ருமபுரி அருகே பட்டியலினப் பெண்ணை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி மதுபானம் ஊற்றி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 15 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை, பட்டியலினத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 14 அன்று வீட்டை விட்டு சென்ற சுரேந்தர் வீட்டிற்க்கு வரவில்லை. அதே நேரத்தில் அப்பெண்ணும் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் என 20 பேர், சுரேந்தர் வீட்டுக்கு ஆகஸ்ட் 15 அன்று  சென்று சுரேந்தரின் தந்தை செல்வம் மற்றும்  அவரது தாய் இருவரையும் அடித்து மிரட்டியுள்ளனர். அதை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜுன் சுப்பிரமணி, தடுத்தபோது, அவரையும் அடித்துள்ளனர்.

பின்னர், சுரேந்திரன் தாயை இரு சக்கர வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றிச்சென்றுள்ளனர். இதுகுறித்து சுரேந்திரனின் தந்தை மொரப்பூர் போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, மொரப்பூர் போலீசு ஆகஸ்ட் 16 ஆம் தேதி கடத்தப்பட்ட சுரேந்திரனின் தாயாரை மீட்டு அரூர்  அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், சுரேந்திரனின் தாயாரைக் கடத்திச் சென்ற பூபதி, செல்வி, பொன்ராசு, கலையரசன், வேலு என ஐந்து பேர் உள்ளிட்ட 15 மீது எஸ்.சி / எஸ்.டி, பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


படிக்க: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்


இதுகுறித்து கடத்திச் செல்லப்பட்ட பெண் கூறுகையில், “காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திரவதைகளை செய்தனர். கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும்போது ஆடை இன்றி இருந்தேன். பின்னர், உன் மகன் இருக்கும் இடம் சொல்லவில்லை என்றால் குடும்பத்தோடு கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்றனர். அதன் பிறகு போலீசார் அந்த இடத்திற்கு வந்து எண்ணை மீட்டுச்சென்றனர்” என்றார்.

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் கூறுகையில், “பட்டியலினப் பெண்ணை கடத்தி  சென்று நிர்வாணப்படுத்தி வாயில்  மது ஊற்றி பல்வேறு சித்திரவதைகளை சாதி ஆதிக்க கும்பல் செய்துள்ளது. இரவு முழுக்க சித்திரவதை செய்து பின்னர் விடுவித்துள்ளனர். இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்யவேண்டும். சாதி ஆதிக்க சக்திகளால் முருக்கம்மாள் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து அரூர் பகுதியில் பட்டியலினத்தவர்கள் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப் பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்களில் போலீசார் குற்றவாளிகளிடம்  மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இது போன்ற விசயங்களில் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே, பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படும் போது போலீசு விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் வன்கொடுமையை தடுக்கமுடியும்” என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆதிக்க சாதியினரிடையே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் ஊடுருவல் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த கும்பலை தடுத்து நிறுத்தினால் தான், சாதிய வன்முறைகளை குறைக்க முடியும்.


ராஜேஷ்

செய்தி ஆதாரம்: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க