காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இது குறித்த அறிவிப்பு வெளியான போதிலிருந்து அந்த பகுதியைச் சேர்ந்த ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் பகுதி மக்கள் 767-ஆவது நாட்களாகத் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராடிக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வை மதிக்காமல் அராஜகமான முறையில், ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. இதற்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவோடு இரவாகத் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். அப்படி எதாவது நடந்தால், கிராம மக்களின் உயிரிழப்புக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அன்றிரவு சாலை மறியலில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் 125 பேர் மீது போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள், முதியவர்கள் என எந்த பாராபட்சமும் பார்க்காமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.
இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து போராடி வரும் இக்கிராம மக்களின் ஆதங்கங்களும் குமுறல்களும் சமூக நீதி பேசும் ‘திராவிட மாடல்’ திமுக அரசின் காதுகளில் விழவே இல்லை. பரந்தூர் மக்கள் தங்களது நிலம் பறிக்கப்பட்டால் பஞ்சம் பிழைப்பதற்கு ஆந்திரா செல்வதாகக் கூறியும் கூட திமுக அரசு அசைந்து கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு கார்ப்பரேட் சேவை செய்வதில் தீர்மானகரமாய் உள்ளது திமுக அரசு. இந்த வர்க்கப் பாசத்தால் தான் மத்திய பா.ஜ.க அரசுடன் இணைந்து விமான நிலையம் அமைக்கத் தீவிரம் காட்டி வருகிறது திமுக அரசு.
அதேபோல், தன்னை ஒரு விவசாயி என்றும் விவசாயிகளின் நண்பர் என்றும் அழைத்துக் கொள்ளும் அதிமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பரந்தூர் கிராமத்திற்கு ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை. பரந்தூர் விமான நிலையத்தைப் பொறுத்தவரை எதிர் எதிர் கட்சிகளாக இருந்தாலும் கார்ப்பரேட் நலனுக்குச் சேவை செய்வதில் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.
தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் துணைநிற்க வேண்டும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram