18.09.2024
பத்திரிகை செய்தி
திருபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகின்ற தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் தொழிலாளர்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையையும், தொழிலாளர் நலத்துறையின் கையாலாகாத்தனத்தையும், மாவட்ட நிர்வாகம் – போலீசு இணைந்து போராடும் தொழிலாளர்கள் மீது ஏவி விட்டுள்ள அடக்குமுறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்திய நாட்டில் பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பல இலட்சம் கோடிகளை இலாபமாக ஈட்டும் சாங்சங் நிறுவனம் இந்த நாட்டின் தொழிலாளர் சட்டங்களையோ, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வகுத்துள்ள விதிமுறைகளையோ சற்றும் மதிக்கவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் பிறப்புரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகியவற்றை மறுக்கிறது. 90% தொழிலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கத்துடன் பேச மறுப்பதுடன், தானே ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தனது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறது.
இந்த அடாவடித்தனத்தையும், சட்டவிரோத / தொழிலாளர் விரோதப் போக்கையும் கண்டித்துக் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத போக்கினை நிறுத்திக்கொள்ளாத சாம்சங் நிர்வாகம் தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என போலீசு துணை கொண்டு கொக்கரிக்கிறது.
போராட்டத்தின் முன்னோடிகளாக இருக்கும் சி.ஐ.டி.யு அமைப்பின் மாநிலச்செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களையும், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் கைது செய்து தடுப்புக்காவல் சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஆனாலும், சாம்சங் தொழிலாளர்கள் சோர்வடையாமல் தமது உரிமைகளுக்காக உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் – குறிப்பாக திருப்பெரும்புதூர், ஒரகடம் தொழிற்பூங்கா தொழிற்சங்கங்கள் – சாம்சங் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கின்றனர்.
சாம்சங் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாகவும், சாம்சங் நிர்வாகம் – போலீசு – மாவட்ட நிர்வாகம் என்று கட்டமைக்கப்பட்டுள்ள ஆளும் வர்க்க கூட்டணிக்கு எதிராகவும், பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும் பாராமுகமாக இருக்கும் ‘சமூகநீதி’ அரசின் அலட்சியத்துக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (18.09.2024) நடத்துகின்ற போராட்டங்களுக்கு எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க!
தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!
இவண்,
ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram