ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர்கள் நரசிம்மன் – மகேஸ்வரி. இவர்களின் மகன் கதிர்வேல்(18). இவர் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் டிப்ளமோ பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
பட்டியல் சாதியைச் சார்ந்த இவர், அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சார்ந்த சுரேஷ் என்பவரின் மகள் நிவேதாவை காதலித்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பெண் வீட்டார், சில மாதங்களுக்கு முன்பே கதிர்வேலின் அம்மாவிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 19 அன்று இரவு நிவேதாவின் தொலைப்பேசி அழைப்பால் வெளியில் சென்ற கதிர்வேல் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் 20 மாலை அதேபகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கதிர்வேல் அணிந்திருந்த செருப்பு மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 30 அடி ஆழக் கிணற்றில் இருந்து கதிர்வேலை சடலமாக மீட்டனர். பின்னர் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கதிர்வேலின் சாவுக்கு நிவேதாவின் தந்தை தான் காரணம் என்று கதிர்வேலின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நியாயம் கேட்டு சென்று உள்ளனர்.
அப்போது நிவேதாவின் தந்தை சுரேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கதிர்வேலின் உறவினர்களை நோக்கி வீசி உள்ளார். இதில் கதிர்வேல் தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் (24), வல்லரசு (24) ஆகிய இரண்டு வாலிபர்களின் தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படிக்க: தர்மபுரி முகமது ஆசிக் ஆணவப் படுகொலை | கள அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ஏ.டி.எஸ்.பி குமார், அரக்கோணம் டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் பெருங்காஞ்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கதிர்வேலின் சாவிற்கு காரணமான சுரேஷை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் – வாலாஜா செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள், இந்தியக் குடியரசு கட்சி உட்பட பல ஜனநாயக சக்திகள் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதிய ஆணவப் படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
சிவா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube