10.09.2024
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்
திரு. வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி!
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய எமது அமைப்புகளுக்கு பல்வேறு நெருக்கடியான காலங்களில் ஆதரவளித்தும் செயல்பட்டும் வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு வெள்ளையன் அவர்களுக்கு எமது அமைப்புகளின் சார்பில் அஞ்சலியை செலுத்துகிறோம்.
வணிகர் சங்கங்களின் பேரவை மூலம் பல்வேறு சிறு தொழில் வியாபாரிகளுக்கு அந்நிய மூலதன எதிர்ப்பு, கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பு, தனியார்மய – தாராளமய- உலகமய எதிர்ப்பு அரசியலை கற்றுக் கொடுப்பதில் முனைப்பாக செயல்பட்டவர்.
குறிப்பாக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது அன்றைய மன்மோகன்சிங் தலைமையிலான அரசு. இதனை எதிர்த்து ரிலையன்ஸ் பிரஷ் சங்கிலித் தொடர் கடையினை முற்றுகையிட்டு போராடிய போது அப்போராட்டத்தில் ஊக்கமாக அந்த கலந்து கொண்டார்.
எமது மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் மூலம் தான் தனியார்மய – தாராளமய – உலகமய எதிர்ப்பு அரசியலை கற்றுக் கொண்டதாக வெளிப்படையாக பல்வேறு மேடைகளில் பேசியதுடன் வணிகர் சங்க கூட்டங்களில் வணிகர்களுக்கு சுதேசி உணர்வை ஊட்டும் வகையில் அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பேசுவார். இது குறித்து விளக்கி எழுதப்பட்ட “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு: வாழ்வா – சாவா போராடு” என்ற வெளியீட்டை வணிகர்களுக்குப் பல நூறு வாங்கி கொடுத்ததுடன் அதனை படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
படிக்க: கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
2015 ஆம் ஆண்டு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது பல்வேறு தோழர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் துணிச்சலாகவும் போர்க்குணமாகவும் எமது போராட்டங்களில் பங்கேற்று உடன் நின்றவர்.
பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் நேரடியாக ஈடுபட்டவர்.
சுதேசி பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்நிய மூலதனம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர். ஏகாதிபத்திய அடிமை பண்பாட்டைக் குறிக்கும் கோக் – பெப்சி போன்ற குளிர் பாணங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான குளிர்பானங்கள், மற்றும் இளநீர் அருந்த வேண்டும் என்பதை ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கினார்.
தன் வாழ்க்கை முழுவதையும் சிறு தொழில் வியாபாரிகளுக்காகவே அர்ப்பணித்தவர். தனது இறுதி நாட்களில் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்தும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்று வணிகர்களைத் திரட்டி போராடினார்.
இப்படி ஓய்வு உறக்கம் இன்றி உழைத்த திரு வெள்ளையன் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக மரணமடைந்து உள்ளார்.
அவருடைய குடும்பத்தாருக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் எமது அமைப்புகளின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சில்லறை வணிகத்தையும், நாட்டையும் சூறையாடும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்த்துப் போராடுவதே திரு வெள்ளையன் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram