திற்கு எதிராக முழக்கம் போட்டார்கள்.

கொதித்துப் போன வழக்கறிஞர்கள் “இது சங்கம் எடுத்த முடிவு. இங்கு வந்து அரசியல் செய்கிறீர்களா? சங்கத்தில் முடிவெடுக்கும் போது என்ன கிழித்துக் கொண்டிருந்தீர்கள்? வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்சியில் உள்ளனர். அதை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியுமா?” என ஒட்டுமொத்த வழக்கறிஞர் கூட்டமும் பாசிச பா.ஜ.க கும்பலுக்கு எதிராகத் திரும்பியது. பலரும் பல முனையிலிருந்து கேள்விகளை கேட்டனர். பதில் சொல்ல வக்கற்ற மோடுமுட்டிகளான பாஜக வழக்கறிஞர் கும்பல் “பாரத் மாதா கி ஜே!” என கோசம் போட்டனர்.

ஏற்கெனவே பா.ஜ.க கும்பலுக்கு எதிராகத் திரும்பிய வழக்கறிஞர்களை இது மேலும் கோபப்படுத்தியது. வழக்கறிஞர்களா பா.ஜ.க கும்பலா என்ற நிலைமைக்கு போய் பலரும் கண்டிக்க ஆரம்பித்தவுடன் பயந்து பின் வாங்கி ஓடியது பாசிச பா.ஜ.க கும்பல்.


படிக்க: வழக்கறிஞர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்!


பல வழக்கறிஞர்களும் “மூன்று குற்றவியல் சட்டங்களுக்குள் இருப்பது கூட என்னவென்று இவர்களுக்குத் தெரியாது. பெயரை மாற்றியதால் போராடுகிறோம்” என பேசுகிறார்கள் என சொல்லி எள்ளி நகையாடினர்.

மூன்று குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது, ஒரு சாலையோர வியாபாரியின் மீது தான். அவருக்கு அபராதம் மட்டும் 5000 ரூபாய். முன்பு 200, 500 ரூபாய் என அபராதம் கட்டிக் கொண்டிருந்த சாலையோர வியாபாரிகளை இன்று 5000 வரை கட்ட வேண்டிய நிலைமைக்குத் தள்ளியது இந்த சட்டம் தான். இது உழைக்கும் மக்களுக்கே எதிரானது.

இந்த விஷயத்தை வலியுறுத்தித் தான் பல்வேறு வழக்கறிஞர்களும் பேசினர். இந்த குற்றவியல் சட்டங்கள் மக்களுக்கு எதிரானது மக்களின் உரிமைகளுக்கு எதிரானது எனத் தொடர்ந்து தங்கள் கருத்துகளை முன்வைத்து இன்றைய பொழுது முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இது ஒரு தொடக்கம் தான். மக்களுக்கு எதிரான பாசிச கும்பல், என்றைக்குமே மக்கள் மத்தியில் நிற்க முடியாது. இந்த பாசிச பா.ஜ.க கும்பலை இனம் கண்டு முறியடிக்க ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறது இந்த வழக்கறிஞர் போராட்டம். களம் இறங்குவோம்; இது நமக்கான போராட்டம்! நமது உரிமைகளுக்கான போராட்டம்!

மக்கள் விரோத சட்டங்களான மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்!


ரவி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க