“மாணவி லாவண்யா தனக்குக் கொடுக்கப்பட்ட நிர்வாக வேலை காரணமாகப் படிக்க முடியாததால்தான் தற்கொலை செய்து கொண்டார். கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்பதை எங்களால் நிரூபிக்க முடியவில்லை” என்று சி.பி.ஐ தன்னுடைய குற்றப் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த 2022 ஜனவரி மாதம் 16 ஆம் தேதி விஷம் குடித்து உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவி லாவண்யாவிடம் ஜனவரி 17 ஆம் தேதி போலீசும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். அதில் கட்டாய மதமாற்றம் குறித்த எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பிறகு அவரது பெற்றோர் “எங்களுக்கு என்ன நடக்குதுன்னே தெரியல; எங்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க” என்று தெரிவித்தனர்.
அதன் பிறகுதான் அரியலூர் விஷ்வ இந்து பரிஷத் (VHP) மாவட்டச் செயலாளர் முத்துவேல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிற்கு சென்று மாணவியின் உடல்நிலை மோசமான நிலையிலிருந்த போது காணொளி ஒன்றை எடுத்துள்ளார். அதில் மாணவி பள்ளியில் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் பற்றியும், எப்படியெல்லாம் சிஸ்டர் சகாய மேரி (Sister Sagaya Mary) தன்னை கொடுமைப்படுத்தினார் என்பதையெல்லாம் மாணவி பதிவு செய்தார்.
பின்னர் மீண்டும் அரை மணி நேரம் கழித்து மாணவியிடம் சென்று மற்றொரு காணொளியைப் பதிவு செய்கிறார். அதில்தான் “ரேக்கல் மேரி (Rachael Mary) என்கிறவங்க எங்க அப்பா அம்மா கிட்ட என்னைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொன்னாங்க. அது கூட என்னைத் தொந்தரவு பண்ணுனதுக்கு காரணமாக இருக்கலாம்” என்று காணொளியில் மாணவி தெரிவித்தார்.அதை முத்துவேல் போலீசிடமோ வேறு யாரிடமோ கொடுக்கவில்லை.
படிக்க: அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி
2022 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி மாணவி இறக்கிறார். ஜனவரி 20 ஆம் தேதி முத்துவேல் எடுத்த காணொளியை அண்ணாமலை வெளியிட்டு மாணவியின் மரணம் கட்டாய மாதிமாற்றம் மூலம் தான் நடந்துள்ளது என்பதைப் பதிவு செய்கிறார். அதன் பிறகு காவிக் கும்பலால் மிகப்பெரிய பிரச்சாரமாக இது மாற்றப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற மதமாற்றம் நடைபெறுகிறது என்ற பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தார்கள்.
பா.ஜ.க தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் #JusticeForLavanya ஹேஸ்டேக்கை வைரலாக்கியது. ஊடகங்களில் விவாதப் பொருளானது. அதன் பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கட்டாய மதமாற்றம் நடந்திருக்கிறது என்று கூறி விசாரணைக்கு வந்தது.
ஆரம்பம் முதலே தமிழ்நாடு அரசும் போலீசும் மதமாற்றம் தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறின. ஆனால், போலீஸ் பொய் சொல்லிக் குற்றத்தை மூடி மறைக்கிறது என்று பி.ஜே.பி.யும் அதனுடைய சங்கப் பரிவார கும்பலும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து தேசிய பிரச்சனையாக மாற்றியது
போலீசிடமிருந்து சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று காவிக் கும்பல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அதன்படி நீதிமன்றமும் சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.
பின்னர் சி.பி.ஐ பள்ளியில் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், “பள்ளியில் சகாய மேரி என்கிற விடுதி காப்பாளர் மாணவிக்கு நிர்வாக வேலைகளை (administratiive work) கொடுத்து வந்ததால் அது மாணவியின் படிப்பிற்குப் பெரிய தொந்தரவாக இருந்துள்ளது. அடிக்கடி மாணவியைக் கண்டித்துள்ளனர். இதனால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக நினைத்து மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
படிக்க: கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
மேலும், “பள்ளியில் 677 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் 444 பேர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 219 பேர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 14 மாணவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாகக் கிட்டத்தட்ட 2010 ஆம் ஆண்டு முதல் பள்ளியில் படித்த மாணவர்களுடைய மாற்றுச் சான்றிதழ்களை (TC) கொண்டு வரச் சொல்லி முழுவதுமாக சரிபார்த்ததில் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே போன மாணவ மாணவிகள் யாரும் தங்களின் பெயரையோ, மாற்றுச் சான்றிதழில் மதத்தின் பெயரையோ மாற்றவில்லை” என்பதை உறுதி செய்தது. “மதம் மாற்றியதாக எந்த மாணவ மாணவியும் தெரிவிக்கவில்லை; கட்டாய மதமாற்றம் பள்ளியில் நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை” என்று சி.பி.ஐ தன்னுடைய விசாரணையில் தெரிவித்துள்ளது.
மேலும் அண்ணாமலை தெரிவித்தது போல் லாவண்யா மரணம் மதமாற்றத்தினால் நடைபெறவில்லை. அது பொய் என்றும் தனக்குக் கொடுக்கப்பட்ட நிர்வாக வேலைகள் காரணமாகப் படிக்க முடியாததன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக தன்னுடைய குற்றப் பத்திரிக்கையில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
எனவே கட்டாய மதமாற்றம் மூலம்தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என்று காவிக் கும்பல் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தியை மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அமைப்பான சி.பி.ஐ-ஆல் கூட நிரூபிக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்பதற்காகக் காவிக் கும்பல் திட்டமிட்டே மதக் கலவரங்களை உருவாக்க நினைக்கிறது. அதற்காகத் தான் அரியலூர் லாவண்யா தற்கொலையைத் திட்டமிட்டே சதித்தனமாக மடைமாற்றியது. மதக் கலவரத்தை உருவாக்க முயன்றதற்காகத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வி.எச்.பி மாவட்டச் செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட சங்கிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
செய்தி ஆதாரம்: நியூஸ் மினிட்
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram