தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (National Board of Examinations in Medical Sciences – NBEMS) நீட் முதுகலை படிப்புக்கான நுழைவு அட்டையை (Admid Card) இன்று (ஆகஸ்ட் 8 ஆம் தேதி) வெளியிட உள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 31 அன்று தேர்வு எழுதுவதற்கான மையங்களை தேர்வு வாரியம் அறிவித்தது.

ஆனால் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் வெகு தொலைவில் இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

தேசிய தேர்வு வாரியத் தலைவர் அபிஜத் ஷெத் “மாணவர்கள் அதிருப்தியை தெரிவித்த பிறகு சில மாற்றங்களை செய்துள்ளோம். அதேசமயம், மிக அருகில் இடம் ஒதுக்கினால் கூட, மாணவர்கள் 100-150 கிமீ பயணிக்க வேண்டியிருக்கும். எங்களால் முடிந்த அளவு தூரத்தை குறைக்க முயற்சி செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

வாரியத் தலைவரின் மேற்கண்ட கூற்று நிலைமையை அப்போதைக்கு சமாளிப்பதற்கு மட்டுமே என்பது மாணவர்கள் கூறுவதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. நாளை நுழைவு அட்டை வெளியாகும் என்ற நிலையில், முதுநிலை நீட் தேர்வு மையங்களை மாற்றியமைக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு முதலில் குவாலியர் நகரை ஒதுக்கிய தேர்வு வாரியம், பின்னர் அவருக்கான மையத்தை ஜெய்ப்பூருக்கு மாற்றியதாக மின்னஞ்சல் செய்தது. ஆனால் அதற்குள் அவர் குவாலியருக்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார்.


படிக்க: அடுத்தடுத்து வெளியாகும் நீட் முறைகேடு குறித்த ஆதாரங்கள்


”தேர்வு மையம் ஒதுக்கும் விசயத்தில் நடந்த குளறுபடிகள் எனக்கு மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. நான் ஆக்ராவுக்கு சென்று தேர்வெழுத தயார் நிலையில் இருந்தேன். ஆனால் ஒரு நாள் முன்பு தேர்வு தள்ளிப்போவது பற்றிய தகவல் வருகிறது. எனக்கு பணி கிடைப்பது கடினம். கூடுதல் பயணச் செலவு, இரவு தங்குவதற்கான செலவு இவையெல்லாம் எனது சுமையை மேலும் கூட்டுகின்றது” என்று புதுதில்லி லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் பணிபுரியும் தேர்வர் கூறுகிறார்.

விருப்பமான தேர்வு மையத்தை நிரப்பாத இன்னொரு தேர்வர் அஜித் குமார் என்பவருக்கு, முதலில் ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அது தாமதமாக கேரளாவுக்கு மாற்றப்பட்டது.

“நான் இப்போது டெல்லியில் வசிக்கிறேன். தேசிய தேர்வு வாரியம் மையத்தை ஒதுக்கும் வரை நான் காத்திருந்ததால், குறிப்பான இடத்தை நான் தேர்வு செய்யவில்லை. இந்த இடமாற்றம் எனக்கு மனதளவில் சோர்வை ஏற்படுத்துகிறது. இரண்டு நாட்கள் பயணம் செய்து தேர்வு எழுதுவது கடினமானது” என்று அவர் கூறுகிறார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் வினையாற்றும் பலரும் இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அனைத்திந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (Federation of All India Medical Association – FAIMA) உள்ளிட்ட மருத்துவ சங்கங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வர்களுக்கு அருகிலுள்ள தேர்வு மையங்களில் ஒரே கட்டமாக தேர்வு நடத்துவது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கிடையில், “அசாம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளின் நிலைமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, தேர்வுக்கு நெருக்கமாக இதே நிலை நீடித்தால், நிலைமைகளையொட்டி பிரச்சனைகளைக் குறைக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தேசிய தேர்வு வாரியத் தலைவர் ஷெத் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நீட், யு.பி.எஸ்.சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள், சதித்தனங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதுகலை நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் நடக்கும் குளறுபடிகள் பாசிச பா.ஜ.க அரசின், அவர்களுக்கு ஊதுகுழலாக செயல்படும் தேர்வு வாரியங்களின் கையாலாகத்தனத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தின் மீது இவர்களுக்கு எந்தப் பொறுப்புமில்லை என்பதையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


இனியன்

செய்தி ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க