நீதியை எதிர்நோக்கி ஆசிக் குடும்பத்தினர்

"இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிதி உதவியும் செய்யவில்லை, வழக்கும் தீவிரமான முறையில் விசாரிக்கப்படவுமில்லை. தற்போது என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்கின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தினர்.

டந்த ஜூலை 26-ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வி.ஜெட்டி அள்ளி பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றிவந்த முகம்மது ஆஷிக் என்ற இஸ்லாமிய இளைஞர் பறையர் சாதியைச் சார்ந்த பெண்ணைக் காதலித்ததற்காக பெண்ணின் குடும்பத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சார்ந்த முகமது ஆசிக் என்ற இஸ்லாமிய இளைஞர் சேலம் மாவட்டம் ஓமலூர் செட்டிப்பட்டியை சார்ந்த சித்த மருத்துவரான தமிழரசி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணை இரண்டு வருடங்களுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளார்.

தமிழரசி முகமது ஆசிக்கின் அப்பா ஜாவித்திடம் தொடர்பு கொண்டு “எங்கள் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் திருமணத்தைப் பற்றிப் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். அதன்பிறகு முகமது ஆசிக்கின் அப்பா ஜாவித், தமிழரசியின் பெற்றோரிடம் பேசத் தொடர்பு கொண்ட பொழுது தமிழரசியின் சித்தப்பா பேசியுள்ளார். தமிழரசியின் சித்தப்பா “தமிழரசியின் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை; நான்தான் பேசுவேன்” எனக் கூறி “பொருளாதார ரீதியிலும், மத ரீதியிலும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது” என்று கூறியுள்ளார். இன்னும் கீழ்த்தரமாக நாக்கூசும் வார்த்தையிலும் திட்டி உள்ளார்.

அதன் பிறகு தமிழரசி மறைமுகமாக முகம்மது ஆசிக்கின் பெற்றோரை தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த சம்பவம் தமிழரசியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்த பிறகு தமிழரசி தங்கள் குடும்பத்தாரிடம் “என் உயிரை போனாலும் ஆசிக்கை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தமிழரசியின் சகோதரர்கள் சினிமா பாணியில் “அவன் உயிரோடு இருக்கும் வரையில்தான் நீ இப்படி பேசுவ; அவனை கொன்னுட்டால் என்ன செய்வ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்று கூறியுள்ளனர். ஜூலை 26 அன்று இரவு 9:30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்த முகமது ஆசிக்கை தமிழரசியின் இரட்டை சகோதரர்கள் ஜெனரஞ்சன், ஜன அம்சப்ரியன், மற்றும் அவர்களது நண்பர்களான கௌதம், பரிதி வலவன் ஆகிய நான்கு பேரும் கூட்டுச் சேர்ந்து முகமது ஆசிக்கை ஹோட்டலில் சூழ்ந்து கொண்டு கழுத்து, மார்பு, இடுப்பு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியும், இரும்பு ராடை கொண்டு தாக்கியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தை கேட்ட ஆசிக்கின் அம்மா ரீனா இதுவரை சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே உள்ளார்.


படிக்க: முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?


இந்தப் படுகொலை நடந்த பிறகு பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் முகமது ஆசிக்கின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால், தற்போது வரை எந்த அரசியல் கட்சியும் போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ நடத்தவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காகவே நேரில் சென்று சந்தித்து விட்டு வந்துள்ளனர் என்று மக்கள் கருதுகின்றனர்.

சம்பவம் நடந்து 25 நாட்களுக்கு மேலாகியும் தமிழ்நாடு அரசோ மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிக்கின் குடும்பத்தினர்.


படிக்க: இஸ்‌ரேலின் தாக்குதலால் காசாவின் நகரங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள் | புகைப்படக் கட்டுரை


“இதுவரை மாவட்ட நிர்வாகம் எங்களை தொடர்பு கொண்டு பேசவே இல்லை; நாங்கள் தான் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த வழக்கை மிகவும் மெத்தனமான முறையில் போலீசு கையாண்டு வருகிறது. இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறுகிறார் ஆஷிக்கின் அப்பா ஜாவித்.

“எந்தக் குற்றமும் செய்யாமல் எங்களது மகனை பிரிந்து தவிக்கிறோம். எங்களுக்கு எந்த விதமான சட்ட ரீதியான உதவியோ, நிதி உதவியோ அரசு செய்யவில்லையே ஏன்? அதே ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கொலை செய்திருந்தால் சும்மா இருந்திருக்குமா தமிழ்நாடு? போர்க்களமாக மாறி இருக்காதா? முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் நாங்கள் பழிவாங்கப்படுகிறோமா? என்று கேள்வி எழுகிறது. முஸ்லிம்கள் ஓட்டு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். எங்கள் உயிரைப் பற்றி எந்த அரசுக்கும் கவலை இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்கிறார் ஆசிக்கின் சித்தப்பா வாகித்.

இந்த ஆணவக் கொலையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, சி.பி.எம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அரசு விழாவில் தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களை 16/08/2024 ஆசிக்கின் குடும்பத்தார் நேரில் சென்று சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் அந்த மனுவை ஒப்படைத்துள்ளார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய அனைவரிடமும் நேரில் சென்று சந்தித்து மனு கொடுத்துள்ளனர். “இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிதி உதவியும் செய்யவில்லை, வழக்கும் தீவிரமான முறையில் விசாரிக்கப்படவுமில்லை. தற்போது என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்கின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தினர்.

இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். ஆசிக்கை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.


களச்செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க