29.12.2023

அம்மோனியா வாயு கசிவு – பொதுமக்கள் பாதிப்பு!

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை
நிரந்தரமாக இழுத்து மூடு!

பத்திரிகைச் செய்தி

டந்த சில தினங்களுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் உள்ள முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து குழாய் வழியாக அம்மோனியா வாயு அனுப்பும்போது கசிவு ஏற்பட்டது. இதனால் எண்ணூர் தாளங்குப்பம், பெரியகுப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் ஆகிய கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு 11:45 மணி அளவில் வேலை முடிந்து சென்று கொண்டிருந்த தொழிலாளிகள், வாயு கசிவை கண்டறிந்து உடனடியாக ஊர் மக்களிடம் தெரிவித்ததன் காரணமாக உயிர் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்பிரச்சனைக்கு காரணமான முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போராடியதன் விளைவாக, ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி சுற்று வட்டார கிராம மக்கள் அந்த ஆலையின் வாசலிலேயே தொடர்ந்து சில நாட்களாக போராடி வருகிறார்கள். இப்போது வரை அரசு நிர்வாக அதிகாரிகள் யாரும் தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பொழுது வரை அந்த நிர்வாகத்தின் சார்பாக எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. அம்மோனியா வாயு கசிவின் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்கள் இருந்து கரை ஒதுங்குகின்றன.

சென்னை பெருமழையின் போது சிபிசிஎல் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட எண்ணைக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டதும் இப்பகுதி மக்கள் தான். வடசென்னை முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் பல லட்சக்கணக்கான கோடிகளை லாபமாக சுரண்டுகின்றன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமையும் தொழிலாளிகளின் ஜனநாயக உரிமைகளை பறித்ததும் சுற்றுச்சூழல் சீரழித்ததுமே இந்த லாபத்திற்கு காரணம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் கடலும் பாழாக்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக மக்களின் உயிரும் இயற்கையும் திட்டமிட்டு பாழாக்கப்படுகின்றன. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நாம் கட்டியமைக்கும்போதே இப்படிப்பட்ட நாசகர கார்ப்பரேட் நிறுவனங்களை மூட முடியும்.

எண்ணூர் மக்களுடைய போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும். மேலும் அம்மோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆலையிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க