மூன்று குற்றவியல் சட்டங்கள்: தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் டெல்லியில் போராட்டம்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை.

மோடி அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், தில்லி ஜந்தர் மந்தரில் திரண்டு நேற்று (29.07.2024) போராட்டம் நடத்தினர். மனித உரிமைகளுக்கு எதிரான மூன்று கொடிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதில், ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய பா.ஜ.க அரசானது, 1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் (IPC) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் (IE Act) பதிலாக பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Cr.PC) ஒருவரை ரிமாண்ட் செய்யும் அதிகாரம் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய புதிய சட்டம் (BNSS)  பிரிவு 187, நிர்வாகத்துறை நடுவருக்கும் (வட்டாட்சியர்) ரிமாண்ட் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவரை, சட்டவிரோத காவலில் வைக்க சட்டப்படியான அதிகாரத்தைத் தருகிறது. இதன்மூலம் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பெருநகர நீதிமன்றங்கள், மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றங்கள் புதிய  சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன.

ஒருவரை 15 நாட்கள் மட்டுமே ரிமாண்ட் செய்ய முடியும் என்ற நிலையில், புதிய சட்டம், நீதிபதி முன்பு  ஆஜர்படுத்தாமலேயே 90 நாட்கள் வரை எப்போது வேண்டுமானாலும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்துகொள்ள வழி ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஜனநாயக ரீதியில் நடக்கும் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்ட நிகழ்வின்போது போலீசுடன் ஏற்படும் தள்ளுமுள்ளுகளுக்கு புதிய தண்டனைச் சட்டம் பிரிவு 131ன்படி  வழக்கு போட்டு இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்க வகை செய்கிறது.

புதிய சட்டப்பிரிவு 172ன்படி போலீசு அதிகாரியின் வழிகாட்டுதலை மீறும் நபரை அடைத்து வைக்கலாம், சிறைப்படுத்தலாம், வெளியேற்றலாம் என எல்லையில்லா அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் போலீஸ் அடக்குமுறை ராஜ்ஜியத்திற்கு வழி வகை செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சட்டப்பிரிவுகள் மனிதஉரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக்கு ஆதரவாகவும் உள்ளன.


படிக்க: பஞ்சாபில் நடைபெற்ற புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாநாடு!


இவ்வாறு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை. நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைத்து, ஆளும் வர்க்கத்திற்கும், போலீசுத்துறை, அரசு நிர்வாகம் உள்ளிட்ட அவர்களின் அடக்கு முறைக் கருவிகளுக்கு மிருகபலத்தை வழங்குகின்றன. மத வெறியர்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன என்று சட்ட வல்லுநர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர்.

அதனொரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (JAAC), மோடி அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, நேற்று (29.07.2024) தில்லியின் ஜந்தர் மந்தர் வீதியில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

கூட்டு நடவடிக்கைக்குழு (JAAC) தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரியா, சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல்  சொலிசிட்டர் ஜெனரலுமான இந்திரா ஜெய்சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தங்க. தமிழ்ச்செல்வன் (திமுக), தொல். திருமாவளவன் (விசிக), கார்த்திக் சிதம்பரம், ஆர். சுதா, விஜய் வசந்த் (காங்கிரஸ்), ஆர். சச்சிதானந்தம் (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), வை.  செல்வராஜ், கே. சுப்புராயன் (சிபிஐ),  துரை வைகோ (மதிமுக), அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ச. சிவக்குமார், மாநிலத் தலைவர்கள்  முத்து அமுதநாதன், ஷாஜி செல்லன், ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பதாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.


ராஜேஷ்

செய்தி ஆதாரம்: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க