சோளிங்கர் அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை

24.08.2024

கண்டன அறிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் வசித்துவரும் நரசிம்மன், மகேஸ்வரி ஆகியோரின் மகன் கதிர், 19.08.2024 அன்று இரவு அதே ஊரைச் சேர்ந்த யாதவர் சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் அதிகாரம் இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

பெருங்காஞ்சி கிராமத்தைச் சார்ந்த டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துவரும் தலித் சமூகத்தைச் சார்ந்த கதிர் என்ற இளைஞனும், அதே ஊரில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த சுரேஷ் என்பவரின் மகள் நிவேதாவும் காதலித்து வந்துள்ளார்கள்.

இந்த விவகாரம் நிவேதாவின் தந்தை சுரேஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த சுரேஷ், கதிரை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி, “நீ இதே எண்ணத்தோடு இருந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவேன்” என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகும், அவர்களின் விடலைப் பருவ காதல் தொடர்ந்துள்ளது.

மகளின் கல்வி முக்கியம் என்று நினைத்தாலோ அல்லது அவர்களது காதலை விரும்பவில்லை என்றாலும் கூட, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பிரச்சனையை பேசி தீர்த்திருக்க வேண்டும். ஆனால் தன் மகள் ஒரு தலித் இளைஞனை காதலிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி, கதிரை ஆணவக் கொலை செய்ய தூண்டியுள்ளது.


படிக்க: தர்மபுரி முகமது ஆசிக் ஆணவப் படுகொலை | கள அறிக்கை


கதிரை நிவேதா அழைப்பதாகக் கூறி போன் செய்து, திட்டமிட்டு வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் குடும்பமாக இணைந்து அவரைக் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கி, கை கால்களை முறித்து பாறாங்கல்லை கட்டி தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுள்ளார்கள், சாதி வெறியர்கள்.

ஒருநாள் முழுக்க கதிரை காணாத பெற்றோரும் உறவினர்களும் அவரைத் தேடி அலைந்துள்ளனர். மறுநாள் (20.08.2024) சந்தேகத்தின் பெயரில் குறிப்பிட்ட அந்தக் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, கதிரின் ஒரு கால் செருப்பு இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கிணற்றுக்குள் கிடந்த கதிர் சடலத்தை போலீஸ், அந்த ஊர் இளைஞர்கள் உதவியுடன் மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சுரேஷும் அவருடைய குடும்பத்தாரும்தான் கதிரை கொன்றார்கள் என்ற தகவல் அறிந்த கதிரின் குடும்பத்தினர் மற்றும் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கதிருக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க, சுரேஷின் வீட்டிற்கு சென்றபோது, சுரேஷ் மற்றும் அவருடன் இருந்த ஆதிக்க சாதி வெறியர்கள் அந்த இளைஞர்களையும் அறிவாளால் தாக்கியுள்ளார்கள். பலத்த வெட்டுக்காயம் அடைந்த மூன்று இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரறிய “கொலையாளி” என அம்பலப்பட்டபோதும், தட்டிக் கேட்கச் சென்ற இளைஞர்களை அரிவாள்களால் வெட்டிய சம்பவம் கண் முன்னே சாட்சியங்களாக இருந்தபோதும், கதிர் படுகொலையை ஆணவக் கொள்கையாகக் கருதி, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்ய மறுக்கிறது போலீசு. கதிர் உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் உறவினர்களும் போராடி வருகின்றனர்.

“இது பெரியார் பூமி” என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இந்த தமிழ்நாட்டில்தான், தலித் மக்கள் மீதான ஆணவக்கொலைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதை காண்கிறோம். கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு நாம் சும்மா இருந்தால், தொடரும் அநீதிகளை தடுக்க முடியாது. நாலாபுரங்களிலும் பற்றி பரவி வரும் “சாதிவெறி தீ”க்கு எதிராக ஜனநாயக சக்திகள் களமிறங்கி போராடாவிட்டால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்று அஞ்சுகிறோம்.

ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்பும் வேங்கை வயலில் மலத்தை கலந்த மிருகங்கள், இன்றுவரை கைது செய்யப்படவில்லை. கூடுதல் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்கிறது சிபிசிஐடி.  இன்னொரு பக்கம் சாதி வெறியர்களோ, திரௌபதி, கவுண்டம்பாளையம் போன்ற சாதி வெறியை தூண்டும் திரைப்படங்களை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

தமிழ்நாடு போலீசே, கதிரை கொன்ற சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

தமிழ்நாடு அரசே

ஆதிக்கச் சாதி சங்கங்களை தடைச் செய்!

சாதி வெறியை தூண்டும் திரைப்படங்களை தடை செய்!

சாதிவெறி நச்சுக் கருத்துகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசும், ஊக்குவிக்கும் அனைவரையும் கைது செய்!

சாதிவெறி நிகழ்வுகளுக்கு எதிராக போராடுவதோடு, சாதிவெறி-மதவெறி எதிர்ப்பு ஜனநாயகக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம்!


தோழமையுடன்
அமிர்தா,
சென்னை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
91768 01656

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க