20.08.2024

யு.பி.எஸ்.சி குரூப் ஏ பிரிவில் 45 காலிப் பணியிட நியமனங்களில்
ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!

கண்டன அறிக்கை

யு.பி.எஸ்.சி குரூப்-ஏ பிரிவில் 10 இணைச் செயலர்கள், 35 துணை செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் என மொத்தம் 45 காலிப் பணியிடங்கள் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படாமல், தனியார் அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற அதிகாரிகளின் மட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் ஆகும். பல்வேறு அரசுத் துறைகளில் துணைச் செயலாளராக இவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்.

ஐ.ஏ.எஸ் போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு காலம் முழுவதும் படித்து அதற்காக தன்னை தயார் செய்து வரும் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கு இனி இது போன்ற அதிகாரிகளாக வர முடியாது என்பதற்கான முட்டுக்கட்டை தான் இது.

திமுகவின் எம்பி பி.வில்சன் குறிப்பிடும்போது “மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் / துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?

மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்


“பிரதமர் நரேந்திர மோடி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு பதிலாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மூலம் அரசு ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம் அரசியலமைப்பை தாக்குகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். மேலும் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தீர்க்கமான அரசுப் பதவிகளில் அமர்ந்து என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்புகிறார்.

இனி நடுத்தர, அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த யாரும் இது போன்ற பணியிடங்களுக்கு போக முடியாது என்பதும், இட ஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. இது தற்போது இந்தியாவில் மக்கள் அனுபவித்து வரும் கொடும் துன்ப துயரங்களை மேலும் துரிதப்படுத்தி காவி – கார்ப்பரேட் கும்பலின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதை நோக்கிச் செல்லும்.

அரசுப் பொதுத்துறைகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதை அடுத்து அரசுத் துறைகளே கார்ப்பரேட்டுக்கு ஒப்படைப்பது என்பது நாட்டை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

இது நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகள் உழைக்கும் மக்கள் என அனைவருக்கும் பாசிச கும்பல் விடும் எச்சரிக்கையாகும். இதை உணர்ந்து களத்தில் இறங்கி முறியடிப்பதை நோக்கி முன்னேறுவோம்.


தோழர்.ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க