வெளியுறவுத் துறை: தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியமாம்!

வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விரும்பத்தக்க தகுதி (Desirable Qualification) என்ற பெயரில், ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறையின் தமிழ் ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பில் விருப்பத் தகுதியாக (Desirable Qualification) ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, செப்டம்பர் 15 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தை இணையதளத்திலும் பதிவேற்றியிருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Cultural Relations – ICCR).

தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களை ஐ.சி.சி.ஆர் இணையதளத்தில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்து சேரும் விண்ணப்பங்கள் கவுன்சிலால் பரிசீலிக்கப்படும். தேர்வு செய்து பட்டியலிப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஐ.சி.சி.ஆர்-ரால் தேர்வு செய்யப்படுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இது சம்பந்தமாக யாரும் கேள்வி எதுவும் கேட்க இயலாது; ஐ.சி.சி.ஆர்-இன் முடிவுதான் இறுதியானது. மேலும், விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 17, 2024 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை


விளம்பரத்தைப் பார்த்ததும் ஏதோ தமிழ் படித்தவர்களுக்கு, தமிழாசிரியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைத்து, விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கிப் படித்துப் பார்த்த அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட், மேலும் சொல்லிக்கொள்கிற மாதிரியொரு பள்ளி / நிறுவனத்தில் தமிழாசிரியராக ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம், தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல பயிற்சி, கணினி அறிவு… ஆகியவற்றுடன் இந்திய தத்துவம், வரலாறு, இசை பற்றியெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று தகுதிகள் (Essential Qualifications) குறிப்பிடப்பட்டுள்ளன.

விரும்பத் தக்கது (Desirable Qualification) என்ற பெயரில் அடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளதில் தான் சிக்கல் இருக்கிறது. ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் அது. கூடுதலாக வேறொரு அயல்நாட்டு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்றொரு நிபந்தனையும் உடனிருக்கிறது.

ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமே. வெளிநாட்டு வேலை என்பதால், அயல் மொழியொன்று தெரிந்திருக்க வேண்டும் என்பதில்கூட ஏதோ கொஞ்சம் பொருளிருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கான தேவை என்ன?

சற்றும் பொருத்தமின்மையால், மிகுந்த எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரத்தைத் தமிழ்நாடு அரசு தலையிட்டுத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


படிக்க: RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !


இதுபற்றித் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்ரமணியன் கூறியதாவது:

“இந்திய அரசால் போலந்து, அமெரிக்க நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைகளுக்குத் தமிழாசிரியர்களை நியமிக்க ஐ.சி.சி.ஆர் என்னும் இந்திய பண்பாட்டு உறவுக் கழகம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இவ்விளம்பரத்தில் பிற தகுதிகளுடன் இந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்பத்தக்க தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை உள்ள தமிழ்நாட்டில் தமிழையும் ஆங்கிலத்தையும் படித்து வேலைக்காகக் காத்திருக்கும் தமிழர்களுக்கு எதிரானதாகும் இவ்விளம்பரம். ஏனெனில் வெளிநாடுகளில் தமிழ் படிக்க வரும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழியாகத்தான் தமிழைக் கற்பிக்க முடியும். வெளிநாடுகளில் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்குத் தமிழ் மொழியில் புலமையும் ஆங்கிலத்தைக் கையாளக்கூடிய திறனுமே அவசியமாகும். அப்படி இருக்கும்பொழுது இந்தி வேண்டும், சமஸ்கிருதம் வேண்டும் என்று வலியுறுத்துவது தேவையற்றதாகும். எனவே, தமிழ் நாடு அரசு இதில் தலையிட்டு உடனடியாக இந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு இந்தி, சமஸ்கிருதம் வேண்டும் என்று இருப்பதை மாற்றுமாறு வலியுறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பாலசுப்ரமணியன்.

இது குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளரும் கல்வியாளருமான கண. குறிஞ்சி தெரிவிக்கிறார்: “வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிராகவே மத்திய அரசு  தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள வங்கிகள், அஞ்சலகங்கள் உள்பட பொதுத் துறை நிறுவனங்களில் எல்லாம் தமிழர்களுக்கு உரிய வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தென் ரயில்வேயில் கணக்கற்ற அளவில் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், அயல்நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கான விளம்பரத்தில் விருப்பத் தகுதி என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதம், மற்றுமோர்  அயல்நாட்டு மொழி என்று குறிப்பிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. வெளிநாடுகளில் தமிழ் கற்பிக்கச் செல்கிறவர்களுக்கு எதற்காக இந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியாக இதைக் கருத வேண்டி உள்ளது.

தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்தவர்களைத் திட்டமிட்டுத் தட்டிக்கழிக்க  நினைக்கும் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தைத் தமிழக அரசு தலையிட்டுத் திரும்பப் பெறச் செய்வதுடன், தமிழும் ஆங்கிலமுமே போதுமானதென அறிவிக்கச் செய்ய வேண்டும்” என்றார் கண. குறிஞ்சி.

இன்னமும் பரவலாக இந்த விளம்பரம் கவனம் பெறாத நிலையில் உடனடியாகத்  தமிழ்நாடு அரசு தலையிட்டு, சர்ச்சைக்குரிய இந்த நிபந்தனைகளை வெளியுறவுத் துறையின் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் விலக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் யார்.. சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் தேவை எனும்போதே யாரின் நலுனுக்காக வேலைவாய்ப்புக்கான இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதை உடனடியாக எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க