திருப்பூர்: கழிப்பறைக்குள் தங்கவைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் பயன்படுத்திவந்த கழிப்பறையில், ஒரு மாதத்திற்கு மேலாக வடமாநில தூய்மைப்பணி தொழிலாளர்கள் 4 பேரை தங்கவைத்து அங்கேயே சமைத்து, உண்டு, உறங்கி வந்த அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுக்கழிப்பறைகளை பராமரிப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அப்பள்ளிக்கு சென்ற ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னரே, இந்த அவலம் தெரியவந்துள்ளது. துர்நாற்றம் வீசக்கூடிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததை மாநகராட்சி நிர்வாகமும், ஒப்பந்த நிறுவனமும் வேடிக்கை பார்த்து வந்துள்ளது. ஆனால், இச்செய்தி வெளிவந்தபின் ஒப்பந்த நிறுவனத்தின் மீது மாநகராட்சி நிர்வாகம் பழியைப் போடுகிறது.
மாநகராட்சி ஆணையர் பவன்குமார் பதிலளிக்கையில், “மாநகராட்சி பகுதியில் மூன்று பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. ஒப்பந்தக்காரர் அவர்களுக்கு வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் தவறுதலாக கழிப்பறை அறையில் தங்கியுள்ளனர். ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்டவை குறித்து ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்ததும் தொழிலாளர்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
படிக்க: கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு
இவ்வாறு, எந்தவித பொறுப்புணர்வும் அற்ற பதிலை கூறுவது வேடிக்கையாக உள்ளது. பொதுவாக அரசு நிர்வாகம் தவறு நடக்கும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறுவது, காலங்காலமாக அரங்கேறும் கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளிலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு பணியமர்த்தப்பட்டு, அவர்களது உழைப்பை சுரண்டிக்கொழுக்கும் வேலையை இங்குள்ள பெரும்பாலான சிறு, பெரு முதலாளிகள் செய்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசும் அவர்களை கட்டுமானங்கள், தூய்மைப்பணிகள் போன்ற வேலைகளில் குறைந்த கூலிக்காக பணியமர்த்தி சுரண்டுவதைச் செய்து வருகிறது.
மாநகராட்சி மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தூய்மைப்பணியாளர்கள், ஓட்டுநர், நடத்துநர், அரசு அலுவலகங்களில் எழுத்தர் போன்ற பல்வேறு பணியிடங்களைத் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசே,
- வாழத்தகுதியற்ற, துர்நாற்றம் வீசக்கூடிய அறையில் தங்கக் காரணமாக இருந்த ஒப்பந்த நிறுவனத்தையும் மாநகராட்சி அதிகாரிகளையும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.
- பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
- மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதைக் கைவிட்டு நிரந்தப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட வேண்டும்.
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube