புதுடெல்லி: குந்த குடிசை இல்லாதோரின் தலைநகரம்

ஏழை மக்களின் குடிசைப்புறக் குடியிருப்புகள் பலவற்றை கார்ப்பரேட் தேவைகளுக்காக அரசே இடித்துத்தள்ளி அகற்றிவிட்டு அம்மக்களுக்கு மாற்று குடியிருப்புக்கு வழி சொல்லாமல் நிற்கதியாக விரட்டிவிட்டுள்ளது.

ஷாரி அதிகார் மஞ்ச்: பெகரான் கே சாத்” (Shahri Adhikar Manch: Begharon Ke Saath; ஆங்கிலத்தில்: Urban Rights Forum: With the Homeless) என்ற தன்னார்வ அமைப்பு டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த அமைப்பு டெல்லியில் வீடில்லாமல் பொதுவெளியில் உறங்கும் மக்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி இருக்கிறது.

அந்த கணக்கெடுப்பானது, உழைக்கும் மக்களின் குடும்பங்கள், கணவனை இழந்து தனியாக உள்ள பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள் என சற்றேக்குறைய 3 லட்சம் பேர் புதுடெல்லி நகர்ப்புறப் பகுதிகளில் ஒண்டிப் படுக்க வீடில்லாமல் பொதுவெளியில் வாழ்க்கை நடத்துகின்றனர் என்ற அவலம் நிறைந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி முதல் 31 வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 5:30 மணி வரை இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் மக்கள் கணக்கெடுப்பு முறையில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு 300 தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்த நகரமும் ஐந்து பெரும் பகுதிகளாகவும் 33 துணைப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு அதில் 657 இடங்கள் முக்கியமானவை என வரையறுக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறு தெருக்கள், நடைபாதைகள், மேம்பாலங்களின் மேல்பகுதி மற்றும் மேம்பாலத்தின் அடிவாரப்பகுதிகள், தரைப்பாலங்களின் நடைபாதைகள், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் சாலைகளைக் கடப்பதற்கான சுரங்கப் பாதைகள், மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள், “தார்ப்பாலின்” (Tarpaulin) மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்களை கூரையாகக் கொண்ட சிறு தற்காலிக கூடாரங்கள் மற்றும் குடிசைகள் என்று விரிவான அளவில் வகைப்படுத்தி கொண்டு இந்த கணக்கெடுப்புகள் மிகத்துல்லியமாக எடுக்கப்பட்டன.

டெல்லி நகரத்தின் கணிசமான பகுதிகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட நகரம் முழுவதும் இக்கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. மழை காரணமாகவும் மக்கள் உறங்கும் பல உட்தெருக்களுக்குள் இரவு நேரங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதினாலும் வேறு சில இடர்பாடுகளினாலும் முழுமையாக எல்லா பகுதிகளிலும் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க இயலவில்லை.


படிக்க: தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்


மேலும், இதுபோன்ற வீடற்றோர் இரவு முழுவதும் பல பெரிய மால்கள் மற்றும் விற்பனையகங்களில் வேலைகளில் ஈடுபடுகின்றனர். விடியும் வரை வேலை இடங்களில் கழித்துவிட்டு பகல் நேரத்தில் கூரையில்லாமல் பொழுதை கழிக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை கண்டறியவே முடியவில்லை என்கின்றனர் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.

இவ்வகையில், இறுதி முடிவாக 1,54,365 பேர் வீடில்லாதவர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு நிறுவனமான டெல்லி நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு கழகம் (DUSIB – Delhi Urban Shelter Improvement Board) அமைத்துள்ள 190 தங்குமிடங்களில் இருக்கும் 5,108 பேரும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வமைப்பினர் விஞ்ஞான முறைப்படியான தமது வேலைமுறையிலிருந்து பெற்ற அனுபவத்திலிருந்து, ஒரு நபர் கணக்கில் வந்தால் இன்னொருவர் வரவில்லை என்ற முறையில் அனுமானித்து இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 3 லட்சம் பேர் என்று அறிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 2003-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குடியிருப்புக்கான கண்காணிப்பு குழு (SLSMC – State Level Shelter Monitoring Committee) இந்தக் கணக்கெடுப்பை அங்கீகரித்து வழிகாட்டி இயக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வீடற்றோர் எண்ணிக்கை மூன்று லட்சம் என்பது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி டெல்லி நகர மக்கள்தொகையில் 1.6 விழுக்காடு ஆகும். இதற்கு முன்பு 2000-ஆம் ஆண்டில் இதே போன்றதொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆஷ்ரே அதிகார் அபியான் (AAA) என்கிற அமைப்பு நடத்திய அந்தக் கணக்கெடுப்பில் வீடில்லாதோர் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று கூறப்பட்டிருந்தது. அடுத்து 2001-ஆம் ஆண்டு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த வீடற்றோர் எண்ணிக்கை 24, 966. பிறகு 2008-இல் சில சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 1.5 இலட்சம். இறுதியாக, 2011-இல் அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,724 என்று இருந்தது. இப்பொழுது மூன்று லட்சம் என்று அதிர்ச்சிதரத்தக்க வகையில் அதிகரித்து இருக்கின்றது.

ஏழை மக்களின் குடிசைப்புறக் குடியிருப்புகள் பலவற்றை கார்ப்பரேட் தேவைகளுக்காக அரசே இடித்துத்தள்ளி அகற்றிவிட்டு அம்மக்களுக்கு மாற்று குடியிருப்புக்கு வழி சொல்லாமல் நிற்கதியாக விரட்டிவிட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் அரசின் திட்டங்கள் யாவும் கைவிடப்பட்டன. மேலும் வீடற்றோர் பிரச்சினைகளில் அரசு தொடர்ந்து பாராமுகமாகவே இருந்து வருகிறது.


படிக்க: புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு | அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம்


டெல்லியின் ரகுபிர் நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், “நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் வசித்து வருகிறோம். அரசு அதிகாரிகளால் எங்களது தற்காலிக குடியிருப்புகள் அகற்றப்பட்டன. அடுத்தடுத்து சென்ற இடங்களிலும் அவ்வாறே மீண்டும் அகற்றப்பட்டன. இறுதியாகத்தான் இந்த வெட்டவெளிக்கு வந்திருக்கிறோம். 3000 முதல் 5000 வரை வாடகை கொடுத்து வீடு எடுத்து தங்க எங்களுக்கு வருமானம் இல்லை. நிரந்தர வேலைவாய்ப்புகளும் இல்லை” என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

அதிக எண்ணிக்கையில் வீடு இல்லாதவர்கள் தங்கி இருக்கும் பகுதிகள் என்றால் அவை சாந்தினி சவுக், டெல்லி கேட், கமலா மார்க்கெட், ஆசாத் பூர் மண்டி, யமுனா புஷ்ட்டா, காஜிப்பூர் பேப்பர் மார்க்கெட், காஜிப்பூர் மண்டி என பல இடங்களை குறிப்பிடுகின்றனர். இங்கெல்லாம் மக்கள் குவிந்து கிடக்க காரணம் அங்குதான் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. வேலை இடங்களுக்கு அருகிலேயே குடியிருந்தால்தான் வேலை இருக்கும் நேரத்தில் அல்லது கூப்பிடும் நேரத்தில் வேலைக்குச் செல்லவும் வேலை முடிந்து வீடு வந்து சேரவும் சரியாக இருக்கும் என்கின்றனர் மக்கள். இந்நகரையே கட்டி எழுப்பிய உழைக்கும் மக்கள் இப்படி கூரையற்றோராய் இருப்பது நாட்டிற்கே அவமானம் என்றால் மிகை இல்லை.

எனவே அரசு இந்த விவரங்களை கருத்தில் கொண்டு இனிமேல் மாற்றுக் குடியிருப்பு வழங்காமல் இருக்கின்ற குடியிருப்புகளை அகற்றக் கூடாது; டெல்லியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள பல நூறு நகரங்களில் நிலைமை இதுதான்; இவற்றை மாற்றி அமைக்க ஒன்றிய மாநில அரசுகள் ஒருமித்து செயல்பட வேண்டும் என்று இந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர், அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துமிருக்கின்றனர்.

ஆனால் இந்த நிலைமைகள் அரசு அறியாதவையா? விளைவுகளைத் தெரிந்தேதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு சமயங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை இப்படி வீடற்றவர்களாக வெளியேற்றி இருக்கிறது அரசு. சென்னையில் வீடு கட்டித் தருகிறேன் என்று சொல்லி வேலையிடங்களில் இருந்து 30 கிலோமீட்டர் வெளியே விரட்டியடிக்கும் அரசுக்கு, அன்றாடம் வேலைக்கு சென்றுவரும் சாதாரண கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரியாதா? தெரிந்துதான் செய்கின்றன என்பதே உண்மை.

ஒன்றிய மாநில அரசுகள் யாவுமே கார்ப்பரேட் கோரிக்கைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றன. மக்கள் வீடற்றவராய் நிலமற்றோராய் உரிமைகளற்றோராய் இருப்பது அரசு அறிந்திருப்பதுதான். அரசு இப்படி இருப்பதை மக்கள்தான் உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே, கார்ப்பரேட் நல அரசுகளுக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.

(Countercurrents இணையத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க