கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, வடசென்னை மணலியில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான எம்.எஃப்.எல். உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்துள்ளது. அப்பகுதியில் காற்று பலமாக வீசியதால் அம்மோனியா வாயுவின் தாக்கம், மணலி, மாத்தூர், எம்.எம்.டி.ஏ காலனி, சின்னசேக்காடு, பெரியசேக்காடு பகுதி வரை இருந்ததுள்ளது. அதன் விளைவாக அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
அம்மோனியா வாயு கசிவு குறித்து பொதுமக்கள் உரத் தொழிற்சாலைக்குத் தகவல் தெரிவித்தபோதிலும் ஆலையிலிருந்து வாயு கசிவு நின்றபாடில்லை. ஆகவே வாயு கசிவு குறித்து பொதுமக்கள் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காலை 11 மணிவரை சுமார் இரண்டு மணி நேரம் வாயு நெடி இருந்தது. இந்த வாயுக் கசிவு குறித்து கருத்து தெரிவித்த மாசுக் கட்டுப்பாடு அதிகாரி, “அம்மோனியா கசிவு குறித்து மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் உடனடியாக உரத்தொழிற்சாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாயு கசிவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்டர் மூலம் வாயு கசிவு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
காற்றில் கலந்திருக்கும் அம்மோனியா வாயுவின் அளவு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து அம்மோனியா வாயு வெளியேறும் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து மனித உடலில் அதன் பாதிப்பின் தீவிரத் தன்மை இருக்கும். காற்றில் குறைந்த செறிவில் உள்ள அம்மோனியா வாயுவைச் சுவாசிக்கும்போது இருமல் மற்றும் மூக்கு, தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும். காற்றில் அதிக செறிவில் உள்ள அம்மோனியா வாயுவைச் சுவாசிக்கும்போது கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயில் உடனடியாக எரிச்சல் ஏற்படும். அதிக நேரம் சுவாசிக்கும் போது, சில சமயம் குருட்டுத்தன்மை, நுரையீரல் பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.
இத்தகைய பேராபத்து மிகுந்த அம்மோனியா வாயு வடசென்னையின் எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதிகளில் உள்ள நாசகர தொழிற்சாலைகளில் இருந்து கசிவது என்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. வடசென்னையில் அம்மோனியா வாயு கசிவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
படிக்க: முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடு!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூட, வடசென்னையில் உள்ள எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள முருகப்பா கோரமண்டல் இண்டர்நேஷனல் உரத்தொழிற்சாலையில் நச்சுத்தன்மை கொண்ட அம்மோனியா வாயு கசிந்தது. அம்மோனியா கசிவினால் எண்ணூர் தாளங்குப்பம், பெரியகுப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் திமுக அரசானது வடசென்னை மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அப்பகுதிகளில் உள்ள தனியார்-கார்ப்பரேட் மற்றும் ஒன்றிய அரசின் நாசகார தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முருகப்பா கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மீனவ மக்கள் 100 நாட்களுக்கும் மேலாகப் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும் தி.மு.க. அரசானது, மீனவ மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. கோரமண்டல் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேலைகளிலேயே ஈடுபட்டது. அதற்கேற்ப கோரமண்டல் ஆலையும் கடந்த மே 21 ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சில பெயரளவிலான நிபந்தனைகளுடன் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டது.
அதேபோல், போராடும் மக்களை வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் கோரமண்டல் ஆலையுடன் இணைந்து திமுக அரசும் செயல்பட்டது குறித்து “தி நியூஸ் மினிட்” செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நபர் ஒருவருக்கு ₹10,000 வரை கொடுத்து “அந்த ஆலையை ஆதரிக்கிறோம்” என்ற வகையில் அவர்களிடம் கையெழுத்தைப் பெற்றுள்ளனர்.
மேலும், வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகள் நச்சுத்தன்மை வாய்ந்த சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO₂) போன்ற வாயுக்களைக் காற்றில் வெளியிடுவது பற்றியும், ஆலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் பக்கிங்காம் கால்வாயில் கொட்டுவதைப் பற்றியும் தி.மு.க அரசு கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியே வாழத் தகுதியற்றதாக மாறி வருகிறது. மக்களும் தங்களுக்கு எப்பொழுது என்ன நேருமோ என்ற அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு தி.மு.க. அரசானது அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தன்னை நம்பி வாக்களித்த மீனவ மக்களின் முதுகில் குத்துகிறது.
அகிலன்
செய்தி ஆதரம்: தினகரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram