ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பட்டியானி சோஹட்டா என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையை முஸ்லீம் மக்களின் மீதான கலவரமாக காவிக்கும்பல் திட்டமிட்டு மாற்றியுள்ளது. கடந்த 16-ஆம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றுவரும் முஸ்லீம் மற்றும் இந்து மதத்தை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதாகவும் அதில் முஸ்லீம் மாணவர் மற்றொருவரை கத்தியால் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சட்டத்திற்குப் புறம்பான வகையில் முஸ்லீம் மாணவர் போலீசு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய தந்தையும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தங்களுக்கான நல்வாய்ப்பாக கருதிய இந்து மதவெறி அமைப்புகள் உடனே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சங்கப் பரிவாரக் குண்டர்கள் அங்கு உள்ள கடைகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மூன்று வாகனங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. இதன் விளைவாக, அந்த நகரில் மத கலவரம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவாகியது. இதனையடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உதய்பூரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையறையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் பரவாமல் இருக்க மொபைல் மற்றும் இணைய சேவைகள் 24 மணி நேரத்துக்கு துண்டிக்கப்பட்டன.
மேலும், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசும் தன் பங்குக்கு முஸ்லீம் மாணவரின் குடும்பத்தின் மீது பாசிசத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே கைகலப்பு நடந்த அன்றே வனத்துறையினர் சட்டத்திற்கு முரணான வகையில் மாணவரின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் அவர்கள் வசிக்கும் வீடு வனத்துறையின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருவதாகக் கூறி, ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் வீட்டை விட்டு காலி செய்யுமாறு அடாவடித்தனமாக தெரிவித்திருந்தது. ஆனால் மதவெறி முற்றிப்போயுள்ள ராஜஸ்தான் மாநில பா.ஜ.க அரசு, குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகுவதற்குள் ஆகஸ்ட் 17 அன்றே வீட்டை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.
படிக்க: இஸ்ரேலின் தாக்குதலால் காசாவின் நகரங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள் | புகைப்படக் கட்டுரை
கத்தியால் தாக்கியதாக கூறப்படும் மாணவர் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்படுகிறது. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா ஆகிய சட்டங்களில் உள்ள சிறார் சட்டங்களின் அடிப்படையில் மாநில அதிகாரிகள் செயல்படவில்லை என்று கூறுகிறது, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL).
இவ்வாறு, இந்துராஷ்டிரத்தை வேகமாக கட்டியமைக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு பிரச்சினைகளைக் கூட ஊதிப் பெருக்கி முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களாக மாற்றுவது; முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை நிர்க்கதியாக்குவது; அதன்மூலம் முஸ்லீம் மக்களை எந்த உரிமைகளும் அற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவது என்ற பாசிச நோக்கத்துடன் காவிக்கும்பல் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற காவிகள் ஆளும் பசுவளைய மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீது பாசிச தாக்குதல்கள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.
மேலும், மோடி மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்றுவரும் முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான் உதய்பூர் சம்பவத்தையும் நாம் பார்க்க வேண்டும். அண்மையில் கூட, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, காவிக்குண்டர்கள் இங்குள்ள முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே சிறுபான்மை மக்கள் மீதான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் குண்டர்களின் இத்தாக்குதல்களை முறியடித்து அவர்களை வீழ்த்த வேண்டும். மேலும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பல் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் எதிரி அல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரி என்பதால் அனைத்து ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.
அகிலன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube